Thursday, December 1, 2011

காடவர்:



வன்னிபற்றிக் காலத்தாற் மிக முற்பட்ட குறிப்பு பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளது. அந்நூல் குறிப்பிடும் வன்னிமன்றம் என்பது வன்னிமரத்தின் கீழ்க் கூடுகின்ற மக்கள் கூட்டத்தைக் குறிக்கின்றதோ அல்லது வன்னியர் கெழுமிய மன்றத்தைக் குறிக்கின்றதோ என்பதில் ஐயப்பாடுண்டு. வன்னியர் பற்றி ஆதாரபூர்வமான குறிப்புக்கள் சோழர்காலந் தொடக்கமே கல்வெட்டுக்களில் வருகின்றன.

காடவன் எனப் பொருள்படும் வன்ய என்ற வடமொழிப் பதத்திலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டும். வன்னியர் மிக முற்காலத்திற் காடடர்ந்த நிலங்களிலே வாழ்ந்த முல்லைநிலத்து மக்களாக இருந்திருத்தல் கூடும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மக்கென்சியினாலே சேர்க்கப்பட்ட ஏட்டுப்பிரிதிகளில் வரும் சில கதைகள் இக்கருத்துக்கு ஆதாரமாயுள்ளன.

(ஆ) தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்.

வன்னியராண்ட சிற்றரசுகள் தொண்டைமண்டலத்திலே இருந்தன. மேலும் வன்னியர் பெருந்தொகையாகத் தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலே காணப்படுகின்றனர். எனவே வன்னியரின் ஆதி இருப்பிடம் தொண்டைமண்டலமே என்று ஊகிக்கலாம். வன்னியர் வரலாற்றைக் கொண்ட நாடோடிக் கதைகள் ஆதிகாலத்திலே தெண்டைமண்டலம் குறும்பர்பூமி என வழங்கியதென்றும். அங்கு குறும்பரும் வேடரும் வாழ்ந்தனர் என்றும் கூறுகின்றன. சோழமன்னரின் ஆட்சி ஏற்பட்ட பின்பே அங்கு நாகரிக வளர்ச்சி துரிதமடைந்த தென்றும் இவை கூறுகின்றன. சங்ககாலத்திற் கரிகாலன் தொண்டை மண்டலத்திற் பல மக்கட்கூட்டங்களை யடக்கித் தன்னாட்சியை ஏற்படுத்தினான் எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. சங்ககாலச் சோழர்மறைந்தபின் தொண்டைமண்டலத்திற் பல்லவராட்சி ஏற்பட்டது. பல்லவ மன்னர்கள் வலிமைபொருந்திய அரசினை ஏற்படுத்தினார்கள். பல்லவராட்சியில் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக்கப்பட்டன. விவசாயம் செழிப்புறச் சமூகவளர்ச்சி துரிதமடைந்தது. முல்லைநில மக்களிடையிலும் பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது.

பல்லவ அரசு நிலைத்தகாலத்தில் அதனை வடக்கிலிருந்து முதற் சாளுக்கியரும் பின் ராஷ்டிரகூடரும். தெற்கிலிருந்து பாண்டியரும் மீண்டும் மீண்டும் பல தடவை தாக்கினர். இவ்வாறான சூழ்நிலையிற் பல்லவ மன்னர்கள் ஒரு வலிமைபொருந்திய படையை அமைக்க வேண்டி யிருந்தது. வேடர் முதலான முல்லைநிலத்தவரையும் பல்லவர் தம் படைகளிலே சேர்த்திருத்தல் கூடும் அர்த்தசாஸ்திரம் முதலான நூல்களும் அரசர் படைகளை அமைக்குமிடத்து வனவாசிகளையும் மலைவாசிகளையுஞ் சேர்த்துப் படைக்கலப் பயிற்சியளிக்க வேண்டுமென்று கூறுகின்றன. காடவரான வன்னியர் பல்லவரின் படையிற் சேர்ந்து படைக்கலப் பயிற்சியைத் தம் சிறப்புத் தொழிலாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

சோழப்பெரு மன்னரின் ஆவணங்களில் வன்னியர் பற்றியும் வன்னிய பற்றுக்கள் பற்றியும் குறிப்புக்கள் வருகின்றன. இராணுவத்திற் சேவகம் புரிகின்ற வன்னியப் படைகளுக்கு ஜீவிதமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களே வன்னிய பற்றெனக் கூறப்பட்டிருத்தல் வேண்டும். சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூர் மலையமான்களின் கல்வெட்டுக்களிலே வன்னியநாயன் என்ற விருதினைப் பெற்றிரந்த பிரதானிகளோடு வேளைக்காரர் ஏற்படுத்திய உடன்படிக்கைகள் பற்றிப் பல குறிப்புக்கள் வருகின்றன. இவ்வேளைக்காரர் தமது தலைவனை எத்தருணத்திலும் பாதுகாப்பதாகவும் தம் தலைவன் இறக்குமிடத்து தாமும் உயிர்நீப்பதாகவும் பிரதிக்ஞை செய்தனர். இவ்வாறான வேளைக்காரரையே சில கல்வெட்டுக்கள் ஆபத்சகாயினரெனக் குறிப்பிடுகின்றன. ஆபத்சகாயினரென்ற படைப்பிரிவினருக்கும் பாண்டியப் படையில் இடம்பெற்ற தென்னவன் ஆபத்துதவிகள் என்போருக்குமிடையில் ஒரு தொடர்பு காணப்படுகின்றது.