Saturday, December 3, 2011

ஈழத்து வன்னிமைகள் 2




(அ) தோற்றுவாய் 


யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய வட இலங்கையில் நிலைபெற்ற தமிழரசிலே பல வன்னிமைகளிருந்தன. இவற்றை வன்னிபம், வன்னியனாரென்ற பட்டங்களைப் பெற்றிருந்த குறுநில மன்னர் ஆண்டு வந்தனர். யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள வலிகாமம், தென்மராட்சி. பச்சிலைப்பள்ளி என்ற மாகாணங்களுடன் வன்னி நாட்டையும் யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்ததென்றும், மன்னாரிலிருந்து திருகோணமலை வரை அவ்வன்னி பரந்திருந்ததென்றும் குவேறோஸ் சுவாமியார் கூறுகிறார். வேறோரிடத்திலே கோட்டை அரசின் எல்லைகளை வரையறுத்தக் கூறுமிடத்து யாழ்ப்பாணப் பட்டினத்துக்குரிய வன்னிநாட்டின் எல்லை சிலாபம் வரை பரந்திருந்ததென்றும் இவர் எடுத்துரைக்கின்றார். யாழ்ப்பாண அரசின் அளவினைப் பற்றிக் குவேறோஸ் சுவாமியார் சொல்வன ஒல்லாந்த தேசாதிபதி பான் கூன்ஸ் சொல்வனவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. யாழ்ப்பாணப்பட்டினத்தைப் பற்றி அத்தேசாதிபதி மேல்வருமாறு கூறுகின்றார். இந் நான்கு மாகாணங்களும் பதின்மூன்று தீவுகளும் யாழ்ப்பாணப் பட்டினமென்று வழங்கி வந்தன@ இவற்;றோடு வன்னியும் அவ்வரசைச் சேர்ந்திருந்தது. யாழ்ப்பாண மன்னர் வன்னியைக் கைப்பற்றித் திறை பெற்று வந்தனர். அதே போலப் போத்துக்கேயரும் வன்னியரிடமிருந்து திறை பெற்றனர். மேற்கிலே கற்பிட்டியிலிருந்து பூநகரிப் பக்கமாகவுள்ள கல்முனை வரை இடங்களை அடக்கிக் கிழக்கிலே திருகோணமலை வரையும் வன்னி பரந்து காணப்படுகிறது. இவ்வரசினைப் சியங்கேரி (சங்கிலி) என்ற அரசன் நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தான்.

பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பத்து, தென்னமரவடி, மேல்பத்து, கரிக்கட்டு மூலை, செட்டி குளம் பத்த என்ற வன்னிகள் தமிழரசர் காலத்திலே யாழ்ப்பாணப் பட்டினத்திற் சிறப்பிடம் பெற்றிருந்தன. ஆரியச்சக்கரவர்த்தி பாண்டி நாட்டிலிருந்து படையெடுத்து வந்து யாழ்ப்பாணத்திலே ஆதிக்கம் பெற்ற காலத்தில் அவனோடு வந்த படைத் தலைவர்கள் பலர் வன்னியுள் நுழைந்து அங்கிருந்த பல சிற்றரசர்களை அகற்றிவி;;ட்டு அவராண்ட குறுநில அரசுகளைக் கைப்பற்றி ஆட்சிசெய்தனர்.

யாழ்ப்பாண வைபவமாலை வன்னியில் இருதடவைகளாக வன்னியரின் குடியேற்றம் ஏற்பட்டதென்று சொல்கின்றது. இவற்றுள் முதற் குடியேற்றம் குளக்கோட்டன் காலத்தில் ஏற்பட்டதெனவும். இரண்டாம் குடியேற்றம் பாண்டித நாட்டால் வந்த ஐம்பத்தொன்பது வன்னியரின் வருகையோடு ஏற்பட்டதென்றும் அந்நு}ல் கூறும். தமிழரசர் காலத்திலேற்பட்ட இரண்டாம் குடியேற்றம் பற்றியே வையாபாடல் கூறுவனவற்றிலிருந்து அடங்காப்பற்றென வழங்கிய வன்னிப் பகுதியின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்துகொள்ளலாம்.


