Saturday, December 3, 2011

தென்னகத்து வன்னிமைகள்




வன்னிய நாயன் என்ற விருதிணைப் பெற்ற குறுநில மன்னர்கள் பற்றிச் சோழர்காலக் கல்வெட்டுக்களிலே தகவல்கள் கிடைக்கின்றன. முதலாம் ராஜேந்திரசோழன் சாளுக்கிய மன்னனுடன் வன்னியரேவன் என்ற பிரதானியையும் தோற்கடித்ததாக அவனது கல்வெட்டொன்று கூறுகின்றது. இரண்டாம் ராஜேந்திரனது மெய்க்கீர்த்தியில் அம் மன்னனை எதிர்த்து வன்னி அளவன் போர்புரிந்தானென்று கூறப்பெற்றுள்ளது.

எனினும் இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் ஆகிய பேரரசரின் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக்களிலேயே வன்னியர் பற்றிப் பல குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. தென்னாற்காடு மாவட்டத்துக் திருக்கோயிலு}ர் தாலுகாவிலுள்ள அரகண்ட நல்லு}ர் என்னும் ஊரிற் காண்படும் ஒப்பிலாமணீஸ்வரர் கோயிலிற் பல வேளைக்காரர் வன்னிய நாயகனுக்கு அளித்த வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வேளைக்காரர் கிழியூர் மலையமான் பெரிய உடையானான சற்றுக்குடாதான் வன்னிய நாயகனைப் பாதுகாப்பதென்றும், அவனுக்குக் கெடுதி நேருமிடத்துத் தாமும் அவனுடன் உயிர் நீப்பதென்றும் சத்தியம் செய்தார்கள். அரசனையோ, குறுநில மன்னரையோ பாதுகாக்கும் மெய்க்காப்பாளராக வேளைக்காரர் சேவகஞ் செய்வது வழக்கம். திருக்கோவலு}ரைச் சேர்ந்த கொள்@ரிலுள்ள இராமர்பாறை என வழங்கும் கல்லில் வரையப்பட்டுள்ள கல்வெட்டொன்று கரியனான பலவாயுத வல்லவ மலையமான் என்ற வேளைக்காரன் வன்னிய நாயகனுக்களித்த வாக்குறுதியைச் சொல்கின்றது. இக்கல்வெட்டுக்களில் வரும் வன்னியநாயனுக்கும் வேளைக்காரருக்குமிடையிலான தொடர்பு கவனத்திற்குரியது.

வேளைக்காரர் சோழப் பேரரசரின் மூன்றுகை மகாசேனை முதலிய படைகளிலே சிறப்பிடம் பெற்றிருந்தனர். வன்னியரின் தலைவன் எனப் பொருள்படுகின்ற வன்னியநாயன் என்ற விருதினைப் கொண்ட பிரதானிகள் வேளைக்காரரின் படைத்தலைவர்களாக இருந்தனர் என்று கொள்வதற்க இக்கல்வெட்டுக்கள் ஆதாரமாய் உள்ளன. மேலும் இவை, கிழியூரிலிருந்து ஆண்ட மலையமான்கள் வன்னிநாயன் என்ற விருதுடன் பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடாதான் பட்டங்களையும் பெற்றிருந்தனர் என்பதனையும் அறியத்தருகின்றன. இம் மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் முதலாங் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் சிறப்பிடம் பெறத் தொடங்கினர். இரண்டாம் ராஜாதிராஜன் காலத்துக் குறுநில மன்னனான ராஜராஜசேதியராயன் என்ற மலையான் வாண கோப்பாடி நாடு, செங்குன்றநாடு, மலாடு, உடைக்காட்டுநாடு என்பவை மீது அதிகாரம் பெற்றிருந்தான்.

