Thursday, December 1, 2011

தீவலூர் நயினார்:


 ஏற்க்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலத்திற்கு மேற்கேட்யுள்ள தீவலூரில் வாழ்ந்த தம்மட்டான் நயினார் கொத்தைச் சார்ந்தவர்கள் சோழர்கால முதல் இப்பகுதியில் வரிவசூல் செய்யும் உரிமையை வழிவழியாகப் பெற்று வந்தனர்.இதன் விளைவாகத் தமிழகத்தை ஆட்சி செய்த விசயநகர மன்னர்களும் இந்நயினார்களுக்கே அவ்வுரிமையைக் கொடுத்திருந்தார்.அப்போது அவ்வுரிமையை பெற்றவர்தான் தம்மட்டான் நயினார்.

இவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அவள் கல்வியிலும் அழகிலும் சிறந்தவளாக விளங்கினாள்,தன் மகள் திருமண வயதை எட்டியதால் அவளுக்கு ஏற்ற மணமகனை தேடி வந்தார்.இதன் விளைவாக நயினாரின் நெருங்கிய உறவினர்களும்,சமீன்தார்களும்,பாளையக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு அவளை திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர் இவர்களைப் போன்றே நயினாரின் மகளின் அழகினை கேள்வியுற்ற மன்னனும் தாம் திருமணம் செய்து கொள்வதாக விரும் தலைநகரிலிருந்து பலமுறை மடல் அனுப்பினான்.

தமது ஒரே மகளுக்கு தம் இனத்திலேயே அவளது மனத்திற்கு ஏற்ற மணமகனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருந்தார்.இதுவே அவரின் மகளின் விருப்பமாகவும் இருந்தது.

இச்சூழ்நிலையில் மன்னரின் மடலைப்பற்றி கவலைப்படாமல் தம் மகளுக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பணியில் தீவிரமாக இருந்தார்.திடீர் என்று ஒரு நாள் அதிகாலையில் தமது வீட்டின் முன் சில குதிரை வீரர்கள் வந்திருப்பதாக வேலையாள் வந்து கூறியவுடன் அதிர்ச்சியுற்று எழுந்து வாசல் நோக்கி சென்றார்.இவ்வாண்டிற்கான வரிவசூல் கணக்கையும் தலைநகருக்கு அனுப்பியாகிவிட்டது,பிறகு ஏன் வீரர்கள் வந்துள்ளனர் என்று நினைத்தவாறு அவர்களை நோக்கி நடந்தார்.வீரன் ஒருவன் அரசன் தங்களுக்கு மடல் கொடுத்துள்ளதாகக் கூறி தங்களிடமிருந்து இதற்கான பதில் மடலை நாளைக்குள் பெற்று வருமாறு கட்டளையிட்டுள்ளதாகக் கூறினான்.

மடலில் மன்னன் நயினாரின் மகளை திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் இருப்பதாகவும்,நாளைக் காலைக்குள் திருமணத்தேதியை வீரர்களிடம் கூறிவிடவும் இல்லையேல் தங்களது குடும்பம் நாடு கடத்தப்படும் என்று மடலில் குறிப்பிட்டு இருந்தான்.மடலில் இருந்த செய்தியை கேட்டவுடன் தம்மட்டான் நயினாரின் குடும்பமும் அவர்களது உள்ளூர் உறவினர்களும் அதிர்ச்சியுற்றனர்.மேலும் மன்னனின் இனமும்,மொழியும் தம் இனத்தோடு என்றுமே ஒத்துப்போகாது என்பதில் மக உறுதியுடம் தம்முறவினர்களும் இருப்பதைக் கண்ட நயினார் பெருமிதம் கொண்டார்.அன்று மாலை தன் சகதோர்களுடனும் உள்ளூர் உறவினர்களுடனும் கலந்தாலோசித்த நயினார்,மன்னரிடமிருந்து தன் மகளை காப்பாற்ற வேண்டி ஊரை விட்டு சென்று விடுவது நல்லது என்றார்.அதற்குள் உள்ளூர் உறவினர்களும் நீங்கள் ஊரை விட்டு சென்றுவிட்டால் மன்னனின் சினத்திற்கு நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும்,எனவே நாங்களும் உங்களுடன் வருகிறோம் என்றனர்.இவ்வாறு அன்று இரவே யாருக்கும் தெரியாமல் தம்மட்டான் நயினார் வழிவழியைச் சார்ந்த ஏறக்குறைய 20 பேர் பொதிமாட்டின் மீது தமக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு தீவலூரை விட்டு நேர் கிழக்கு திசையில் பயணித்தனர்.

