Sunday, December 4, 2011

வாரிசு அரசியல்.


மருத்துவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு மகனை மத்திய அமைச்சராக்கியது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் முன் சற்று கடந்த கால நிகழ்வுகளையும் நினைவு படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர்,அன்பழகன்,நெடுஞ்செழியன் இன்னும் பல மக்கள் செல்வாக்கு படைத்த அடுத்தநிலை தலைவர்கள் இருக்கும் போதே மு.க.முத்து என்ற  தனது மகனை அரசியல் வாரிசாக புகுத்தினார் திரு.கருணாநிதி, அதனால் திமுக வே பிளவுபட்டது அதன் பிறகு வைகோ என்ற மக்கள்,தொண்டர்கள்  செல்வாக்கு பெற்ற அடுத்த கட்ட தலைவர் இருக்கும் போது மு.க.ஸ்டாலின் என்ற அடுத்த மகனை வாரிசாக்கினார் அதனால் மீண்டும் ஒருமுறை பிளவுபட்டது அந்த இயக்கம், எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய போது  ஒரு மாவட்ட செயளாளர் கூட அவருடம் செல்லவில்லை, ஆனால் வைகோ வெளியேறியபோது 8 மாவட்டசெயலாளர்கள்  அவருடன் வேளியேறினர் இதிலிருந்தே வைகோ அடுத்த தலைவர் பதவிக்கு மனதளவில் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார் என புரிகிறது. ஆனால் இப்படிபட்ட அடுத்தகட்ட தலைவர்கள் பாமகவில் இல்லை. அரசியல் வாரிசை அடையாளம் காட்டாமல் போனால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த இயக்கம் பிளவுபட்டு அழிந்துவிடும் (அதை தான் பாமகவிலும் நடக்க வேண்டும் என பலர் கனவுகான்கின்றனர்)
எப்படிப்பட்ட நிலையில் அன்புமணி அரசியலுக்கு வந்தார்?
  மருத்துவர் இராமதாசின் முதுகைப்பார்த்தால் அதில் எதிரிகளால் வாங்கிய குத்துக்களைவிட சொந்த கட்சியின் தலைவர்களால் வாங்கிய குத்துகளே அதிகம்.

1995 என எண்ணுகிறேன் பண்ருட்டி இராமச்சந்திரனையும் தனக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார், மருத்துவர் இருக்கும்போதே பாமகவை கைப்பற்ற என்னி
1995லே பாமாகவை பிளந்தார், அது மருத்துவரின் முதுகிலே சொந்த கட்சிகாரரால் வாங்கிய முதல் குத்து 1998 வரை பாமகவில் இராமதாசுவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் பேராசிரியர் தீரன்.(இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இவருக்கென்று அல்ல பாமகவில் எல்லாமே மருத்துவர்தான் அவர்பின்தான் வன்னிய இனம் வேறு யார் பின்னும் இல்லை), அடுத்த அரசியல் வாரிசாக மருத்துவரால் அடையாளம் காட்டப்பட்டவர்.

பேராசிரியர் தீரனுக்காக பல செயல் தளபதிகளை இழந்தார் மருத்துவர், அதிமுக விற்கு ஒரு ஆண்டிப்பட்டி தொகுதி மாதிரி, பாமகவிற்கு ஒரு ஆண்டிமடம் தொகுதி, 1991 தேர்தலிலே ராஜீவ் படுகொலை அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் தோல்வியடைந்தது பாமக. அந்த தொகுதியை பாமகவின் கோட்டையாக மாற்றியது ஞானமூர்த்தி என்ற பிரமுகர், அவருடைய உழைப்பாலும்,பெரும்பான்மையாக இருந்த வன்னியமக்களாலும் ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி.
எந்த கூட்டணியும் இல்லாமல் 1996 தேர்தலை சந்தித்தபோது பேராசிரியர் தீரன் வெற்றிபெறவேண்டும் என தொண்டர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் திரு.ஞானமூர்த்தியை குறிஞ்சிப்பாடி தொகுதிக்குமாற்றிவிட்டு திரு.தீரன் அவர்களை ஆண்டிமடத்திலே போட்டியிடச்செய்து சட்டமன்ற உறுப்பினராக்கினார், இதனால் ஞானமூர்த்தி என்கிற செயல் தளபதியை இழந்தார், இன்றும் தன் சொந்த செல்வாக்கினால் ஆண்டிமடத்திலே ஒரு முக்கிய அரசியல் புள்ளியக உள்ளார் திரு.ஞானமூர்த்தி.