(ஆ) அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்

வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவனவற்றுள் சில வரலாற்றுண்மைகள் இடம்பெறுகின்றன. அடங்காப்பற்றை வன்னியர் கைப்பற்றியமையைக் குறித்து மேல் வருமாறு நு}ல் கூறுகின்றது. செயதுங்க வீரவரராஜசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்குமாறு து}துவரை அனுப்பினான். து}துவர்கள் சொன்னவற்றைக் கேட்ட மதுரை மன்னன் அறுபது வாட்படை வன்னியரை அழைத்துத் தன் மகள் சமது}தியை அவர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வந்த வன்னியர்களை அடங்காப் பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான்.

அடங்காப் பற்றை அடைந்ததும் வன்னியர் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் து}துவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு என்னுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோடமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன், சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிகட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாக மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டுவ தலைவர்களைக் கொன்று விட்டு நாட்டையாண்டனர்.

மேற்கு மூலை, கிழக்கு மூலை, என்பவற்றகை கைப்பற்றிய சிங்கவாகு பொக்கா வன்னியிலிருந்தான். சுபதிட்டா என்னும் அந்தணனும் படையும் திரியாய் என்னுமிடத்திற்குச் சென்று நீலப்பணிகனைக் கொன்று விட்டு அந்நிலத்தை ஆண்டனர். காலிங்கன், மலையகத்தார், கன்னார் முதலியோர் கச்சாயிலே குடியிருந்தார்கள். அங்கசன் கட்டுக்குளத்திற்குச் சென்று வாழ்ந்தான். புகழ்மிக்க சிங்கவாகு திருக்கோணமலைக்குச் சென்றான். மாமுகன் வெருகல், தம்பலகாமம் என்பவற்றைக் கைப்பற்றியாளச் சென்றான். மைடன் என்போன்கோட்டியாரத்திற்கு அதிபதியானான். ஓடுக்கன், நீலன், மைலன் என்போர் முறையே துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி என்னுமிடங்களுக்குச் சென்றனர் ஆற்றல் பொருந்திய சன்மன் நொச்சிமுனையில் ஆண்டான். நாகன் புல்வெளிக்குச் செல்ல நீலையினான் வாகுதேவன் தனிக்கல்லிலிருந்தான்.

வன்னியர்கள் வந்த பின்னர் அவர்களை அடுத்து அவர்களின் மனைவிமாரும் பரிவாரங்களும் அடங்காப் பற்றை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களுள் மதுவீர மழவராயனும் நாட்டையாண்ட மழவராயனும் மன்னனோடு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். பூபால வன்னிமையும் கோபாலரும் கட்டுக்குளத்திலும் திரியாவிலும் இனிது வாழ்ந்தனர். வில்வராயன் நல்லு}ரிலிருந்தான். குடைகாத்தான், கொடித்தேவன், தேவராயன், கந்தவனத்தான் என்போர் செட்டி குளத்தின் அதிபதிகளாயினர். உத்துங்கராயன் பனங்காமத்தில் வாழ்ந்தான்.

மேலேயுள்ள வையாபாடற் பகுதியிற் பல வன்னியர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்கள் சென்றிருந்த இடங்களும் கைப்பற்றிய இடங்களும் கூறப்படுகின்றன. இங்கு கூறப்படும் பிரதானிகள் அனைவரும் வரலாற்று நபர்கள் என்று கொள்ள முடியாத போதிலும், இவர்களிற் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகவே கருதவேண்டும். இவர்கள் இன்ன காலத்தில் வந்தார்கள் என்று திட்டவட்டமாக நு}ல் கூறாமையால் ஈழநாட்டு வரலாற்றையும் தென்னிந்திய வரலாற்றையும் ஒருங்கே ஒப்புநோக்கி ஆராய்வதன் மூலமும், நு}லிலுள்ள அகச்சான்றுகளை நுணுகி நோக்குவதன் மூலமும் ஓரளவிற்கு வன்னியர்கள் வந்த காலத்தை நிர்ணயிக்கலாம். வன்னியரின் வருகை பற்றி நு}ல்தரும் விளக்கம் ஏற்கக் கூடியதொன்றாக அமையவில்லை. மதுரை மன்னனின் இளவரசியோடு இவர்கள் வந்தார்கள் என்பதும் பதினெண்குடிகளைச் சேர்ந்த மக்களைக் கூட்டி வந்தார்கள் என்பதும் ஓரளவிற்கு விஜயன் மதுரை இளவரசியை மணந்தமை பற்றி மகாவம்சம் தரும் தகவல் ஒத்திருக்கின்றன. எனினும், மதுரை மன்னனின் து}ண்டுதலால், வன்னியர்க்ள வந்தார்கள் என்றும செயதுங்க வீரவரராஜசிங்கன் என்ற முதல் அரசன் காலத்தில் வன்னியர் வந்தார்கள் என்றும் நு}ல் கூறுவன கவனத்திற்குரியவை.

