Sunday, December 4, 2011

அரசியலில் சாதி.


இந்தியா முழுவதும் தேர்தல் நடத்த முடிந்த சனநாயக நாட்டில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், என்ற மூன்று ஊர்களில் தேர்தல் நடத்த முடியவில்லை, மேலவளவு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரானதற்கு முருகேசன் கொடுத்தது தன் தலையோடு சேர்த்து மேலும் ஐந்து உயிர்கள், கண்டதேவியையும் அங்குள்ள தேரும் தாழ்த்தப்பட்ட மக்களால் இழுக்க முடியவில்லை இதற்கெல்லாம் ஆணி வேர் என்ன? காரணம் என்ன என்றால் சட்டென்று சொல்வோம் சாதியென்று ஆனால் இந்த ஊர்களை நம்மில் பலர் முன் பின் பார்த்தில்லை, முன் பின் பார்த்திராத நேரடியாக நம் தொடர்பில்லாத ஊர்களில் நடக்கும் கொடுமைகளையும் சாதியின் தாக்கத்தையும் உணர்ந்த நம்மால், நம்மிடத்தில் நம் பெயரில் ஆரம்பித்து,


சாப்பிடும் உணவு முறை, பண்டிகைகள், கடவுள் வழிபாடு, தொழில்,
 உறவுகள், திருமணம், உடை உடுத்தும் முறை, சாவுக்கு சாங்கியம்
செய்வது என பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனையிலும் நம்மிடம்
 இருக்கும் சாதியின் தாக்கத்தை நாம் அறியாமல் சாதியின் இருப்பிற்கு
 அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் கை காண்பிப்பது, நம்
ஒவ்வொருவரிடமும் உள்ள ஆணாதிக்கத்தை அறியாமல்
ஆணாதிக்கத்தை யாருடைய சட்டைப்பையிலோ தேடுவது போலத்தான்,
சாதியின் இருப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம்
ஒவ்வொருவரும் காரணம் ஒரே வித்தியாசம் சிலரின் பங்களிப்பு அதிகம்,
 சிலர் பங்களிப்பு குறைவு சிலரின் பங்களிப்பு மிக மிக குறைவுஅவ்வளவே.
இன்று சிதம்பரம் நடராசர் கோவில் பிரச்சினை கூட தயிர்சாதம் VS கறிசோறு
என்று விவாதிக்கப்படுகின்றது.)
காஷ்மீரிலிருந்து கர்நாடகம் வரை பல இடங்களில் வலுவாக இருக்கும்
ஆயுத போராட்ட குழுக்கள் தமிழகத்தில் மட்டும் தற்போது வலுவாக
இல்லாமைக்கு காரணம் என்ன என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால்
கிடைக்கும், மிக மிக முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை விட
தமிழகத்தில் ஓரளவிற்காவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்த பட்ட மக்களின்
 பங்களிப்பு அரசியலில் இருப்பது, இரண்டாவது காரணம் பல இளைஞர்
சக்திகள் திரைப்படங்களிலும் அரிதாரம் பூசிய திரைப்பட நடிகர்கள்
பின்னாலும் விழுந்து கிடப்பது, இது உடல் வலியை மறக்க கஞ்சா குடித்து
மயக்கத்தில் கிடப்பது போன்றது.
மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால்,
இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society)
விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று

2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார்
சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது.
 (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள்
கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று
மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.
திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்தமிழ் நாடு போராட்டத்தில்
இறங்கி பின் ஆட்சியையும் கைப்பற்றியது இந்தி மேலாதிக்கத்தை
தமிழகத்திலிருந்து திமுக விரட்டியடித்தது, ஆனாலும் 70களின்
மத்தியில் புலவர் கலியபெருமாள் தலைமையில் வர்கப்போராட்ட
சித்தாந்தத்தில் ஆயுத போராட்டம் (CPI-ML இந்திய
கம்யூனிஸ்ட்-மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) உருவானது, கம்யூனிஸ்ட்களின்
தேசிய சித்தாந்தம் தமிழக நலன்களை பலி கொடுப்பதாக கருதினார்,
பின்னர் தமிழக நலன்களின் புறக்கணிப்பை முன்னிறுத்திய புலவர்
கலியபெருமாளுக்கும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இந்திய தலைமைக்கும்
ஏற்பட்ட பிணக்கினால் இந்த இயக்கத்திலிருந்து தனி தமிழ்நாடு
கோரிக்கையுடன் புலவர் கலியபெருமாள் வெளியேறினார், தமிழரசன்
தீவிரவாத குழு என அரசால் தடை செய்யப்பட்டுள்ள தமிழர்
விடுதலைப்படையை ஆரம்பித்து தனி தமிழ்நாடு கோரிக்கையை
முன்வைத்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தார், தனி தமிழ்நாடு
கோரிக்கை தான் என்றாலும் தமிழரசன் உருவாக்க நினைத்ததாக
அறியப்பட்டது சோசலிச தமிழகம், தமிழீழப்போராட்டம்
ஆயுதப்போராட்டமாக உருவான போது புளோட்,ஈரோஸ்
இயக்கங்களும் ஏன் விடுதலைப்புலிகளின் இயக்கமும் கூட
 சாதி வேறுபாடுகளற்ற சோசலிச தனித்தமிழீழம் தான் கொள்கையாக
 இருந்தது என்பதை சில பத்திரிக்கைகளின் மூலம் அறிந்துள்ளோம்.