1998ம் ஆண்டு தேர்தலிலே அதிமுக வோடு கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியை உடைத்தார் பேராசிரியர் தீரன். அது வெளியே சொல்லப்பட்ட காரணம், உண்மையான காரணகர்த்தா அப்போது முதல்வராயிருந்தவர், கைமாறிய பணம்(பணம் பற்றி சொல்வழிக்கேள்வி,பத்திரிக்கை செய்திகள் மட்டுமே, ஆதாரம் இல்லை எம்மிடம்) . பேராசிரியர் தீரனால் மருத்துவரின் முதுகில் இரண்டாவது குத்து.

அதன்பின் தலித்.இரா.எழில்மலை. முதல்முறையாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்தபோது இவருக்குத்தான் வழங்கப்பட்டது, தீரனுக்குப்பின் இவர்தான் மருத்துவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்,இவர் பாமகவின் சர்பாக அமைச்சரானவர், ஆனால் வேறுவிதமாக செயல்பட்டார் (இதைப்பற்றி இன்னும் விரிவாக சொல்லவிரும்பவில்லை) இவருக்கு 1999 தேர்தலிலே போட்டியிட அனுமதிக்கப்படவில்லை, தலைமைக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு, அதனால் என்ன அமைச்சராக்கிய கட்சியை விட்டு ஓடவேண்டுமா என்ன? ஆனால் அதிமுகவிற்கு ஓட்டமெடுத்தார். இது மூன்றாவதாக முதுகில் விழுந்த குத்து.
திரு.முருகவேல் தென் மாவட்டத்திலே செயல்திறன் மிக்க ஒரு தலித் தலைவர்,2001 தேர்தலிலே அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டுமென பலமில்லாத தென் மாவட்டத்திலிருந்து அவரை வடமாவட்டத்திலுள்ள வந்தவாசி தொகுதியிலே நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். சிவகாமி என்ற மற்றொரு ச.ம.உ. இவரும் வன்னிய சமுதாயத்தவர் அல்ல ஆனால் இவரும் கட்சியை விட்டு விலகி அதிமுகவிலே சேர்ந்துவிட்டார்,இப்போதும் பாமகவினால் கிடைத்த ச.ம.உ. பதவியை உதறாமல்.