கைலாயமாலையிலே கூறப்பெற்ற முதற் சிங்கையாரியனான செயவீரசிங்கை ஆரியன் என்ற பெயரே வையாபாடலிற் செயதுங்க வீரவரராஜசிங்கன் எனத் திரிபடைந்து வந்துள்ளதென ஊகிக்கலாம். சேதுபதி திறலரசு புரியும் வீரன் செருக்குற்ற ஆரிய வம்சத்தார் என்போரும் வன்னியர்களோடு வந்தார்களென்று வையாபாடல் கூறுவதால், சேது நாட்டிலிருந்து வந்த ஆரியச்சக்கரவர்த்திகளோடு இவ்வன்னியர் வந்தனர் எனக் கொள்வது சாலப்பொருந்தும் மேலும் இவ்வன்னியர் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்திலே தான் வந்திருக்க வேண்டும். எனவே, பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் நடந்த பாண்டியப் படையெடுப்பின் பின்னணியில் வைத்தே வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவதை நோக்கவேண்டும். இவ்வன்னியர்கள் கைப்பற்றிய இடங்களிற் பல யாழ்ப்பாண மன்னர் ஆதிக்கத்துள் அமைந்திருந்தமையும் இக் கருத்துக்கு ஆதாரம் அளிக்கின்றது. அத்தோடு முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியாகிய சிங்கை ஆரியன் காலத்தில் அவன் அதிகாரம் பெறுவதற்குப் பாண்டி மழவன் என்ற பிரதானியும் வேறு பல மழவராயன் என வழங்கிய தலைவர்களும் துணை புரிந்தனர் எனக் கைலாயமாலை கூறுகின்றது. மழவராயன் என வழங்கிய தலைவர்கள் வன்னியரோடு வந்தார்கள் என்றும், மதுவீர மழவராயன், மழவராயன் என்போர் அரசனோடு யாழ்ப்பாணத்தில் இருந்தனர் என்றும் வையாபாடல் கூறுகின்றது. எனவே, வையாபாடலில் இடம்பெறும் தகவல்கள் முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி காலத்திதை யொட்டினவென்றே கருதலாம்.

பான் கூன்ஸ் தேசாதிபதி யாழ்ப்பாண மன்னர்கள் எல்லோருக்கும் வன்னியர் திறை செலுத்தி வந்தார்கள் என்று கூறுகிறார். எனினும் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரியன், முதலாம் சங்கிலி போன்ற பலம்மிக்க மன்னர்களே வன்னியர்களையடக்கி, வன்னிநாட்டில் தம்மாதிக்கத்தைச் சிறப்பாக ஏற்படுத்தியிருந்தார்கள். வரோதயசிங்கையாரியன் ஆட்சியில் வன்னியர்கள் கிளர்ச்சி செய்தபொழுது அவ்வரசன் வன்னிமேற் படையெடுத்து வன்னியரையடக்கி வழமையான திறயை அவர்களிடமிருந்து பெற்றான்.

ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையை ஆண்டபொழுது அவனது சேனாதிபதி செண்பகப் பெருமாள் இரு தடவையாக யாழ்ப்பாண அரசைத் தாக்கினான். முதலாவது முறை படையெடுத்துச் சென்றபொழுது சில எல்லைப் பிரதேசங்களைத் தாக்கிவிட்டுத் திரும்பினான். இவன் யாழ்ப்பாணத்தின் மீது மீண்டும் 1450ம் ஆண்டளவிற் படையெடுத்து அவ்வரசைக் கைப்பற்றினான். வன்னியைக் கைப்பற்றிய பின்னரே இவன் யாழ்ப்பாணக்குடா நாட்டில் நுழைந்தானெனக் கருதலாம். யாழ்ப்பாண வைபவமாலை கனகசூரிய சிங்கையாரியன் காலத்தில் வன்னியரின் துணையோடு சிங்களப் படையெடுப்பு நடைபெற்றதெனக் கூறுகின்றது. பின்னர் பதினைந்தாம் நு}ற்றாண்டிற் கனகசூரிய சிங்கையாரியனின் மகனாகிய பரராசசேகரகன் வன்னியரை அடக்கியதோடு தன்னாட்சிக்காலத்தின் இறுதியில் முள்ளியவளையிற் சிலகாலம் தங்கியிருந்தான்.

யாழ்ப்பாண அரசிலிருந்த நிர்வாக அதிகாரிகளில் வன்னியரே முதன்மை பெற்றிருந்தனர். தலைமுறை தலைமுறையாகத் தம் நாடுகளை வன்னியர் ஆண்டு வந்தனர். மேலும் யாழ்ப்பாணத்தில், அரண்மனையில் வருடத்திற்கு இருமுறை வரிசைகள் கூடியபொழுது வன்னியரும் அரசனுக்கு உபகாரம் அனுப்பி வைத்தனர். எனினும் ஆண்டுக்கு ஒருமுறை தலைநகருக்குச் சென்று, யாழ்ப்பாண மன்னரிடம் சமுகமளித்துத் திறை கொடுத்தனர். அரசனின் நேரடியான ஆட்சிக்குள்ள மாகாணங்களிலே காணப்பெற்ற நிர்வாக முறையே வன்னி நாட்டிலும் காணப்பட்டது. எனினும், வன்னியர் சுயமாக ஆண்டு, அவற்றிற் சேவை புரிந்த முதலியார், கண்காணி, பண்டாரப்பிள்ளை, தலையாரி அடப்பனார், மொத்தக்கர் முதலிய எல்லா அதிகாரிகளையும் நியமித்து வந்தனர். அத்துடன் வன்னி நாடுகளிலுள்ள வாரம், தீர்வை, காணிக்கடன், ஆள்வரி முதலிய எல்லா இறைவரிகளையும் வன்னியரே பெற்றனர்.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சிசெய்த காலத்தில் யாழ்ப்பாண அரசில் நிலவிய வழமைகளை ஆதாரமாகக் கொண்டு வன்னியரிடமிருந்து திறைபெறும் உரிமையை நிலைநாட்டி வந்தனர். எனினும் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் வன்னியிற் பெரிதும் தளர்வுற்றிருந்தது. ஒல்லாந்தரும் யாழ்ப்பாணப்பட்டினத்தைக் கைப்பற்றியபோது முற்கால வழமைகளையே தழுவி வன்னியரிடமிருந்து திறைபெற்று வந்தனர். எனினும் பல தடவைகளாக வன்னியர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திறை கொடுக்க மறுத்ததுடன், ஒல்லாந்தருக்கெதிராகக் கண்டி அரசனின் உதவியையும் பெறுவதற்கு முயற்சித்தனர். ஒல்லாந்தர் காலத்தில் தென்னமரவடி, பனங்காமம், மேல்பத்து, முள்ளியளை, கரிக்கட்டுமூலை, கருநாவல்பத்து ஆகிய இடங்களில் வன்னியரின் ஆட்சி நிலைபெற்றது. இவற்றுட் பனங்காமத்தை ஆண்ட வன்னியர் பெருவலிபெற்றிருந்ததோடு அயலிலுள்ள வன்னிமைகளின் பிரதேசங்களையுங் கைப்பற்றியிருந்தனர். இதுவே ஒல்லாந்தர் காலம்வரையுள்ள அடங்காப்பற்று வன்னிமைகளின் சுருக்கமான வரலாறாகும்.