பங்கல நாட்டை ஆண்ட கங்கமரபில் வந்த குறுநில மன்னரும் வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தனர். மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியிலே கூத்தாடுந்தேவன் பிருதுவி கங்கனான வன்னிய மகாதேவனும் அவன் பின் அவன் மகனான அழகிய சோழன் வரந்தரும் பெருமாள் என வழங்கிய சோழேந்திரசிங்கப் பிருதுவி கங்கனும் அதிகாரம் செலுத்தியதாகத் திருவண்ணாமலையில் உள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் கூத்தாடும் தேவன் பிருதுவி கங்கன் ஆனைகட்டின என்ற விருதினையும் பெற்றிருந்தான். ஒருயானைப் படையை எதிர்த்துப் போரில் ஈட்டிய சாதனையின் பயனாகவே இவன் மன்னனிடமிருந்து இவ்விருதினைப் பெற்றிருக்க வேண்டும்.

செங்கேணிமரபைச் சேர்ந்த குறுநில மன்னரும் வன்னியநாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தார்கள். இக்குலத்தை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் வன்னியநாயகன் சாம்புவராயனெனவும் அழைக்கப் பெற்றான். சிலை எழுபது, வன்னியபுராணம் முதலிய நு}ல்கள் வன்னியரைச் சம்புகுலத்தவரெனக் குறிப்பிடுகின்றனவென்பதை ஈண்டு நினைவுகொள்ளவேண்டும். சாம்புவராயன் என்ற பெயர் சம்பு என்ற பெயரடியாகவே தோன்றியது. செங்கேணி மரபினர் சோழ நிர்வாகத்திலே உயர்பதவிகளைப் பெற்றிருந்தனர். இம்மரபில் வந்த பல்லவராயர் என்ற அமைச்சன் இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில் அரசகருமங்களைச் சிறப்புறக் கண்காணித்து வந்தான்.

பராக்கிரமவாகுவின் படைகளைப் பாண்டி நாட்டிலிருந்து துரத்திய இப்பல்லவராயர் எதிரிலிச் சோழசாம்புவராயரின் மகனென்று பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகின்றது. இவனது சகோதரனான அண்ணன் பல்லவராயனும் படைத் தலைவனாகவிருந்து பராக்கிரமபாகுவின் படைகளைத் தோற்கடித்தான்.

மேலே கூறப்பெற்றவற்றிலிருந்து சோழப்பேரரசர் காலத்துக் கிழியூர் மலையமன்னர், பங்கல நாட்டுக் கங்கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலங்களைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகின்றது. இம் மூன்று பிரிவினரும் ஆண்ட நிலங்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவை. மேலும் இவர்கள் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்தது. வன்னிய நாயன் என்ற பட்டத்துடன் ஆனை கட்டின, சற்றுக்குடாதான் என்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந்தமை இவர்கள் படைத்தலைவர்களாக இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சோழப்பேரரசர் சில பிரதேசங்களில் ஆட்சி அதிகாரத்தைப் படைத்தலைவர்களுக்கு அளித்திருந்தார்கள். படைத் தலைமைப் பதவியும் ஆட்சி அதிகாரமும்பரம்பரை உரிமையாக அமைந்ததால் இவர்கள் தாம் அதிகாரம் செலுத்திய பிரதேசங்களிற் குறுநில அரசராக எழுச்சி பெற்றனர். சோழமன்னனின் ஆற்றலும் அதிகாரமும் நலிவடையக் காலப்போக்கில் இக்குறுநிலமன்னர் சுதந்திரமாக ஆளத்தொடங்கினர். மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி முடிவுற்றதும் வன்னியர் தனியாண்மை செலுத்த நாட்டம் கொண்டனர்.

பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலே தமிழ் நாட்டிற் பாண்டியராட்சி நடைபெற்ற காலத்தில் வன்னியர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் மிக அரிதாகவே உள்ளன. தொண்டைமண்டலத்தில் உள்ள வன்னியர் பாண்டியரின் மேலாதிக்கத்துக்குட் பட்டிருந்திருக்க வேண்டும். உபாஸகஜனாலங்கார என்ற ஈழத்து நு}ல் கலிங்கமாகனது காலத்திற் பௌத்த சங்கத்தவரிற் பலர் நாட்டை விட்டோடித் தமிழகத்திற் பாண்டியரின் சமாந்தனான சோழகங்க தேவனின் ஆதரவில் வாழ்ந்தனர் என்று கூறுகின்றது. இச் சோழகங்க தேவன் பங்கல நாட்டுக் கங்ககுலத்தவனோ என்பது சிந்தனைக்குரியது.

