Thursday, December 1, 2011

பரராசசேகரன்:


சிதம்பரத்திலே பரராசசேகரனின் பெயரைக் கொண்ட மடம் ஒன்று இன்றும் காணப்படுவதால் இந்தப் பட்டயத்திற் கூறப்படுவன உண்மையாகவே நடைபெற்றிருக்க வேண்டும். பட்டயத்திலே குறிப்பிடப்பெற்றுள்ள பரராசசேகர மகாராசன் சங்கிலிங்கு முன் அரசு புரிந்த மன்னனே என்று கொள்வதற்கிடமுண்டு. சங்கிரலியின் முன்னோனாகிய பரராசசேகரன் ‘வடதேசம்’ சென்றதற்கு யாழ்ப்பாண வைபவமாலை சான்றளிக்கின்றது.

கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகுவின் (1450-67) சேனாதிபதியான செண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா) யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் (1450-67) கனகசூரியசிங்கையாரியன் வடதேசம் சென்றிருந்தான். அவனுடைய புதல்வர்கள் திருக்கோவலு}ர் அரச குடும்பத்தாருடன் வாழ்ந்து அரசு நெறியும் படைக்கலப் பயிற்சியும் கற்றனர். இவ் விளவரசருள் ஒருவனே கனகசூரிய சிங்கையாரியனின் பின் முடி சூடிய பரராசசேகரன். இவனைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை மேல் வருமாறு கூறுகின்றது.

... “... சில காலத்தின் பின் இராசாவின் முதற்ம குமாரன் சடுதி மரண முண்டுபட்டு இறந்து போனான். சங்கிலி நஞ்சூட்டிக் கொன்றானென்பது ஒருவருக்கும் தெரியாதே போயிற்று. மூத்த குமாரன் இறந்து போக அரசன் தன் இளைய குமாரனாகிய பண்டாரம் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி வைத்துத் தீர்த்தமாடுவதற்குப் பரிவாரங்களுடனே கும்பகோணத்துக்கு யாத்திரை பண்ணினான். சோழ தேசத்தரசனும் மகாமக தீர்த்த மாடுவதற்குப் பரிவாரங்களுடன் அவ்விடத்தில் வந்திருந்தான். அவ்வித்தில் அச்சங்கிலி செய்த குழப்பத்தினால் அவனையும் பரராச சேகரனையும் பரிவாரங்களையும் அவ்வரசன் பிடித்துச் சிறையில் வைத்தான். படை சேனைகளுடன் பின்னாகப் போன பரநிருபசிங்கம் அதைக் கேள்விப்பட்டுப் போய்ச் சண்டை ஆரம்பித்துக் கடும் போர் பண்ணுகையிற் பரநிருபசிங்கத்துக்கு வலுவான காயங் கிடைத்தது. அப்படியிருந்தும் அவன் அந்தக் காயங்களையும் எண்ணாமல், வீராவேசங்கொண்டு போராடி அவ்வரசனைப் பிடித்துச் சிறையிலிட்டு பரராச சேகரன் முதலானோரைச் சிறையிலிருந்து நீக்கி, மூன்று மாதம் அங்கேயிருந்து தனக்குப் பட்ட காயங்களையும் மாற்றினான். அப்பொழுது சோழ நாட்டரசன் தன் இராட்சியத்தைத் தான் ஆளும்படி விட்டால் திறை யிறுப்பதாக வேண்டிக்கொள்ள அவனிடத்தில் அதற்கேற்ற பிணை வாங்கிக்கொண்டு இராச்சியத்தை ஒப்புவித்து விட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினான்.”

யாழ்ப்பாண வைபவமாலை கூறுமாப் போல் பரராச சேகரன் சோழ அரசனைத் தோற்கடித்துத் திறை பெற்றானென்று கொள்வதற்கு எதுவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் இக்காலத்தில் யாழ்ப்பாண மன்னர் விஜயநகர மேலாணைக்குள் அடங்கி யிருந்தனர். கிருஷ்ண தேவராயர் (1509-30) அச்சுதராயர் போன்றோர் ஆரியச்சக்கரவர்த்திகளிடமிருந்து திறை பெற்றனரென்று கொள்வதற்கு விஜய நகரச் சாசனங்கள் சான்றளிக்கின்றன. தமிழ் நாடுகளில் விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக அதிகாரம் செலுத்திய நாயக்கர்களிடையே ஏற்பட்ட ஏதோவொரு போரற் பரராசசேகரன் பங்கு கொண்டமையை யாழ்ப்பாண வைபவமாலை திரிபுபடுத்திக் கூறுகின்றது. எனினும் பரராச சேகரனோடு படைத் தலைவனாகப் பிரநிருபசிங்கமுஞ் சோழநாட்டுக்குச் சென்றானென்று இந் நூல்குறிப்பிடுவது கவனித்தற்பாலது. செப்பேடும் பரநிருபசிங்கப் படையாண்டவர் பற்றிக் குறிப்பிடுகின்றது.