Google+ Followers

Saturday, December 3, 2011

ஈழத்து வன்னிமைகள்அ. தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்

ஈழவரலாற்றிற் குறிப்பிடத்தக்கவொரு மாற்றம் பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்டது. கலிங்கமாகனது படையெடுப்பின் விளைவாகப் பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழமனைத்தையும் உள்ளடக்கியிருந்த அரசு அழிவுற்றது. மன்னனை மையமாகக் கொண்ட மத்தியமயமான ஆட்சியும், பெருங்குளங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் ஆதாரமாகக் கொண்ட பொருளாதார முறையும் அழிந்தன. இவற்றின் அழிவில் மானிய முறையின் இயல்புகளைக்கொண்ட ஓர் அரசியலமைப்பு வளர்ச்சியடைந்தது. மாகனது படையெடுப்பின் பின் இரு அரசுகளும் பல குறுநில அரசுகளும் தோன்றி நிலைபெற்றன.

வடஇலங்கையில் மாகன் நாற்பது (கி. பி. 1215-1255) வருடங்களாக ஆட்சி செய்தான். அவன் மறைந்த பின் அங்கு சாவகரின் ஆட்சியேற்பட்டது. சாவகர் ராஜரட்டையை ஆண்டகாலத்தில் பாண்டியர் ஈழம்மேற் படையெடுத்து வந்து சாவக அரசனான சந்திரபானுவை அடக்கித் தமது ஆதிக்கத்தைத் திணித்து அவனிடமிருந்து யானைகளையும் மணிகளையுந் திறையாகப் பெற்றனர். சந்திரபானு வடஇலங்கையில் வலுப்பெற்றதும் பாண்டியரைப் பகைத்து எதிர்க்கத் துணிந்தான். எனவே வீரபாண்டியன் ஈழத்திற்குவந்து சந்திரபானுவைப் போரிற் கொன்று அவனுடைய மகனை அரசனாக்கிவிட்டுத் திரும்பினான். பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் முடிவில் ஆரியச்சக்கரவர்த்தியின் தலைமையில் நிகழ்ந்த பாண்டியப் படையெடுப்பின் விளைவாக வட இலங்கையில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டி நாட்டிலுள்ள செவ்விருக்கை நாட்டிலிருந்து வந்த ஆரியச்சக்கரவர்த்தியின் வழியில் வந்த மன்னர் சிங்கை நகரென வழங்கிய நல்லு}ரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணப் பட்டினத்தை ஆண்டு வந்தனர். யாழ்ப்பாணப் பட்டினமென வழங்கிய தமிழரசிற் பல வன்னி நாடுகளிருந்தன.

தெற்கிற் சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும் பின் குருநாகல், கம்பளை, கோட்டை முதலிய நகரங்களிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். அவர்களின் அரசிலும் ஆங்காங்கு வன்னி எனப்பட்ட குறுநிலவரசுகள் பல காணப்பட்டன.

இவ்வாறு ஈழநாட்டு அரசியலிற் பல நு}ற்றாண்டகளாக வன்னிநாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும். ஈழவரலாற்று நு}ல்களில் அவற்றைப்பற்றி விரிவான விளக்கவுரைகள் இடம்பெறவில்லை. வன்னி நாடுகளின் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்குப் போதிய, ஆதாரபூர்வமான சான்றுகளும் கிடைக்கவில்லை. சிங்கள மொழியிலுள்ள வன்னி உபட்ட மட்டக்களப்பு மான்மியம் முதலிய தமிழ் நு}ல்களும் வன்னி நாடுகள் பற்றிச் சில தகவல்களைத் தருகின்றன. இந்நு}ல்களிற் புனை கதைகளும் புராணக்கதைகளும் வரலாற்றுச் சார்புள்ள கதைகளோடு கலப்புற்றுள்ளன. எனவே இவற்றுட் பொதிந்திருக்கும் வரலாற்றுண்மைகளை இலகுவில் விளங்கிக் கொள்ளமுடியாது.

(ஆ) வன்னி நாடுகளின் தோற்றம்

பதின்மூன்றாம் நு}ற்றாண்டு தொடக்கம் பாளிமொழியிலுஞ் சிங்கள மொழியிலுமுள்ள வரலாற்று நு}ல்கள் வன்னிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மாகன் ராஜரட்டையை ஆட்சிசெய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையிலுள்ள ஸீகள வன்னியை அடக்கி ஆட்சி புரிந்தானென்று பூஜாவலிய கூறுகின்றது. எனவே விஜயபாகுவின் காலத்தில் மாயரட்டையிலும் வன்னிப் பிரதேசம் பரந்திருந்ததென்பது தெளிவாகின்றது. விஜயபாகு வன்னிராசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் அதிகாரஞ் செலுத்தினானெனச் சூளவம்சமும் எடுத்துரைக்கின்றது.