தமிழர் விடுதலைப்படையில் இருந்தவர்களை நோக்கினால் அவர்கள்
பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருந்தனர், இன்னும் குறிப்பாக
சொல்லப்போனால் அவர்களில் பெரும்பான்மையினராக இருந்தது
 வன்னியர்களும், தலித்களும், இவர்கள் தான் மத்திய அரசை எதிர்த்தும்
காவல்நிலையங்களை தாக்கிய போதும் பெரும் நிலக்கிழார்களையும்,
சாதிவெறி காரணிகளையும் எதிர்த்து ஆயுதப்போராட்டங்கள் நடத்தினர்
அந்த நேரத்தில் திராவிட இயக்கங்களிலும், காங்கிரஸ் இயக்கத்திலும்
 அந்த வட்டாரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இவ்விரு இன
மக்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பது என்ற அளவில் மட்டுமே
இருந்தது, மற்றபடி அரசியல், அதிகாரங்கள் சில பணக்கார உயர்
சாதியினரிடமும் சில பணக்கார வன்னிய பண்ணையார்களிடமும்
மட்டுமே இருந்தது, ஒரு சாதாரண விடயத்திற்கு, சான்றிதழுக்கு
கையெழுத்து வாங்க இவர்களை பார்க்க வேண்டுமென்றாலும் கூட
கிட்டத்தட்ட அடிமை மாதிரி கைகட்டி வாய்பொத்தி தான் கேட்க
வேண்டிய சூழல், இது ஏற்படுத்திய கோபம், இந்த மக்களுக்கான
அரசியல் வெற்றிடம் இவர்களை தமிழர் விடுதலைப்படையை
நோக்கி ஈர்த்தது.
1964ம் ஆண்டு அமெரிக்கன் பீஸ் கேர் தொடக்க விழாவில் அமெரிக்க
அதிபர் ஜான்.எஃப்.கென்னடி கூறியது

pockets of poverty any where thretens proesperty everywhere

எந்த ஒரு சமூகம் வறுமையிலும் ஏழ்மையிலும் கிடந்தாலும் அந்த
சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு
இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.

இந்த காரணி தான் அந்த அடித்தட்டு மக்களை ஆயுதப்போராட்டத்திற்கு
 இழுத்து சென்றது. அன்று தமிழர் விடுதலைப்படை தனித்தமிழ்நாடு
கேட்டதற்கும் அதன் ஆயுத போராட்டத்திற்கு கூறிய காரணங்கள் ஒரு
சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் இன்றும் அப்படியே இருந்தாலும்
இன்று அந்த ஆயுதகுழுக்கள் வலுவிழந்ததற்கு காரணத்தை யோசித்தால்
 சில விடயங்கள் புரியும்.
தமிழர் விடுதலைப்படை அரசின் இரும்பு நடவடிக்கைகளினால்
வலுவிழந்தது என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர்
 விடுதலைப்படையின் தலைவர் தமிழரசன் கொல்லப்பட்டாலும்
அதன் பிறகு தொடர்ந்து தெய்வசிகாமனி என்ற லெனின் தலைமையில்
தமிழரசனையும் விட வீரியமாக செயல்பட்டது, அவரும் வெடிகுண்டு
வெடித்து இறந்தபின் சில ஆண்டுகளில் அந்த இயக்கம் பிளவுண்டாலும்
அதன் மொத்த செயல்பாடுகளும் வீரியம் இழந்ததற்கு காரணம் பாட்டாளி
 மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தை இயக்கமும்.

