பதின்மூன்றாம் நூற்றாண்டுப் பாண்டிய மன்னரின் ஆவணங்களில் வரும் பெரும்படையோர் என்ற சேனைவன்னியர் வட்டமென்ற குழுவினையுங் கொண்டிருந்தது. மதுரைச் சுல்தான்களாண்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களிலும் வன்னியர் பற்றிய குறிப்புகளுள்ளன.
வன்னியர் நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்த மலையமான்களின் படைகளில் வேளைக்காரர் இடம்பெற்றிருந்தனர் எனவே வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயகன் என்ற பட்டத்தைப் பெற்றனரெனவும் ஊகிக்கலாம்.
சோழப் பேரரசு நலிவுற்ற பின் அதன் படை அமைப்பும் அழியத் தொடங்கியது. பதினாலாம் நூற்றாண்டிலிருந்து தென்னாட்டை ஆட்சி புரிந்த விஜயநகர மன்னர் தமிழகத்திற் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் தமிழ்நாட்டுப் படைகளையன்றிக் கன்னட, தெலுங்குப் படைகளையே கூடுதலாகப் பயன் படுத்தினார்கள். அவ்வாறான சூழ்நிலையில் வன்னியர் முற்காலத்திற் போல படையமைப்பிற் சிறப்பிடம் பெறவில்லை. எனவே அவர்கள் விவசாயம் முதலிய தொழில்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.