Thursday, December 1, 2011

தமிழ்மண் காத்த மாவீரன் பண்டாரவன்னியன்:


ஈழத்தின், வன்னிப்பெரு நிலத்தின் கடைசியரசன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
என்னுடலில் ஒருதுளி இரத்தமுள்ள வரை மாற்றானுக்குக் கப்பம் தரவும் மாட்டேன், மாற்றான் காலடி தமிழ்மண்ணில் படவும் விடேன் எனப் பொங்கியெழுந்து தமிழ்மண் காத்த அடங்காப்பற்றின் அரசன் பண்டாரவன்னியன் கற்சிலைமடுவில் போத்துக்கேயருடன் போராடி இறந்த நாளில், அந்த தமிழ் அரசனை நினைவு கூருவோமாக.
அடங்காப்பற்று" என்றழைக்கப்பட்ட வன்னிப் பெருநிலம் எப்பொழுதும் பகைவரிற்கு அடங்கிக் கிடந்ததில்லை. யாழ்ப்பாணத்தரசுகள் வீழ்ந்துபடும் போதெல்லாம் ஆட்சிமையம் இயல்பாகவே வன்னிப் பெருநிலத்துக்கு நகர்ந்துவிடும்; அல்லது பகை சூழ்ந்தபோதெல்லாம் தமிழரசின் உயிர்ச் சூட்டை வன்னி நிலமே ஒளித்து வைத்திருக்கும். அங்கிருந்துகொண்டு பகைவரின் மீது விடாது போர் தொடுக்கப்படும். போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் உள்ளடங்க படையெடுத்து வந்த எல்லாப் பகைவருக்கும் வன்னி நிலம் ஒரு பொல்லாத கனவாய்த்தான் முடிந்திருக்கிறது.தமிழ்நாட்டின் வீர பாண்டிய கட்டப்பொம்மன் போன்று, அன்னியர்களுக்குத் தமிழ்மண்ணில் அங்குலம் நிலமேனும் தரமறுத்து, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, இன்னொரு தமிழன காக்கைவன்னியன் காட்டிக் கொடுத்ததால், கற்சிலை மடு என்ற இடத்தில் ஆங்கிலேயருடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த வன்னிப் பெருநிலத்தின் கடைசி அரசன் பண்டாரவன்னியனாகும்.


இலங்கைக்கு வன்னியர் வருகை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இடம்பெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் சோழ மன்னன் குளக் கோட்டனே கிழக்கிலங்கையில் வன்னியர் குடியேற்றத்திற்கு காரணமாய் அமைந்தான். திருக்கோணேச்சரத்திற்குத் திருப்பணி செய்த குளக்கோட்டன், கோயில் நிலங்களைப் பராமரிக்க வன்னியர்களைக் குடியேற்றியதாக திருக்கோணேச்சர தலபுராணம் கூறுகிறது. சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி, உக்கிரசிங்கனை மணந்து பெற்ற சிங்கைநகர்(நல்லூர்) இளவரசன் மதுரை மன்னனின் மகளை மணக்க விரும்பிய இவன் தூதனுப்ப மகள் சாமதூதியுடன் அறுபது வன்னியரையும், மதுரை மன்னன் அனுப்பினான் என்றும் அவர்களே அடங்காப்பற்றை கைப்பற்றி ஆண்டதாகவும் "யாழ்ப்பாண வையாபாடல்" கூறுகின்றது.



வன்னியை ஆட்சி புரிந்த ஐந்து வன்னியர்கள் மதுரைக்குச் செல்லும்போது கப்பல் திமிங்கிலத்தால் தாக்கப்பட்டபோது அவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். அவர்களைக் காண வந்த வன்னிச்சிமார் செய்தியறிந்து தீக்குளித்து இறந்தனர். வன்னிச்சியருடன் , வீர குடும்பன்கள் என்ற குதிரை வீரர்களும் தீக்குளித்து இறந்தனர். இவர்களை வன்னி மக்கள் ""அண்ணமார்'' என்னும் தெய்வமாக வழிபடுகின்றனர். தீக்குளித்து இறந்த வன்னிச்சியர் இன்றும் ""நாச்சிமார்'' என வழிபடப்படுகின்றனர். நாச்சிமார் கோயிலடி என்ற இடம் யாழ்ப்பாண நகரத்தில் இன்றுமுண்டு.
சோழப் பேரரசர் இலங்கையைப் கைப்பற்றி ஆண்ட காலத்தில் (10 ஆம் நூற்றாண்டு வன்னிப் பிரதேசம் அவர்களுடைய பராமரிப்பில் நின்று நிலவியது. போர்த்துக்கேயர் ஆட்சி வன்னியில் நடைபெறவில்லை என்றே கொள்ளலாம். போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் சைவ ஆலயங்களை இடித்தழித்த போது, மதம் மாற மறுத்த பல யாழ்ப்பாணத்துச் சைவர்கள், தங்களுடைய கோயில் விக்கிரகங்களைத் தூக்கிக் கொண்டு பாதுகாப்புக்காக வன்னிக்கு ஓடினார்கள். ஒல்லாந்தர் வன்னித் தலைவர்கள் மீது குறிப்பிட்ட அளவு ஆதிக்கத்தைச் செலுத்த முடிந்தது. வன்னி வரலாற்றுக்கான ஆதாரங்கள் ஒல்லாந்த தேசாதிபதிகள், தளபதிகள் முதலானோரின் அறிக்கையிலிருந்து பெறக்கூடியதாக இருக்கிறது.
கண்டி மன்னனின் கைதியாகவிருந்த றொபேர்ட் நொக்ஸ் பனங்காமத்தின் அதிபதி கயிலை வன்னியன் ஒரு இராச குமாரனாகவே திகழ்ந்தான் என்கிறார். இவன் கண்டி மன்னனுடன் நட்புறவு பூண்டிருந்தான். கயிலை வன்னியன் மறைவுக்கு பின்னர் (1678) டச்சுக்கார நிர்வாகத்தின் தலையீடு இன்றிக் காசியனார் வன்னியர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் .