Tuesday, December 13, 2011

வன்னிநாட்டுத் தெய்வங்கள் - வையாப்பாடல் :


வன்னிநாட்டுத் தெய்வங்கள்

வன்னி நாட்டுக்கு முதலில் வணக்கத்துக்குரிய தெய்வங்களாக வந்தவை காளியும் ஐயனாரும் சடைமுனியுமென வையாபாடல் மூலமாக அறியக் கிடக்கின்றது. வீரநாராயணச் செட்டி இலங்கைக்கு வந்தபோது, குதிரைமலையின் கண் காளியையும், வவ்வாலையென்ற கேணிக்கருகே சடைமுனியையும் சாத்தனையும் தன் திரவியங்களுக்குக் காவலாக வைத்தான். தட்சணகைலாய புராணம், கோணேசர் கல்வெட்டு ஆகியவற்றின் படி அப்பொழுது திருகோணமலையிலே அரன்கோயிலுமிருந்தது. அதுமட்டுமன்றிக் கதிரையம்பதியில் அரன்மகவின் கோயிலுமிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வீர நாராயணச் செட்டி கட்டுவித்த கோயில்களுள் சந்திரசேகரன் கோயிலுமொன்று.

பல காலங்களுக்குப் பின் வந்தவர்கள், காட்டு விநாயகரைக் குலதெய்வமாகக் கொணர்ந்தனர். அவர்களோடு வந்த சிலர் வீரபத்திரனையும் கொண்டு வந்தனர்.

ஆறாம் பரராசசேகரன் காலத்தில் ஐங்கரன் குமரேசன், மூத்தநயினார், சித்திரவேலாயுதர் ஆகிய தெய்வங்களும் கொண்டு வரப்பட்டன.

தங்கள் கணவர் இறந்த மாத்திரத்தே எரி புகுந்துயிர் துறந்த கற்புடை உயர்குலப் பெண்கள், நாச்சிமார் எனுந் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அவ்வாறு வீரமரண மெய்திய வன்னியரும் தேவுக்களாகவே மதிக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் வன்னி நாட்டிலே புகழ்பெற்ற தெய்வமாக விளங்கிய பத்தினி அல்லது கண்ணகி பற்றியோ, நாகவணக்கம் பற்றியோ எதுவும் இந்நு}லிற் குறிப்பிடப்படவில்லை. இக்காலத்திற் புகழ்பெற்று விளங்கும் மடு மாதா கோயில், வன்னியர் ஆட்சிக்காலத்திலே கண்ணகி கோயிலாயிருந்ததென்பது கர்ண பரம்பரைக் கதை. இப்பழைமையான கூற்றையாதரிக்கும் வகையிலே திரு வீவேர்ஸ் என்பவர் தமது வடமத்திய மகாணக் கைநு}லில், “மடுவிலிருக்கும் து}யமேரி மாதாவின் திருக்கோயில் புத்த சமயத்தினராலும் அநேக தமிழ் யாத்திரிகர்களாலும் பத்தினி அம்மன் கோயிலென்றே வழிபடப்பட்டு வருகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.