Monday, December 12, 2011

வன்னியக்குலத் தேவர்



தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

கவுண்டர், முதலியார், உடையார், நாயக்கர் என்பது போல் தேவர் என்பதும் பட்டப்பெயர் தானே தவிர சாதி பெயர் கிடையாது. பட்டப்பெயர் என்பது பல சாதி மக்களால் பயன்படுத்தப்படும். நாளடைவில் ஒரு சில இனத்தார் பெரும்பாலும் ஒரு பட்டப்பெயரினை அதிகம் பயன்படுத்துவதால், அந்த பட்டம் கொண்டவர் என்றாலே அந்த இனத்தவர் தான் என்று புரிந்து கொள்கிறார்கள். பட்டங்களுக்கும் குல பெயர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வன்னியர்களுக்கும் இந்த பட்டம் உண்டு. அவ்வாறு தேவர் பட்டம் கொண்ட வன்னியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காட்டகரம் பகுதியினை ஆட்சி செய்த வன்னியக்குலத் தேவர்கள்.

காட்டகரம் - கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடகிழக்கில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர்.

இச் சிற்றூர் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பாளையத்தின் தலைநகரமாக விளங்கியது.இவ்வூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த தலைவர்கள் வன்னிய குலத்தினராவர்.இவர்கள் கண்டியத் தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இந்த வன்னியர்கள் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்றபோது அப்படையில் இடம்பெற்றிருந்தவர் எனக் கருதப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக இவர்களுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் ராசராசேச்சுரம் கோவிலில் மரியாதைகள் செய்யப்படுகிறது.

இம்மரபினரை இப்பகுதியில் குடியமர்த்தியவர் ராஜேந்திர சோழர் எனக் கூறுகின்றனர். இவர்களது படைச் சேவையைப் பாராட்டி ராஜேந்திர சோழர் இவர்களுக்கு இங்கு 360 காணி(475.2 ஏக்கர்) நிலக்கொடை அளித்து அதில் வரும் வருமானத்தில் அரண்மணை அமைத்துக்கொண்டு வாழுமாறு ஆணை பிறப்பித்தார்.மேலும் ராசராசேச்சுரம் கோவிலில் கார்த்திகைத் திங்கள் நடைபெறும் சோமவார வழிபாட்டில், மூன்றாம் சோமவார வழிபாட்டை இவ் வன்னிய மரபினர் நடத்திக்கொள்ள உரிமை வழங்கினார் ராஜேந்திர சோழர்.அவ்வழிபாட்டு நாளின்போது இவர்களுக்கு பட்டு பரிவட்டம் கட்டி மரியாதை செய்வார்கள்.

இப்பகுதியில் செல்வாக்கு மிக்கோராய் வாழ்ந்த இம்மரபினரே பிற்காலத்தில் இப்பகுதி பாளையக்காரர்களாக விளங்கினர்.

இம்மரபினர் இன்றும் உள்ளனர்.இம்மரபில் திரு.கண்ணுச்சாமித் தேவர் அவர்கள் பெயரனும், திரு,தங்கச்சாமித் தேவர் அவர்களின் மகனுமாகிய திரு.நடராஜத் தேவர் அவர்கள்தான் இப்போது இம்மரபு பெரியவராக உள்ளார்.

திரு.நடராஜ தேவருக்கு 1.பெரியசாமித் தேவர்2. தமிழ் செல்வன் தேவர் 3.தனராஜ தேவர் என மூன்று மகன்கள் உள்ளனர்.

இப்போதும் கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்குறிப்பிட்டுள்ள வழிபாட்டு உரிமை இம்மரபு சார்ந்தவருக்கே உள்ளது.

வன்னிய குலத்தவர் என்றாலும் தமது பெயருக்குப் பின்னால் பட்டப்பெயர்களான தேவர்,பல்லவராயர் போன்றவற்றை போட்டுக்கொள்வதால் குழப்பம் ஏற்படுவது இயல்பே.