Thursday, December 1, 2011

காளிங்கராயர்:


ஆகாயமே சாமி,ஆண்களே சமைக்க வேண்டும்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு,வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் மருங்கூற் அங்கு வழும் வன்னிய இன மக்களில் காளிங்கராயர் என்ற பட்டப் பெயருடைய பங்காளிகள். தங்கள் குலதெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர் இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும் பண்பாட்டு தொன்மையுடையதாகவும் விளங்குகிறது. சிறு தெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்பிடபடும் வழிபாட்டு இடங்களில் வேல்,சிலை,மரம் என ஏதேனும் ஒர் அடையாளம் காணப்படும்.ஆனால் ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை ஆகாசம் எனப்படும் வானத்தில் அவர்களின் வீரன் இருப்பதாக நம்புகின்றனர் என்பதைக் கடவுளின் பெயரே உணர்த்திவிடும்.

பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு ஆகாச வீரனுக்குப் பூசை செய்வது வழக்கம்.ஆடு,பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டிவிட்டு அவற்றைப் பலியிடுவர் இவ்வாறு உயிர்பலி கொடுத்து நடத்தப்படும் பூசை,பிலிபூசை எனக் குறிப்பிடப்படுகின்றன.(பலி பூசை என்பது பிலி பூசை என மருவியிருக்கலாம்.) உயிர்பலியின்றி,பொங்கல் மட்டும் பொங்கிச் செய்யப்படும் பூசை பா பூசை (பால் பூசை)எனப்படும். பூசைக்குப் இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தபடுகிறது.மண்பானை,சட்டி,அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றன. மஞ்சள்,மிளகு,ஆகியவற்றைத் தவிர உப்பு,புளி,மிளகாய்,என எதையும் பயன்படுத்துவதில்லை நெல்லைக் குற்றுவது,சமைப்பது,மஞ்சளரைப்பது என அனைத்து பணிகளையும் ஆண்களே செய்ய வேண்டும்.பூசைக்குப் பொருள்களைக் கொண்டு செல்லும்போதும்,மஞ்சளரைத்து எடுத்துச் செல்லும்போதும் எதிரில் யாரும் வராமலிருக்கும்படி அறிவிப்புச் செய்து அதன் பிறகே எடுத்துச் செல்வர்.சமைத்த உணவு வகைகளைப்படைப்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவது இல்லை.பூவரச மர இலையைப் ஒன்றுடன் ஒன்று இணைத்துச் சீவாங்குச்சியால் தைத்துத் தையல் இலையாக்கிப் பயன்படுத்துகின்றானர்.இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகின்றது.

காட்டு மல்லிப் பூவைத்தான் பூசைக்கும் பயன்படுத்துகின்றனர்.படைக்கும்போது படையல் செய்பவர் வாயைக்கட்டிக் கொண்டுதான் படைக்க வேண்டும்.மேலும் பூசைக்குச் சூடம்,சாம்பிராணி தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்துவதில்லை.ஒவ்வொரு இலைக்கும் முன்பாகச் சூடத்தைக் கொளுத்தி எரியச் செய்வர்.பூசையில் கலந்து கொள்ளும் ஆண்,பெண் சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில்தான் வரவேண்டும்.

கறுப்பு நிற நாடாவோ,அரைஞான் கயிறோ அணியக் கூடாது.ஆகாச வீரனுக்குக் கறுப்பு ஆகாது.என்பதால் அக்குடும்பத்தினர் எப்பொழுதும் கறுப்பு நிற அரைஞான்கயிறு அணிவதில்லை. பூசை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு.ஆகாச வீரன் பெற்றுக் கொள்வார் என்று நம்புகின்றனர்.இந்தப் பூசையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச் சடங்கு போலவே அமைந்துள்ளன.பூசையன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை.அன்று தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை.(வாங்க என்று அழைப்பதில்லை)உப்பின்றிச் சமைப்பது பூசைப் பொருள்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்வது அப்போது யாரும் எதிரில் வராமலிருப்பது,பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை.எனவே தங்கள் நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருதமுடிகிறது.

இந்தக் காளிங்கராயர்களின் குடும்பம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பங்காளிச் சண்டையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பதை வாய்மொழிக் கதை மூலம் அறியமுடிகிறது.