Google+ Followers

Tuesday, December 13, 2011

வன்னிய மன்னன் அதியமான்

அவ்வைக்கு நெல்லிகனி அளித்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூர் என்னும் தர்மபுரியை ஆண்ட வன்னிய குல மன்னன்
அதியமான் நெடுமான் அஞ்சி.தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது.
மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று  கருதுகிறார்கள்..
. புறநானூறுஅகநானூறு,குறுந்தொகைபதிற்றுப்பத்துசிறுபாணாற்றுப்படை  ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார்,பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார்மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனைஇல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.
கல்வெட்டு :

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும்தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது.
"ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி"

என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 1 ஆம் நூற்றாண்டு சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.


அதில் உள்ள இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ" என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும். அதியமான் நெடுமான் அஞ்சியை அறியாத தமிழரும் உண்டோ? தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை தான் உண்ணாது தமிழ் மூதாட்டி ஔவைக்கு அளித்த வள்ளல் அல்லவா அவன். அதை ஒளவையே பாடுவாள். "அருமையான நெல்லிக்கனி அதை உண்டால் என்றும் இறவாமல் இருக்கலாம் என்று தெரிந்தும் அதை நீ உண்ணாமல் அச்செய்தியை எனக்கு சொல்லாமல் நான் என்றும் இறவாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு ஈந்தனையே அதியர் கோமான் அஞ்சி! நீ ஆலகாலவிடத்தை தன் மிடற்றில் அடக்கி உலகை உய்ய வைத்த சிவனைப் போல சிறப்பாயாக" என
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

எனப் பாடுகிறார். புறநானூறு இதையே சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் "நெல்லி அமிழ்து விளை தீகனி ஔவைக்கு ஈந்த அதிகன்" என்பார். இச்சிறந்த வீரனால் எவ்வளவு பாடல்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன! எவ்வளவு புலவர்கள் இவன் புகழைப்பாடி இருக்கிறார்கள்! ஔவையார், பரணர், மாமூலனார், அரிசில்கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தைமகள் நாகையார், ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன.
தகடூரைத் இன்றைய தர்மபுரியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர். அதியமான் மரபின் முன்னோர்கள் கரும்பு பயிரிடும் மரபை அறிந்து இவ்வுலகில் கரும்பு பயிரிடச் செய்தவர்கள்.

"அமரர் பேணியும் ஆவூதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின்முன்னோர்" புறம்

அதியமானைப் பற்றிய பெரும்பாலான பாடல்களை ஒளவையாரே பாடியிருக்கிறார். சுருங்கச் சொன்னால் ஔவையைக் குறிக்கும்போது அதியமான் நெடுமான் அஞ்சியின் நினைவும், அதிகனைக் கூறும்போது ஒளவையின் நினைவும் வராமல் இருக்காது. அவ்வளவுக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவரும். அவனை மழை போல் வாரி வழங்கும் வள்ளல் என்பர். ஒரு நாள் அல்ல, இரு நாட்கள் அல்ல, பல நாட்கள் பலரோடு சென்றாலும் முதல் நாள் எவ்வாறு முகமலர்ந்து வரவேற்றானோ அதே போல் வரவேற்கும் தன்மையன் அதியன். பரிசு பெறவருவோருக்கு அவனது அரணின் வாயில் எப்பொழுதும் திறந்திருக்கும் என "பரிசிலருக்கு அடையா வாயில்" என்னும் புறப்பாட்டு.

அவன் பெரிய தேர்களையும், மதம் பொருந்திய யானைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும், வேல் ஏந்தும் வீரர்களையும் படையாகக் கொண்டான். "நெடுந்தேர் அஞ்சி", "நெடு நெறி குதிரை கூர்வேல் அஞ்சி", "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி" என்றும் புகழப்படுகிறான். இப்பேர்ப்பட்டவன் அமைதியே உருவமாகவும் இருப்பான். சீறிக் கிளம்பினால் பெரும் காட்டையும் கணத்தில் சுட்டெரிக்கும் ஊழித் தீயையும் போல் இருப்பான். இவனது தூசிப் படைமுன் எதிர்த்து நிற்கமாட்டாமல் மாற்றரசர் புறமுதுகிட்டு ஓடுவர். அதியமான் புகழும் வீரமும் பலவாறும் சங்கப் பாடல்களில் போற்றப் பட்டுள்ளது. இவன் பெற்ற வெற்றிகளில் இரண்டு சிறப்பாகக் கூறப்படுகின்றன. ஏழு அரசர்களுடன் போரிட்டு ஒருமுறை இவன் பெரும் வெற்றி கண்டான். இப்பெரும் வெற்றியை பாடும் அளவுக்கு ஆற்றல் படைத்த புலவர் அன்று இல்லை. இவன் அடைந்த மற்றொரு வெற்றி மலையமான் திருமுடிக்காரியை வென்று திருக்கோயிலூரைக் கைப்பற்றியது. அதுவே இவன் பெற்ற தலையாய வெற்றியாகும். இவ்வெற்றியை பெரும்புகழ் பரணரும் பாடினார் என்று ஒவையாரே பாடுகிறார்.
"இமிழ்குரல் முரசின் எழுவரோடு முரணி சென்றமர் கடந்து நின்ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு மற்கொல் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறி நின் அரண்அடு திகிரி ஏந்திய தோளே" புறம்
இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று.

"இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புண்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாங்குலன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லை
பாடுநர்க்கு ஒன்றீகுநருமில்லை" புறம்

என்னும் ஔவையின் பாடல் யார் உள்ளத்தைத் தான் தொடாது? அவனது உடல் தீயில் இடப்பட்டது. அவனுக்கு நடுகல் எடுத்து வணங்கினர்.