               நெடுந்தொலைவு நடந்து வந்ததால் நயினாரின் மகளுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது.வரும் வழியில் புதர்கள் நிறைந்த பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்தது.அக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக தங்களிடமிருந்து கயிற்றில் குடத்தைக் கட்டி கிணற்றினுள் விட்டனர்.ஆனால் தண்ணீர் எடுக்கும் அளவுக்கு கயிறு நீளமாக இல்லாததால் தம்மட்டான் நயினார் தன் மகளை கயிற்றின் மூலம் கிணற்றில் கிணற்றில் இருந்த படிகட்டு பகுதிக்கு இறக்கிவிட்டார்.அவளது தாகம் தீர்ந்த பிறகு கிணற்றினுள் இருந்துக் கொண்டு மேலிருந்த மற்றவர்களுக்கும் தண்ணீரை குடத்தில் மொண்டு கயிற்றில் கட்டி விட்டாள்.மேலிருந்தவர்களும் தாகம் தணிந்தனர்.அதற்குள் கீழ்வானம் விடியலுக்கு ஆயத்தமாவதைக் கண்ட நயினார் வந்துள்ள மன்னனின் குதிரை வீரர்கள் எப்படியும் தன் மகளை கவர்ந்து விடுவார்கள் என்றுணர்ந்து,தம் அன்பு மகள் தாகம் தணிந்து பாழடைந்த கிணற்றினுள் இருக்க கயிற்றை சுருற்றிக்கொண்டு தமது பயணத்தை உறவினர்களுடன் தொடர்ந்தார்.
இவ்வாறு இவர்கள் அனைவரும் இப்பொழுதுள்ள கருங்குழிக்கு நேர் தெற்கே மரங்கள் நிறைந்த பள்ளமான பகுதியை அடையவும்,விடிவதற்கும் சரியாக இருந்தது.இப்பகுதி தமக்கு பாதுகாப்பானது என்றுக் கருதிய நயினார் தன் உறவினர்களுடன் அங்கேயே தங்கினார்.இவ்வாறு 40 நாட்கள் சென்றன.ஒரு நாள் இரவு நயினார் உறங்கிக் கொண்டு இருக்க்கும் பொழுது பாழடைந்த கிணற்றினுள் விட்டு வந்த அவரின் அன்பு மகள் கனவில் தோன்றி தாம் இறந்துவிட்டதாகவும்,இனிமேல் அரசனால் நம் வழிவழியினர்க்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வரும்காலங்களில் நம் உறவினர்கள் வீட்டில் நடைபெறுகின்ற அனைத்து சுபநிகழ்ச்சிகளின் பொழுதும் பிற கடவுளர்களுக்குப் படையல் செய்யும் பொழுதும் தனியாக 13 பள்ளமிட்டு.என்னை வணங்கி வந்தால்,உங்கள் குலம் தழைக்கும்,செல்வம் பெருகும்.மேலும் இங்கிருந்து நேர் வடகிழக்கு திசையில் சென்று உங்களுக்கு ஏற்ற இடத்தை தேர்ந்துஎடுத்து தங்கிக் கொள்ளவும் என்று கூறி மறைந்தாள்.தம் மகள் கனவில் தோன்றிக் கூறிய செய்திகளை எண்ணி வருந்திய நயினார் அவ்விடத்திலேயே தம் மகளுக்காக ஒரு பெரிய பூசை செய்ய முற்பட்டார்.தம் மகள் கூறியது போன்று அவளுக்கு மிக பிடித்தமான பொங்கள் சமைத்து அதை13 பள்ளங்களில் வைத்து படைத்தார்.அதன் பிறகு அவர்கள் அவ்விடத்தை விட்டு நிலையாகக் குறியேறிய பகுதிதான் இப்பொழுது உள்ளா நயினார்குப்பமாகும்.

தம்மட்டான் நயினார் தம் மகளுக்காகப் பொங்கல் வைத்து படைத்த அவ்விடத்தை இன்றும் பொங்கப்பள்ளம் என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர்.

நயினார்குப்பம் கோயில்:
============================================

இப்படியாக சில ஆண்டுகள் ஆயின.தம்மட்டான் நயினாருக்கும் வயதாகி விட்டது. எனவே தாம் இறப்பதற்குள் தம் மகளுக்காக ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தார்.அதன் விளைவாக தம் ஊருக்கு தெற்கே உள்ள நாட்டேரியின் அருகே மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் தம் மகளுக்காக கருவறை,அர்த்த மண்டபம் மற்றும் ஏகதலவிமான அமைப்போடு எளிய கலை நுணுக்கத்தோடு ஒரு கோயிலை கட்டியுள்ளார்.

கருவறையினுள் தாம் நாள்தோறும் வணங்கும் ஐயனார் சிலைக்கு அருகே தம் மகளின் சிலையை சுவாலகேசத்தோடு அம்மன் சிலையைப் போன்று அமைத்து அதன் அருகே வாள் ஏந்திய வீரன் ஒருவன் பாதுகாப்பாக இருப்பது போன்று ஒரு சிற்ப்பத்தையும் அமைத்துள்ளார்.கோயிலின் முன்பாக ஏறக்குறைய 25 அடி உயரத்தில் மிக பிரமாண்டமான இரண்டு குதிரையின் சுதை சிற்பங்கள் உள்ளன.இதில் தெற்கு புறம் உள்ள குதிரையை தம்மட்டான் நயினார் கட்டு வித்து வடக்கு புறம் உள்ள குதிரையை கட்டுவித்தவர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் ஒருவர்.மேலும் இம்மன்னர் இங்கு குதிரை கட்டியமைக்கு பின்னணியில் ஒரு கதையுள்ளது.