டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, பிறகு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று ஆகியது.
யார் இந்த ராமாதாசு ?
ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர்.
இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.
1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.
அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.
அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார்.
அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில், தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கத்தின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின.
80களின் இறுதியில், நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல, தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போனது. அப்போது நக்சலைட் இயக்கங்களில், சித்தாந்த ரீதியாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், நக்சலைட் இயக்கத்தின் சிதைவால், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.
வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது.
கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர்.
அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன.
இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர்.
பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்பதான ஒரு சூழல் அது.
அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம்கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது. ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை. பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா, பின்னாளில் பயன்படுவார் என்று உத்தேசித்தோ என்னவோ, மருத்துவர் ராமதாசை கைது செய்ய எத்தனிக்க வில்லை.
"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.
இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு “சைபால்“ டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.
இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது.
1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.
1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாமக போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்துக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்“ என்ற ஒரு “உப்புமா“ கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது.
பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த “ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்“ மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.
பிறகு வன்னியர் இனத்தின் பாதுகாப்புக்கும் , தன கட்சியை வளர்க்க வேண்டும் . அதற்காக கூட்டணிகள் மாறி பல வெற்றிகளை கண்டது ... ஆனால் , மற்ற கட்சிகள் கூட்டணியே மாறாமல் இருபது போல, இவர்கள் மட்டும்தான் கூட்டணி மாறுவது போல, வன்னியர் அல்லாத அந்நியர்கள் பேசுகிறார்கள் ..
இதற்க்கு முடிவு கட்டும் காலம் வர
ஒன்றுபடுவோம் !