இரண்டாம் பராக்கிரமபாகு ராஜரட்டையிலும் ரோகணத்திலுமுள்ள வன்னி மன்னர் மேலே தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். அவ்வரசனது ஆட்சிக்காலத்தில் இளவரசனான விஜயபாகு அனுராதபுரத்துக்குச் சென்ற பொழுது ராஜரட்டையிலிருந்த வன்னி மன்னர் அவனைக் கண்டு கௌரவித்துத் திறைகொடுத்தனர். வன்னிராசர் படைகளை வைத்திருந்தனரென்றும் வெண்கொற்றக்குடை. சாமரம், ஆசனம் முதலியவற்றைத் தம் பதவிச் சின்னங்களாக இளவரசனிடமிருந்து பெற்றனரென்றும் சூளவம்சம் கூறும். எனவே இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் வன்னிமை என்ற குறுநிலவரசுகள் வளர்ச்சியடைந்த நிலையிலிருந்தனவென்று கொள்ளலாம். அரசனுக்குத் திறை செலுத்திய போதும் தத்தம் பிரதேசங்களைச் சுயமாகவே ஆளுவதற்கும் வன்னி மன்னர் உரிமை பெற்றிருந்தனர். ஆகையால் வன்னிமைகள் பதின்மூன்றாம் நு}ற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஈழநாட்டின் முப்பெரும் பிரிவுகளான ராஜரட்டை, மாயரட்டை, ரோகணம் என்பவற்றில் வன்னிகள் காணப்பட்டமையும் கவனத்திற்குரியது.

மாகன் ஆட்சிசெய்த பிரதேசத்திலும் வன்னிகளிருந்தன. மாகன் தோப்பாவையைக் (பொலநறுவை) கைப்பற்றிப் படையாட்சி வன்னியருக்குக் கொடுத்தான் என்று மட்டக்களப்பு மான்மியங் கூறும். அத்தோடு மட்டக்களப்பிலுள்ள முக்குவ வன்னிமையை மாகன் அமைத்தானென்றும் அந்நு}ல் சொல்லுகின்றது. எனினும் மாகனுடைய காலத்திலேயே முதன் முதலாக ஈழத்தில் வன்னிமைகள் தோன்றினவென்று கொள்ளமுடியாது. மாகன் வன்னிமைகள் இடம்பெற்ற தொண்டை மண்டலத்திலிருந்தன்றிக் கலிங்க நாட்டிலிருந்தே வந்தான். அத்துடன் முக்குவரே முதன் முதலாக வன்னிமைகளாகியிருக்க முடியாது. சேர நாட்டிலிருந்து வந்த முக்குவர் வன்னியரிலிருந்து வேறுபட்ட ஒரு சமூகப் பிரிவினரே. வன்னிமைகள் எனவழங்கிய குறுநில அரசுகளோ வன்னியரென்ற சமூகத்தவரோ சேரநாட்டிலிருந்ததற்கு எந்தவிதமான சான்றுகளுமில்லை. மேலும் மாகனும் விஜயபாகுவும் ஆட்சிசெய்த பிரதேசங்களில் வன்னிமைகள் இடம்பெற்றிருந்தமையால் இவ்விரு மன்னரின் காலத்துக்கு முன்னரே ஈழத்தில் வன்னிமைகள் உருவாகியிருத்தல் வேண்டும்.

தொண்டை மண்டலத்திலிருந்த கிழியூர் மலையமான்களின் கல்வெட்டுக்கள் வன்னியநாயன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த குறுநில மன்னர்க்கும் வேளைக்காரருக்குமிடையில் நிலவிய தொடர்பைத் தெளிவுபடுத்துகின்றன. வேளைக்காரர் வன்னிய பிரதானிகளின் படைகளிற் சேவகம் புரிந்து வந்தனர். எனவே ஈழத்து வன்னிமைகளின் தோற்றத்தையும் வேளைக்காரப்படையின் வரலாற்றோடு இணைத்து நோக்குவது சாலப்பொருந்தும். சோழர் ஈழத்தைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்த காலத்தில் வேளைக்காரப் படைகளும் ஈழுத்துக்கும் வந்திருத்தல் வேண்டும். ஈழமான மும்முடி சோழமண்டலத்தில் படைத்தலைவர்கள் நிர்வாகத்திற் பங்குகொண்டிருந்தனர். இப் படைத்தலைவர்களும் அவர் வசமுள்ள வேளைக்காரர் முதலியோரைக் கொண்ட படைப் பிரிவும் தொண்டை மண்டலத்திற் போல ஈழத்தின் சில பகுதிகளிற் காலப் போக்கிற் சுயாட்சி மாநிலங்கள் தோன்;றுவதற்கு ஏதுவாயிருந்திருத்தல் கூடும்.