அடித்தட்டு மக்களுக்கான சமூக, அரசியல் வெற்றிடத்தினால் தமிழர்
விடுதலைப்படையால் ஈர்க்கப்பட்டவர்களை பாட்டளி மக்கள் கட்சியும்
 விடுதலை சிறுத்தைகளும் ஈர்த்தது, ஆயுதப்போராட்டமே அடித்தட்டு
மக்களின் அரசியலுக்காக என்று தமிழர் விடுதலலப்படையினால்
கூறப்பட்டது, ஆனால் அதற்கான அந்த ஆயுதப்போராட்டம் ஆபத்தானது,
தற்போதுள்ள நிலையில் ஆயுதப்போராட்டம் வெற்றி பெறாது, நிச்சயம்
பலி வாங்கிவிடும், இந்திய சமூகத்தில் வர்க்கப்போராட்டமும் கூட
சாதியால் ஆனது எனவே வன்னிய சாதி மக்களுக்கு பாட்டாளி மக்கள்
கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பும்
அவர்களின் அரசியல், சமூக வெற்றிடத்தை நிரப்ப முனைந்தது, மேலும்
வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் பெற்ற வெற்றியும்
அதே சமயத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களும், அதில்
அரசாங்கத்தின் பங்கும்(இதைப் பற்றி பிறகு விரிவாக பேசலாம்)
இந்த மக்களை மேலும் கட்சிகளுடனான பிணைப்பை இறுக்கியது
பாமக, விடுதலை சிறுத்தைகள் இயக்கங்களில் இணைத்து கொள்வது
ஆயுத போராட்ட குழுக்களில் இணைத்துகொள்வதை விட பாதுகாப்பானது
அதே சமயம் இந்த கட்சிகளினால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும்
பயன் ஆயுத குழுவினால் அடையும் பயனைவிட மிக அதிகம், வாக்கு
அரசியலுக்காக திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்ற அனைத்து கட்சிகளும்
தொடத்தயங்கிய பல இடங்களில் பல தேவைகளில் இந்த கட்சிகள்
அதிரடியாக போராடியது, அதாவது ஆயுத போராட்ட குழுக்களிடம்
இருக்கும் ஆக்ரோசத்தோடும் ஆனால் அதே சமயம் ஆயுதகுழுக்களினால்
 ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் பல இடங்களில் பல தேவைகளுக்காக
போராடியது, ஆனால் இந்த ஆக்ரோசமே இந்த இயக்கங்களை வன்முறை
 இயக்கங்களை போல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொது மக்களிடம்
சென்று சேர்க்கும் காரியத்தை செவ்வென செய்தன.

வட மாவட்டங்களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த
முதலியார்(உடையார்), ரெட்டியார் மற்றும் சில பணக்கார
படையாட்சிகளிடம்(வன்னியர்) இருந்த பண்ணையார் அரசியல்
சட்டென்று அடித்தட்டு மக்களிடம் வந்தது, அம்பாசிடர் காரிலிருந்து
இறங்காமலே ஓரிரு குடும்பங்களிடம் பேசி மொத்த ஊரையும் ஏதாவது
ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்து கொண்டிருந்த பண்ணையார்
அரசியல் பாட்டாளி மக்கள் கட்சியாலும், விடுதலை சிறுத்தைகளினாலும்
முடிவுக்கு வந்தது, காரிலே வந்து காரிலே சென்றவர்களை மட்டும்
கொண்டிருந்த அரசியல் அடித்தட்டு ஆட்களுக்கும் வந்து சேர்ந்தது.
வன்னிய, தலித் மக்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்
வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள்,
ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன, ஆனால்
இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள்
என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது, இது மக்களிடம்
ஏற்பட்ட மாற்றத்தினல் நடந்தது, இதற்கு காரணம் பாமக, விடுதலை
 சிறுத்தைகள் இவர்களின் இந்த சாதி அரசியலினால் திமுக,அதிமுக,
காங்கிரஸ் என ஆரம்பித்து அத்தனை கட்சிகளும் இதே அரசியலுக்கு
வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்ன கொடுமை இது வன்னிய தொகுதி, தலித் தொகுதி என
அடையாளப்படுத்த படுதல் ஒரு வளர்ச்சியா என்பவர்கள் ஒரு
நிமிடம் பொறுமை காக்கவும், வன்னியசாதி என்ற இடத்திற்கு பதில்
அறியாமை, கல்வியறிவு பெரும்பாலும் சென்றடையாத, வெட்டி சாதிப்
 பெருமை பேசும் ஒரு வளர்ச்சியடையா சமூகம் என்றும் தலித் என்ற
 இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு இல்லாமல், மனிதனை
மனிதாக மதிக்கப்படும் ஒரு மரியாதைக்கூட பெற முடியாத சமூகம்
என்று பாருங்கள் அப்பொழுது தெரியும் இந்த அடையாளம்
முற்போக்குத்தனமானதா? அல்லது பிற்போக்குத்தனமானதா என்று.
 வளர்ச்சியடையா சமூகங்களை அவர்களின் அரசியலை முன்னிறுத்து
ம் கட்சிகள் தோல்வியடைந்தால், அவர்களுக்கு அரசிலும்
அரசாங்கத்திலும் இடமில்லையென்றால் அந்த மக்களும் சேர்ந்தே
தோல்வியடைகின்றனர், ஜான்.எஃப்.கென்னடி சொன்னது போல அந்த
சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு
இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.