பாண்டிய அரசு தளர்வுற்ற காலத்திற் கொய்சள மன்னனான மூன்றாம் வல்லாளதேவன் தமிழகத்தின் வடபால் தன்மேலாதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். சாம்புவராயர் முதலான வன்னி மன்னர் வல்லாளனின் மேலாணைக்குள் அடங்கி இருந்தனர். கம்பண்ண உடையார் தென்நாட்டின்மீது படையெடுத்துவரப் புறப்பட்டபோது தெற்கிலுள்ள அரசுகளில் வன்னி நாட்டரசர்களையும் அடக்குமாறு புக்கராயர் பணித்ததாக மதுரவிஜயம் என வழங்கும் கம்பராய சரிதம் கூறும். விஜய நகரப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திகளிலே பதினெட்;டு வன்னியரைப் புறங் கண்டமைபற்றிக் கூறப்படுகின்றது. கம்பண்ண உடையார் வன்னி அரசர்கள்மீது பெற்ற வெற்றிகளே இக்கூற்றுகளுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும்.

மக்கென்ஸி என்பவர் தேடிச் சேர்த்த வரலாற்று மூலங்களிலே திருவிடைச்சுரம் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த கந்தவராயன், சேதுராயன் என்ற வன்னிய அரசர்களின் வரலாறு கூறும் பிரதியொன்று காணப்படுகின்றது. இவ்விருவரும் நுழைவதற்கரிய அரண்கள் மிகப் பெரியதாய் அமைந்த திருவிடைச்சுரம் கோட்டையிலிருந்து ஆண்ட காலத்தில் விஜய நகர அரசன் கிருஷ்ணதேவராயர் அவ் வன்னியரின் நாட்டை அடக்குவதற்கென ஒரு பலம் மிக்க படையை அனுப்பி யிருந்தார். பல மாதங்களாகப் போர் நிகழ்ந்தும் விஜய நகரப் படைகள் அக் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே விஜய நகரப் படையில் வந்த பொழிகர் சூழ்ச்சியினாற் கந்தவராயனைக் கைப்பற்றினார்கள். அதனை அறிந்த சேதுராயன் பல நாட்களாகக் கடும் போர் நடத்தினான். எனினும் விஜய நகரப் படைகள் கோட்டையைத தகனர்த்துச் சேதுராயனைக் கொன்றன. அதன் பின் வன்னியராண்ட திருவிடைச்சுரம் விஜயநகர மன்னர் வசமிருந்தது.

பதினைந்தாம். பதினாறாம் நு}ற்றாண்டுகளில் தென்னாட்டை ஆண்ட சில குறுநில மன்னரின் ஆவணங்களில் வன்னியர்பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. சூரைக் குடியை ஆண்ட சூரைக்குடி யரசு பள்ளிகொண்ட பெருமாள் என வழங்கிய அச்சுதராய விஜயாலய முதுகு புறங் கண்டான் என்ற வாசகம் வருகின்றது. திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்றில் அழுந்து}ரரசு திருமலைராசப் பல்லவராயர் பதினெட்டு வன்னியர் கண்டன் எனக் கூறப்பட்டுள்ளான். இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற குறிப்புக்கள் வழமையாக வருகின்றன. எனினும் இக் குறு நில மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிற் கூறப்படுவன ஆதார பூர்வமானவையென்று கொள்ளமுடியாது. விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச் சேதுபதிகள், சூரைக்குடி அரசர் முதலானோர் தத்தம் ஆவணங்களிலே சேர்த்துக் கொண்டார்கள். கிருஷ்ண தேவராயரின் காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னிமைகள் அழிந்துபட்டன.