முதலாம் விஜயபாகு (கி; பி. 1055-1111) நடாத்திய போராட்டங்களின் விளைவாக இலங்கையிற் சோழராட்சி அழிவுற்றபோதும் ஈழத்திலிருந்த சோழப்படைகள் அழிக்கப்பட்டனவென்றோ, நாட்டிலிருந்து அகற்றப்பட்டனவென்றோ கருதுவதற்கில்லை. சோழ நாட்டிலிருந்து வந்த போர் வீரருட் பலர் ஈழத்திலே தங்கியிருந்து, சிங்கள மன்னரின் படைகளிற் சேர்ந்து சேவகம் புரிந்தனர். முதலாம் விஜயபாகு காலத்தில் வேளைக்காரப் படை சிறப்புற்றிருந்ததற்கச் சூளவம்சமும் பொலநறுவையிலுள்ள வேளைக்காரர் கல்வெட்டும் சான்றளிக்கின்றன. பொலநறுவையிலுள்ள தலதாமாளிகையைப் பாதுகாக்கும் பொறுப்பை வேளைக்காரப்படை ஏற்றிருந்தது. இப்படைவலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர் முதலிய பலஉட்பிரிவுகளைக் கொண்டிருந்தது.

விஜயபாகு சோழருக்கெதிராகப் போராயுதங்களை மேற்கொண்டபோது வேளைக்காரப்படை அரசனைத் தலைநகரிலிருந்து துரத்தி, அரண்மனையைக் கொழுத்தி அரசனது உறவினரைச் சிறைப்படுத்துமளவிற்குப் பலம் பெற்றிருந்தது. இரண்டாம் கஜபாகு பொலநறுவையிலிருந்து ஆட்சிசெய்தபொழுது அவனைத் தாக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த வேளைக்காரப் படைகளுக்குப் பல சன்மானங்களைக் கொடுத்து அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு து}ணடினார்கள். முதலாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்திற் கோட்டியாரத்தில் வேளைக்காரப் படையிருந்ததென்று சூளவம்சம் கூறுகின்றது. பதிவியாவிற் கண்டெடுக்கப்பெற்ற பதின்மூன்றாம்; நு}ற்றாண்டைச் சேர்ந்த ஒரு வடமொழிக் கல்வெட்டும் வேளைக்காரரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. சேது குலத்தைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு லோகநாத தண்டநாயக்கன் என்ற தளபதி ஒரு விகாரத்தை அமைத்து அதை வேளைக்கார விகாரமெனப் பெயரிட்டு அதைப் பாதுகாக்கும் பொறுப்பினை வேளைக்காரப் படையிடம்; விட்டதாகக் கூறுகிறது.

எனவே இரு நு}ற்றாண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் வேளைக்காரர் செல்வாக்குப் பெற்றிருந்தனரென்று கருதலாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்கு வழியமைத்தன. வன்னியபற்று என வழங்கிய நிலப்பிரிவுகள் தென்னிந்தியாவிற் காணப்பட்டதைப் போல ஈழத்திலும் வன்னிப் பற்று என்ற பிரிவுகளிருந்தன. சோழராட்சிக் காலத்தில் ஈழத்திலிருந்த அதிகாரிகள் நிர்வாகத்தின் பொருட்டுப் பற்று என்னும் பிரிவுகளை வகுத்திருந்தனர். இப்பற்றுக்களிற் சில வன்னிய பற்றுக்களாக உருப்பெற்றன. சோழராட்சி நிலவிய பிரதேசங்களிலேயே பிற்காலத்தில் வன்னிமைகள் நிலவியதும் இங்கு நோக்கற்பாலது.