எத்தனை எத்தனை குத்துகள் முதுகிலே... அடுத்த தலைவராக அடையாளம் காட்டியபோதும் மருத்துவர் இராமதாசு இருக்கும் போதே கட்சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென அத்தனை பேரும் நினைத்தது வேதனை. திரு.பண்ருட்டியார், திரு.தீரன், திரு.தலித்.இரா.எழில்மலைக்கு பிறகு கட்சியில் அனைவருக்கும் அறிமுகமானவர் யாரும் இல்லை. மிகப்பெரிய வெற்றிடம், யாரை வாரிசாக்குவது?
இப்பொழுது திரு.வீரபாண்டி ஆறுமுகத்தையோ, திரு.ஆற்காடு வீராசாமியையோ, திரு.கோ.சி.மணியையோ அல்லது திரு.பொன்முடியை யோ திமுகவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினால் எத்தனை திமுகவினர் ஏற்றுக்கொள்வர், இதுவே வைகோ அடையாளம் காட்டப்பட்டிருந்தால் நிச்சயம் பிரச்சினை இல்லை, வைகோபோல் செல்வாக்குபெற்ற அடுத்த நிலை தலைவர் இல்லை, யாரையேனும் அரசியல்வாரிசாக காட்டினால் கட்சியில் வீண்குழப்பம். தாமாக விலே மூப்பனாருக்குப்பின் பீட்டர் அல்போன்சோ, சோபா வோ, ஜெயந்தி நடராசனோ தலைவராயிருந்தால் அடுத்தவர்கள் விட்டிருப்பார்களா? கட்சியே இல்லாமல் போயிருக்கும் அதே சமயம் அரசியல் வாரிசை அடையாளம் காட்டவில்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிடும், பலரின் துரோகத்திற்குப்பின் இராமதாசு எடுத்த முடிவுதான் அன்புமணியின் அரசியல் அடையாளம் இதற்கு பாமகவின் 2ம் நிலைத்தலைவர்கள் ஆதரவும் உண்டு, அது சரி இதை எப்படி வன்னிய இனம் ஏற்றுக்கொண்டது, அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.
இது நன்றாகவே புரிந்தும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பாமக அழியாத என ஏங்கிக்கொண்டுள்ளனர் பத்திரிக்கைகளும் இன்னும் பலரும், முகவை,ஜெஜெவை, மூப்பனாரை,காங்கிரசை, பாஜக வை எல்லாம் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும் போது மென்மையாகவும், பாமகவின் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும்போது கடுமையும் காட்டுவது பாமக இதனாலாவது பலம் இழக்காதா என்றுதான்

பாமகவின் மீது பூசப்பட்ட வன்முறை பெயரை அழிக்கத்தான் பாராளுமன்றத்துக்கு படித்தவாராக, செயல், நிர்வாகத்திறன் மிக்கவர்களாக நிறுத்துகின்றனர், கட்சிக்காக உழைத்தவர்களை சட்டமன்றத்தேர்தலில் நிறுத்துகின்றனர் இது மருத்துவரின் முடிவு.
பாண்டி உறுப்பினர் பேராசிரியர் ராமதாசு, திண்டிவனம் உறுப்பினர் தன்ராஜ் ஒரு பேராசிரியர், சிதம்பரத்திலிருந்து டாக்டர்.பொன்னுசாமி, வேலு முன்னாள் இ.ஆ.ப. இது அத்தனை யும் பாமகவின் இமேஜை உயர்த்துவதற்குத்தான்.
ஏ.கே.மூர்த்தி மருத்துவரின் பாதுகாப்பு படையிலிருந்த பாமகவின் அடிமட்டத்தொண்டர், அவர் அமைச்சராகவில்லையா? எந்தவித அரசியல் பின்புலனோ, மருத்துவரின் சொந்தக்காரரோ இல்லத தி.வேல்முருகன் பன்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லையா? இப்படி இன்னும் பலர் உள்ளனர், எனவே மருத்துவரின் சொந்தங்களுக்கு தான் பாமக என்று புலம்புவதை எங்களை மாற்றாது ஏனைன்றால் பாமகவை நாங்கள் பத்திரிகை வாயிலாக அறிவதில்லை, உள்ளிருந்து அறிகின்றோம்.

எதற்கெடுத்தாலும் அன்புமணி தேர்தலில் நிற்காமல் மந்திரியாகிவிட்டார் என புலம்புபவர்கள் சற்று சிந்தியுங்கள் முகம் தெரியாத வேலு, தங்கராஜ் ஆகியோரெல்லாம் பாமகவின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெரும்போது அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு, இராமதாசுக்கு அடுத்தபடியாக கட்சியிலே செல்வாக்காக இருக்கும் அன்புமணிக்கா தேர்தலிலே வெற்றிபெறுவது சிரமம். அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது, அது மட்டுமில்லாமல் அன்புமணி தேர்தலிலே நின்றால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வது யார்? மருத்துவருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த முகம் அன்புமணிதான்.