Sunday, December 4, 2011

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 4

நடிகர்களின் மீதான விமர்சனங்கள்
மற்ற சி(ப)ல அரசியல்வாதிகளைப்போல் குளிரூட்டப்பட்ட அறையிலே அமர்ந்து கொண்டு, பெரிய பணக்காரர்களோடும், தொழிலதிபர்கள், பண்ணையாளர்களின் ஆதரவோடும் அரசியல் செய்பவரல்ல மருத்துவர். செல்போனை தட்டினால் தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்து கொட்டப்படும் நிலையும் இல்லை, நீரிழிவு மற்றும் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அளவிலும் கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருபவர்தான் மருத்துவர்.

அப்படி சுற்றுப்பயணங்கள் சென்றபோது தமிழர்கள் முக்கியமாக இன்றைய இளைஞர்கள் திரைப்படம் என்ற மாயையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது, ஒரே ஒரு படிப்பகம் கூட இல்லாத குக்கிராமங்களில் கூட அரிதாரம் பூசும் பல நடிகர்களுக்கு ஆரத்தி எடுக்க ரசிகர்மன்றங்கள் இருந்தன, ஒவ்வொரு ஊரிலும் ரஜினி,விஜயகாந்த,கமல்,அஜீத்,விஜய் தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் என குறைந்த பட்சம் 7 ரசிகர்மன்றங்கள் இருக்கும், அருண்குமார் மற்றும் இன்னும் பல நடிகர்களின் மன்றங்களை கணக்கில் சேர்க்கவில்லை.
இளைஞர்களின் வாழ்க்கை,பலம் இப்படி வீணாவதை எண்ணித்தான் திரைப்படங்களின் பெயரால் நடிகர்கள் நிசத்தில் போடும் வேடங்களை கலைக்க குரல் கொடுத்தார், அது மாதிரியே திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதாவே தொடப்பயந்த ரஜினி என்ற மாயையை உடைத்து அவரின் உண்மை பலத்தை நாட்டுக்கும் புரியவைத்தார்.

ரஜினிகாந்த் பற்றிய சுந்தரமூர்த்தியின் பதிவையும், விஜயகாந்த் பற்றிய குழலியின் பதிவையும் கீழ்கண்ட சுட்டிகளில் படியுங்கள்


நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்


விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?


இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்


இந்த மூன்று பதிவுகளும் இவர்களின் முகமூடியை கிழித்தெரியும்...

இதற்குமேல் இந்த இருவரைப்பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை

மற்ற எந்த ஊடகத்தையும் விட திரைப்பட ஊடகம் அதிக வலிமை வாய்ந்தது, குழந்தைகளைக்கூட பாதிக்ககூடிய ஊடகம், அப்படிபோடு போடு பாடலை முழுவதுமாக பாடிக்காட்டும் குழந்தையையும், சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு என 3 வயது குழந்தையும் கூறும் பொழுது இந்த திரைப்படங்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என புரியவில்லையா? அந்த திரைப்படத்திலே சமூக பொறுப்போடும் தமிழ்ப்பற்றோடும் எடுங்கள் என கூறுவதில் என்ன தவறு?

கச்சத்தீவை ஏதேதோ காரணம் கூறி இலங்கையிடம் தாரைவார்த்தது இந்தியா, அதனால் இன்றும் மீனவர்கள் படும் துயரங்கள் எத்தனை எத்தனை, அந்த கச்சத்தீவை மீட்கப்போராடி கைதானவர்தான் மருத்துவர், ஈழத்தைப்பற்றி பேசினாலே ஏதோ தேசத்துரோக குற்றம் செய்தது போல விமர்சிக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் இன்றுவரை ஈழப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பவர், புலிகளை ஆதரித்து பேசியதற்காக பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோதும் கூட, புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என தீர்மானம் சட்டசபையிலே கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க திமுக கூட பயந்து பின் வாங்கி நடுநிலை எனக்கூறியது, அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தீர்மானத்தை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான தார்மீக ஆதரவை தெரிவித்தனர், தமிழ் பெயரைச்சொல்லி யாரும் தமிழகத்திலே அரசியல் செய்யமுடியாது, தமிழ்ப்பெயரைச்சொல்லி யாராலும் ஒரு வாக்குகூட கூடுதலாகப்பெறமுடியாது, அந்த காலம் மலையேறிவிட்டது, மருத்துவரின் போராட்டம் தமிழின்,தமிழினத்தின் மீதான பற்றுதலாலொழிய அரசியலால் அல்ல, ஆனால் அவரது தமிழ் போராட்டங்களை கொச்சை படுத்திக்கொண்டுள்ளனர் பலர், இதில் பலருக்கு கர்னாடகவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் தமிழர்களை இரட்சிக்கப்போவதாக கனவு வேறு.

மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.


முக்கியமான கேள்விக்கு வருவோம்,

ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.

இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...

ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன... ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன...

மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...

பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம்
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....

ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்


1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்
கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...

குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...

எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்...

பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்....

உதிரம் சிந்தி
உயிர் கொடுத்து
பெற்றதிந்த
பாதுகாப்பு

சொந்த நாட்டிலும்
சொந்த ஊரிலும்
சூறாவளியில்
மாட்டிய
வைக்கோல் போராய்
சுற்றி சுற்றி
அடிக்கப்பட்டபோது

சுதந்திரமும் இல்லை
இங்கே
மனித உரிமையும்
மாய்ந்து விட்டன
இங்கே

வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்

இன்று
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்

அன்று
பதறித்துடித்தபோது
பதுங்கிவிட்டன

பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு

பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு

எப்போதடா வாய்ப்பு
கிடைக்கும்
வாய்ப்பூட்ட போடலாம்
என காத்திருக்கும்
கழுகுகளே
உம் வாயில் மொத்தமும்
மண் தான்...

பார்வைகள் மாறுகின்றன...
பார்ப்பவர்களும் மாறுகின்றனர்...

காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...

பார்வைகள் மாறி
பாராளும் காலம்
போய்...
பாராளும் காலத்தில்
பார்வைகள் மாறுகின்றன...

ஒரே இரவில்
உயர்வு தேட
நாங்கள் ஒன்றும்
அது... அல்ல

ஒரே இரவில்
காட்சி மாற
இது ஒன்றும்
கனவு தொழிற்சாலை
அல்ல

காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்


அதுவரை வரும்
தீய்ந்த
வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

உயிர் ஈந்து எங்களை வாழ வைத்த தியாகிகளின் பாதம் தொட்டு இந்த பதிவுகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்...


நன்றி  : குழலி