ஈழத்திலுள்ள வரலாற்றுச் சார்புள்ள தமிழ் நு}ல்கள் யாவும் வன்னியர் தமிழகத்திலிருந்து வந்தார்களென்று கூறுகின்றன. மேலும் புத்தளத்து வன்னிமை பற்றிக் கூறும் வன்னி உபட்ட என்ற சிங்கள நு}லும் அவ்வன்னிமையிற் சிறப்பிடம் பெற்றிருந்த முக்குவர் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தனரென்று கூறுகின்றது. எனவே தமிழகத்திலிருந்து வந்த வன்னியர் அதிகாரம் பெற்றதன் விளைவாக ஈழத்திற் பல வன்னிமைகள் தோன்றினரென்று கொள்ளலாம். வன்னியராண்ட பிரதேசங்கள் வன்னி நாடுகளென வழங்கி வந்தன வென்று யாழ்ப்பாண வைபவமாலையுங் கூறுகின்றது.

(இ) திருமலை வன்னிமைகள்

திருகோணமலையிலிருந்த வன்னிமைகள்பற்றிக் கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. மனுநீதிகண்ட சோழனுடைய மகனாகிய வரராமதேவன் கோணேஸ்வரத்தின் மகிமையைக் கேட்டறிந்து அங்கு தன் மகன் குளக்கோட்டனோடு புனித யாத்திரை வந்தானென்றும், பின் குளக்கோட்டன் சிவாலயத்தையும் பாவ நாசச் சுனையையும் அமைத்து ஆலயத் திருப்பணிகள் செவ்வனே செயற்பட ஏற்பாடுகள் செய்தானென்றும் இந் நு}ல் கூறும்.

குளக்கோட்டனைப்பற்றி மேல் வருந் தகவல்களையும் கோணேசர் கல்வெட்டுத் தருகின்றது. குளக்கோட்டன் மருங்கூரிலிருந்து அழைத்து வந்த ஆறு சோழக் குடிகளைத் திருமலையிலிருத்தி அவர்களுக்குப் பரவணியாட்சியுரிமையோடு நிலங்களைப் பகிர்ந்தளித்தான். அத்துடன் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான பொருட்களையும் கொடுத்து நாள் தோறும் ஏற்படும் வரவுசெலவுகளின் கணக்குகளைப் பதிவு செய்யுமாறு தானத்தாரைப் பணித்தான்@ குளக்கோட்டன் இருபத்தொருவரிப் பத்தர் குடிகளைத் திருமலையிலிருத்தி மலர் கொய்தல், மாலை தொடுத்தல். கொடி, குடை பிடித்தல், விளக்கேற்றல், படிமங்களைத் துலக்குதல், நெல்லுக்குற்றுதல், மெழுகுதல், சந்தனமரைத்தல் ஆலத்தி செய்தல், நடனமாதர் ஆடுமிடத்தத் தாளத்திற் கேற்பப் பாடுதல் முதலான தொழும்புகளைச் செய்யுமாறு பணித்திருந்தான். தானத்தாருக்கும், வரிப் பத்தருக்கும் இச் சேவைகளுக்கு ஊதியமாகப் பள்ளவெளியில் வயல் நிலங்களைக் குளக்கோட்டன் கொடுத்திருந்தான். மதுரை நகரால் வந்த தனி யுண்ணாப் பூபாலனுக்குத் திருமலை நகரின் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து வன்னிபம் என்ற பட்டத்தையும் வழங்கினான். மேலும் திருநெல்வேலியிலிருந்து வந்த காராளனொருவனைக் கட்டுக் குளம் பற்றுக்கு அதிபதியாக்கி நிலா வெளியில் நிலமுங் கொடுத்து வன்னிபமென்ற பட்டத்தையும் குளக்கோட்டன் சூட்டினான். கோணேசர் கோயிலின் வரவு செலவுகளைப் பற்றிய குருகுலக் கணக்கிற்குக் கட்டுக்குளப் பற்று வன்னியனாரும் அவனது சந்ததியினரும் பொறுப்பாக விருக்க வேண்டுமென்று பணித்து அடை, ஆயம், தீர்வை முதலிய வரிகளுங் கோயிலுக்கே செல்ல வேண்டுமென்று அவன் ஆணையிட்டான்.

