Thursday, December 8, 2011

தமிழகத்தில் வாழும் சோழ மன்னர்களின் வாரிசுகள்.


மன்னர்களின் செல்வாக்கையும் புகழையும் சரித்திரக் கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அது உண்மையா? புராணகாலக் கதைகளா? எனப் பார்ப்போர், படிப்போர் எண்ணங்களில் எழுவதும்.

பட்டாடை படாடோபங்களோடு முடிதாங்கி செங்கோல் ஆட்சி செலுத்திவந்த சோழ மன்னர்களின் வாரிசுகள் தற்போதும் அதே கம்பீரத்தோடு ஆனால் வரிய நிலையில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியத்தில் நம் விழிகள் விரிந்தன.

சோழ மன்னர்களின் வாரிசுகள் தொடர்பாக 2004ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட களஆய்வு ஆவணப்படம் இதை ஆதாரப்பூர்வமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சோழ மன்னர்கள் பற்றிய அரிய வரலாற்று ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதோடு யானை கட்டிப் போரடித்து, யானை, சேனை, அப்பாரியோடு படை நடத்தி, செல்வச்செழிப்பில் கோட்டைக் கொத்தளங்களில் வாழ்ந்த சோழ மன்னர்களின் வாரிசுகள் தற்போது சிதம்பரத்தில் உள்ள பிச்சாவரம் கிராமத்தில் சிறிய, பழைய ஓட்டு வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்கிறது சோகமான குரலில் 45 நிமிடத்தில் ஓடக்கூடிய அந்த ஆவணப் படம்.
பழந்தமிழ்நாட்டை ஆண்ட (சேரர், சோழர், பாண்டியர்) மூவேந்தர்களுள் சோழர் புகழ்பெற்று விளங்கியிருந்தார்கள். “நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. நெல்லின் மற்றொடு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து ‘சோழ’ என்று வழங்கிற்று” என்கிறார் சொற்பிறப்பியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணர்.

கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன. முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.

9ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டை ஆண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குச் செலுத்தியது.

சோழர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான்.

இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வடஇந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்தது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்ட வர்கள் சோழர்களே ஆவர்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். வம்சம் சிதறிச் சிற்றரசர்களானார்கள். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடம் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர்.

மேலும் மராட்டிய மன்னர்கள், வெள்ளைக்காரர்கள் நடத்திய போர்களில் சோழர்கள் வாழ்ந்த கோட்டை அழித்தொழிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்த நிலங்கள் அவர்களின் கைமாறி இன்று ஏதுமற்றிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த கோட்டை இருந்த பகுதியில் தற்போது அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒரு தூணும் பாழடைந்த ஒரு கிணறும்தான் மௌன சாட்சியாகக் காட்சி தருகின்றன.

சோழர்கள் வன்னியர்கள் என்றும், சோழர்களின் முதன்மைத் தெய்வம் சிதம்பரம் நடராஜர் என்றும், சிதம்பரம் கோயில் தில்லைவாழ் அந்தணர்களால் காலகாலமாக இன்றுவரை முடிசூடு விழா நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறுகிறது ஆவணப்படம்.

காலச்சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட சோழ மன்னர்களின் முடியாட்சி பற்றியும் அவர்களின் வாரிசுகளைப் பற்றியும் சொல்லும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஆறு. அண்ணல். அவருடன் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிராஜன், 
தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் மா. சந்திரசேகர், வரலாற்று ஆய்வாளர் புலவர் முத்து எத்திராசன் ஆகியோர் உள்ளிட்ட பலர் குழுவாகச் சென்று இந்த ஆய்வைச் செய்திருக்கிறார்கள்.

தேவிக்கோட்டையில் மன்னர்களாக வாழ்ந்த சோழர்கள் அங்கு ஏற்பட்ட கடும் போரில் அங்கிருந்து பிச்சாவரம் வந்து ஜமீன்களாகவும் பாளையக்காரர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போது அங்கு சோழர் களின் வாரிசாக ஆண்டியப்ப சூரப்ப சோழனார், (சி.டி. படத்தில் உள்ளவர்) அவர் மனைவி உடையார்பாளையம் அரசர் மகள் சாந்திதேவி ஆயாள் ஆகியோரின் வாரிசுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே தில்லைக் காளி கோயிலிலும் சோழர்களின் வாரிசுக்கு முதல் மரியாதை வழங்கப் படுகிறது. அங்கு சோழர்களால் கட்டப்பட்ட 600 ஆண்டு பழமைவாய்ந்த காயத்ரிதேவி கோயில் கட்டப்பட்டுள்ளது. (காயத்ரி தேவிக்கு வேறெங்கும் தனிக்கோயில் காணப்படவில்லை என்கின்றனர்.)

பழங்காலத்தில் சிதம்பரம் கோயிலின் இரவு பூஜை முடிந்த பின்பு பிரசாதங்களுடன் கோயிலின் சாவி பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கிச்சென்று சோழ மன்னரிடம் வழங்குவது வழக்கமாக இருந்திருக் கிறது. எவ்வளவு போர்கள் ஏற்பட்டபோதும் யாருக்கும் அடிபணியாமல் தனித்து இருந்த சோழர்களுக்குத்தான் இன்றுவரை முடிசூட்டு விழா வருகிறது.

இன்றும் வாழும் சோழ மன்னர்கள் எனும் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ஆறு. அண்ணல் மிகவும் சிரமம் எடுத்து சோழ மன்னர்களைப் பற்றி ஆய்ந்து அவர்கள் ஆண்ட பகுதிகளையும் தற்போது வாழும் வாரிசுகளையும் தனித்தனியாக நேர்காணல் கண்டு பல ஆவணங் களையும் அரிய புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

வெள்ளையர்களின் காலத்தில் பொலிடிகல் பென்சன் சோழர் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் அவர்கள் காலத்திலேயே ஒரு காரணத்தைக் காட்டி நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும் தமிழக அரசு சோழனுக்கு விழா எடுத்துவருகிறது. ஆனால் வறிய நிலையில் வாழ்ந்துவரும் சோழர் மன்னர்களின் வாரிசுகளுக்கு உதவி வழங்கி வேண்டும் என்ற கோரிக்கையோடு முடிகிறது ஆவணப்படம்.

தமிழக மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படைப்பான ‘இன்றும் வாழும் சோழ மன்னர்கள்’ எனும் ஆவணப் படம் ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தக அலமாரியை அலங்கரிக்கக்கூடியது.

Source : http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=334