1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு, வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. அப்போது கூட எனக்கு கோபம் வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன். நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன?) முதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும், வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம் கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒரே வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் இருந்தன. அப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடிமோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர் என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது. ஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை. பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது. ஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர் விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர், ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன் அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது, தனி மனிதனுக்காகவோ (அ) அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.