கோணேசர் கல்வெட்டில் வன்னிமைகள் பற்றிவரும் கதை எந்தளவிற்கு ஆதார பூர்வமானதென்பதை அறிந்து கொள்வதற்குக் குளக்கோட்டனின் வரலாற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். மனுநீதீ கண்ட சோழன், வரராமதேவன் என்ற அரசர்கள் பற்றிய கதைகள் புனைந்துரைகளாகவே இருக்க வேண்டும். எனினும், குளக்கோட்டனை ஒரு கற்பனையிலெழுந்த நபரெனக் கொள்ள முடியாது. திருமலைக் கோட்டையின் முன்பாகவிருக்கும் ஒரு கற்று}ணில் முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பிணியைப் பின்னே பறங்கி பிரிக்கவேஎன்ற மொழித்தொடர் காணப்படுகின்றது. இக்கல்வெட்டு குளக்கோட்டன் கோணேசர் கோவிலின் திருப்பணிகளைச் செய்வித்திருந்தான் என்ற கருத்து அது வரையப்பெற்ற காலத்தில் வலுப்பெற்றிருந்ததென்பதைக் காட்டுகின்றது.

குளக்கோட்டன் சோழகங்கை என்ற பெயரைப் பெற்றிருந்தானென்று தbpண கைலாச புராணம் கூறுகின்றது. குளக்கோட்டன் என வழங்கிய சோழகங்கன் பத்தாம் நு}ற்றாண்டின் பின்னரே வாழ்ந்திருத்தல் வேண்டும். சோழப் பேரரசு எழுச்சி பெற்ற பின்பே சோழகங்கன் என்ற பெயர் வழக்கில் வந்தது. சோழகங்கன் என்ற பெயரைக் கொண்டிருந்த இளவரசரும் குறுநில மன்னரும் கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமிருந்தனர். ஈழத்திலும் பொலநறுவைக் காலத்தில் சோழகங்கனென்ற பெயரைச் சில இளவரசர் பெற்றிருந்தனர். இரண்டாம் கஜபாகுவின் ஆட்சிக் காலத்திற் சோழகங்க குமாரன் என்ற இளவரசன் பொலநறுவையில் இருந்தான். பின் நிஸங்க மல்லனுடைய மருகனான சோட(ழ)கங்கன் விக்கிரமபாகுவைக் கொன்றுவிட்டுப் பொலநறுவையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். திருமலைக் கோட்டையிலுள்ள ஒரு வடமொழிக்கல்வெட்டு கி. பி. 1223இல் ஈழத்திற்குவந்த ஒரு சோடகங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டிலுள்ள பல வரிகள் சிதைவுற்றிருக்கின்றன. சோடகங்கன் கோணேசர் கோயிற்களித்த நிவந்தங்தங்ளைக் கூறவே இக்கல்வெட்டு வரையப்பெற்றதெனத் தெரிகின்றது. கோணேசர் கல்வெட்;டில் வரும் குளக்கோட்டனான சோழகங்களையே இக்கல்வெட்டுக் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.

வன்னிமைகள் திருகோணமலைப் பிரதேசத்தி;ல் ஆண்டதற்கும் தானத்தாரும் வரிப்பத்தரும் அங்கிருந்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. கங்குவேலியிலுள்ள ஒரு கல்வெட்டுத் திருமலை வன்னயனாரும் ஏழூர்களைச் சேர்ந்த அடப்பர்களும் கூடித் தம்பிரானார் கோணைநாதனுக்குக் கங்குவேலியில் நிலங்களையும் புற்றரைகளிலுள்ள வருமானத்தையும் விட்டதாகக் கூறுகின்றது. மேலும் தானம், வரிப்பத்து என்பவற்றையும் இக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

கோட்டியாரம்பத்தைச் சேர்ந்த வெருகல் என்னுமூரிலுள்ள ஒரு கல்வெட்டு ஒரு கோயிலின் தெற்கு மதிலைக் கயிலாய வன்னியனார் கட்டினாரென்று கூறுகின்றது. ஆராய்ச்சியாளர் இக் கல்வெட்டு பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதுவர். இக்கருத்துப் பொருத்தமானதெனின் கயிலாய வன்னியனார் பதினாறாம் நு}ற்றாண்டிற் கோட்டியாரம்பத்தை ஆண்டிருக்க வேண்டும்.

திருமலை, கட்டுக்குளம் ஆகிய இடங்களிற் குளக்கோட்டன் வன்னிமைகளை நியமித்தானென்று கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றபோதும் இவனே அங்கிருந்த வன்னிமைகளைத் தோற்றுவித்தானென்று கொள்வதற்கில்லை. கோணேசர் கல்வெட்டு கஜபாகுமகாராசன் திருப்பணிபற்றிச் சொல்வன. குளக்கோட்டனின் காலத்திற்கு முன்பே திருமலை வன்னிமை ஏற்பாடாகியிருந்த தென்று கொள்வதற்கு ஆதாரமாயுள்ளன. பாசுபதமறையவர் இறந்ததன் விளைவாக ஆலயத்திற் பூசை முதலியன தடையுற்றபோது கஜபாகுமகாராசன் அங்கு சென்று வன்னிபம், தானம், வரிப்பத்து, நாட்டவர் என்போரை அழைத்து விசாரணை நடத்தி, வெளிநாட்டிலிருந்து பிராமணர்களைக் கொணர்வித்து மீண்டும் ஆராதனைகள் வழமைபோல நடைபெற ஏற்பாடு செய்தான். அத்துடன் 1,100 பொன் கொடுத்துக் குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆயம், தானியவரி ஆகியவற்றிலும் வாணிபத்திற்கிடைக்கும் வருவாயிலும் பத்திலொரு பங்கை ஆலயத் திருப்பணிக்குக் கொடுக்க வேண்டுமென்று அரசன் ஆணையிட்டான்.

பதினாலாம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருமலை வன்னிமைமேல் ஆதிக்கம் பெற்றிருந்தனரென்று கொள்வதற்குச் சில சான்றுகளுள்ளன. அந்நு}ற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் நம்பொத்த என்ற சிங்கள நு}ல் திருகோணமலை தெமள பட்டணத்தில்’ (தமிழரசில்) அடங்கிருந்ததெனக் கூறுகின்றது. தbpண கைலாச புராணம் சொல்வனவற்றிலிருந்தும் திருமலையிலே செகராசசேகரனின் ஆதிக்;கம் நிலவியதென்பதை உய்த்துணர முடிகின்றது.

ஆரியச்சக்கரவர்;த்தி, செகராசசேகரன், பரராசசேகரன் என்ற யாழ்ப்பாணத்து மன்னர்கள், கோணேசர் கோவிலுக்குச் சென்று அங்கு வழங்கிய தானங்களைப் பற்றிக் கோணேசர் கல்வெட்டுச் செப்புகின்றது. பரராசசேகரன், செகராசசேகரன் ஆகிய இருவரும் கோணைநாதரைத் தரிசனம் பண்ணி ஏழுபட்டு முத்துமாலை, பவளக்குடை, ரத்தினப் பதக்கம், முதலியவற்றைக் கொடுத்துக் குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆலயத் திருப்பணிகளுக்குத் தேவையான துணிகளைப் பெறுவதற்குத் திரியாயூரிலுள்ள வயல்களையும் ஏழுகுளங்களையுங் கொடுத்ததாகவும் இந்நு}ல் கூறும். இத்தகவல்கள் ஆதாரபூர்வமானவையெனிற் சில யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னிமை மீது ஆதிக்;கம் பெற்றிருந்தனரென்று கொள்ளலாம். எனினும். இவ்வரசர்களை இலகுவில் அடையாளங் கண்டுகொள்ள முடியாது.

பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னியரோடு மணத்தொடர்பு கொண்டிருந்தனர். கனக சூரியசிங்கையாரியனும் புதல்வரும் வடதேசத்திலிருந்து ஈழத்திற்குத் திரும்பியபோது திருகோணமலையிலே தங்கிய பின்னரே தமது நாட்டை மீட்டனரென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. செண்பகப்பெரமாள் என வழங்கிய சபுமல்குமாரன் யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டைக்குச் சென்ற காலத்திற் கனகசூரிய சிங்;கையாரியன் யாழ்ப்பாணத்திலே தன்னாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்குத் தன்னுறவினனாகிய திருமலை வன்னியனாரிடமிருந்து படைத்துணை பெற்றிருக்கக்கூடும். சங்கலியின் ஆட்சிக் காலத்திலே யாழ்ப்பாணத்திரசனும் திருமலை வன்னியனாரும் ஒருவருக்கொருவர் துணையாகவிருந்து போத்துக்கேயரை எதிர்த்து வந்தனர். திருமலை வன்னியனார் இறந்தபின் அவனது மகன் இளைஞனாக இருந்ததினாற் சங்கிலி வன்னியை ஆளுவதற்குத் தானே உரிமையுடையவனென்று சொல்லி அதனொரு பிரிவைக் கைப்பற்றிக் கொண்டான். சங்கிலி இறந்தபின் கண்டியரசர் திருமலை வன்னியிலே தங்களாதிக்கத்தைத் திணித்தனர்.

(ஈ) முக்குவ வன்னிமைகள்

(க) மட்டக்களப்பு வன்னிமை 

பதின்மூன்றாம் நு}ற்றாண்டு தொடக்கம் மட்டக்களப்பிலும் வன்னிமைகளிருந்தன. கலிங்க மாகன் மட்டக்களப்பிற்கு அதிபதியாகவிருந்த தினசிங்கனென்னும் சிற்றரசனைக் கொன்றுவிட்டுச் சுகதிரனுக்குப் பட்டங்கட்டி மண்முனையிற் கோட்டையமைத்துக் கொடுத்து மட்டக்களப்பை ஆளச்செய்தானென்று மட்டக்களப்பு மான்மியம் கூறும்.

மட்டக்களப்பு வன்னிமையை மாகனே அமைத்தானென்று இந்நு}ல் எடுத்துரைக்கின்றது. முக்குவ வன்னிமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் சொல்வன.

வன்னிபங்கள் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு
எழுந்திடும் மரபும் நாடுமெந்த
மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும்
மாநிலத்திலுங்கள் முன்னோர் வாழ்ந்தவூரும்
துன்னு புகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத்
துணையரசன் பேரூருஞ் சொன்னாலிந்த
பன்னுபுகழ் சபையோர்கள் மகிழக் கூறிப்
பங்குபெறு மறியாயானாற் பாவமாமே

அறியாதானிச் சபைக்கு அகலநிற்பான்
பரன்றொழும்பர் பழிப்புரைப் பாரறை வேனெங்கள்
நெறி தவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே
படையாட்சி யுழுது}ணுண்டோர்
வெறிகமழும் காலிங்கவாசனெங்கள் திறத்தோரைப்
படைத்துணைக்குத் தலைவனாக்கி
குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும்
குகப் பட்டத்தரசு கொண்டோனானே

முக்குவ வன்னிமைபற்றி மட்டக்களப்பு மான்மியம் சொல்வன ஆதாரபூர்வமானவை போலத் தோன்றகின்றன. காலிங்க மன்னன் (மாகன்) காளிகட்டத்திலிருந்து முக்குவரை அழைத்து வந்து அவர்களின் படைத்தலைவர்களுக்கு வன்னிபம் என்னும் பட்டத்தைக் கொடுத்தானென்று நு}ல் கூறுகின்றது. சூளவம்சமும் மாகன் படையெடுத்து வந்தபொழுது பெருந்தொகையான கேரளப் போர் வீரர்களை அழைத்து வந்து, ராஜரட்டையைக் கைப்பற்றியபின் கேரளப் போர் வீரர்களுக்கு நிலங்களையும் பிற சன்மானங்களையுங் கொடுத்ததாகக் கூறுகின்றது.

சீதவாக்கையிலிருந்து மட்டக்களப்புக்குப் போய்க் குடியேறிய இஸ்லாமிய குடும்பங்கள் சிலவற்றின் வரலாற்றைக் கூறும் ஓரேட்டுப் பிரதியில் மட்டக்களப்பிலதிகாரஞ் செலுத்திய ஏழு வன்னியர் பற்றிக் குறிப்புண்டு. பதினேழாம் நு}ற்றாண்டிலே இளங்சிங்கன் என்ற முக்குவ வன்னியன் ஏறாவூரிலே இருந்தானென்று தேசதிபதி பான் கூன்ஸின் அறிக்கையிற் கூறப்பட்டுள்ளது.

(உ) புத்தளத்து வன்னிமை

மட்டக்களப்பிற் போலப் புத்தளத்திலும் ஒல்லாந்தராட்சிக் காலம் வரை முக்குவ வன்னிமை இருந்தது. புத்தளத்து முக்குவர் எப்போது அங்கு குடியேறினர் என்பதை அறிவதற்கு எதுவித சான்றுகளுமில்லை. ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலந்தொட்டுப் புத்தளத்து வன்னிமை பற்றிச் சில குறிப்புக்கள் கிடைக்கின்றன.

வாட்டிக அபயன் காலத்தில் முக்குவர் புத்தளத்திற்கு வந்து குடியேறினரென வன்னி உபட்ட என்ற நு}ல் கூறுகின்றது. எனினும் இந்நு}ல் துவக்கு, வெடி மருந்து முதலியவற்றைக் குறிப்பிடுவதால் பதினாறாம் நு}ற்றாண்டளவிற் காணப்பட்ட நிலைகளையே இந்நு}ல் திரித்துக் கூறுகின்றதெனக் கொள்ளலாம். கிழக்கிலங்கையிற் போலப் புத்தளத்திலும் மாகன் படையெடுத்து வந்த காலத்திற் புத்தளத்து வன்னிமை ஏற்பட்டிருக்கக் கூடுமென்பது ஆராய்ச்சிக்குரியது.

யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னிநாடுகள் சிலாபம்வரை பரந்திருந்தன வென்று குவேறோஜஸ் சுவாமிகள் கூறியுள்ளார். எனவே கோட்டை அரசு எழுச்சி பெறமுன் யாழ்ப்பாண மன்னரின் ஆதிக்கம் புத்தளத்தில் வந்த அராபிய அறிஞரான இவுன்பற்றுற்றா பட்டாள நகரிலே தான் ஆரியச்சக்கரவர்த்தியைக் கண்டதாகவும், அந்நகரிலுள்ள துறைகளிற் கறுவா பெருந்தொகையிலே குவிக்கப்பட்டிருந்ததாகவும் செப்புகின்றார். இவுன் பற்றுற்றா புத்தளத்தையே பட்டாள நகரென வர்ணித்தாரென்று பல அறிஞர் கருதுவர்.

முக்கர கட்டன என்ற சிங்கள மொழியிலுள்ள நு}ல் புத்தளத்து முக்குவருக்கும் ஆறாம் பராக்கிரமபாகு (1415-67) விற்குமிடையில் நடைபெற்ற போரினைப்பற்றிக் கூறுகின்றது. புத்தளத்தைச் சேர்ந்த முக்குவர் புன்னால, நாகபட்டினம் ஆகிய இடங்களிற் பாளையமிட்டுப் பராக்கிரமபாகுவைத் தாக்கிய போது அவ்வரசன் அமைச்சர்களைக்கூட்டி அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் காஞ்சிபுரம், காவிரிப்பட்டினம், கீழக்கரை முதலிய இடங்களிலிருந்து போர் வீரர்களை அழைத்துத் தன் படையிலே சேர்த்ததாகவும் இந்நு}ல் கூறும். இவ்வாறாக பராக்கிரமபாகு வரவழைத்திருந்த படைகள் புத்தளத்திற்குச் சென்று மூன்று மாதங்களாக முக்குவருடன் கடும்போர் நிகழ்த்திய பதின் அவ்வன்னிமையைக் கைப்பற்றின. அத்துடன் பராக்கிரமபாகுவின் ஆட்சி ஏற்பாடாகியது. பரக்கும்ப சிரித என்ற நு}ல் பராக்கிரமபாகு முக்கரஅரசனை நிர்மூலனஞ் செய்தானென்று கூறுகின்றது. பராக்கிரமபாமகுவிற்கும் இம்முக்கர அரசனுக்குமிடையில் நடைபெற்ற போரே முக்கர கட்டனவில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாகு புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றியிருந்தும் அங்கு வன்னியரின் அதிகாரம் மறையவில்லை.

பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் புத்தளத்து வன்னிமை பற்றி அரிய சான்றுகளைத் தருகின்றன. ஏழாம் புவனேகபாகு நவரத்தின வன்னியனுக்குக் கொடுத்த செப்பேட்டில் லுணுவில என்னுமிடத்திலிருந்து அவ்வன்னியன் புத்தளத்தை ஆண்டானென்பதை அறியமுடிகின்றது. மேலும் இவ்வாவணம் புத்தளத்திலுள்ள முத்திரகூடம் என்ற நீதிமன்றம் பற்றியும் தகவல்களைக் கொண்டுள்ளது. அம் மன்றத்திலிருந்த பதினெட்டு உறுப்பினரும் ராஜவன்னியர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தனர். மேலும் அவ்வன்னியர் பல சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தனர் தலைமுறை தலைமுறையாக அவ்வன்னியரின் சந்ததியினர் முத்திரகூடத்தின் உறுப்பினராயிருப்பதற்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அரசனுக்குரிய வரிகளைச் செலுத்தும் பொறுப்பிலிருந்து விடுபட்டிருந்ததோடு குற்றங்களைச் செய்யினும் அவற்றிற்கான தண்டனைகளைப் பெறாத வாய்ப்பினையும் அவர்கள் பெற்றார்கள். அத்துடன் அவர்களின் உறவினரும் ஊழிய சேவையிலிருந்து அவகாசம் பெற்றிருந்தனர்.

கணையாழி. கவசம், சாமரம், பவளக்குடை, வெள்ளிவாள் போன்றவற்றைத் தம் சமக்கட்டாகப் புத்தள முக்குவவன்னியர் பெற்றிருந்தனரென்பதை மாதம் பையிலிருந்த தனியவல்லபன் வழங்கிய சேப்பேட்டின் வாயிலாக அறியலாம்.