Google+ Followers

Thursday, December 1, 2011

அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்:


வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவனவற்றுள் சில வரலாற்றுண்மைகள் இடம்பெறுகின்றன. அடங்காப்பற்றை வன்னியர் கைப்பற்றியமையைக் குறித்து மேல் வருமாறு நூல்கூறுகின்றது. செயதுங்க வீரவரராஜசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்குமாறு து}துவரை அனுப்பினான். து}துவர்கள் சொன்னவற்றைக் கேட்ட மதுரை மன்னன் அறுபது வாட்படை வன்னியரை அழைத்துத் தன் மகள் சமது}தியை அவர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வந்த வன்னியர்களை அடங்காப் பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான்.

அடங்காப் பற்றை அடைந்ததும் வன்னியர் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் து}துவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு என்னுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோடமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன், சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிகட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாக மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டுவ தலைவர்களைக் கொன்று விட்டு நாட்டையாண்டனர்.

மேற்கு மூலை, கிழக்கு மூலை, என்பவற்றகை கைப்பற்றிய சிங்கவாகு பொக்கா வன்னியிலிருந்தான். சுபதிட்டா என்னும் அந்தணனும் படையும் திரியாய் என்னுமிடத்திற்குச் சென்று நீலப்பணிகனைக் கொன்று விட்டு அந்நிலத்தை ஆண்டனர். காலிங்கன், மலையகத்தார், கன்னார் முதலியோர் கச்சாயிலே குடியிருந்தார்கள். அங்கசன் கட்டுக்குளத்திற்குச் சென்று வாழ்ந்தான். புகழ்மிக்க சிங்கவாகு திருக்கோணமலைக்குச் சென்றான். மாமுகன் வெருகல், தம்பலகாமம் என்பவற்றைக் கைப்பற்றியாளச் சென்றான். மைடன் என்போன்கோட்டியாரத்திற்கு அதிபதியானான். ஓடுக்கன், நீலன், மைலன் என்போர் முறையே துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி என்னுமிடங்களுக்குச் சென்றனர் ஆற்றல் பொருந்திய சன்மன் நொச்சிமுனையில் ஆண்டான். நாகன் புல்வெளிக்குச் செல்ல நீலையினான் வாகுதேவன் தனிக்கல்லிலிருந்தான்.

வன்னியர்கள் வந்த பின்னர் அவர்களை அடுத்து அவர்களின் மனைவிமாரும் பரிவாரங்களும் அடங்காப் பற்றை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களுள் மதுவீர மழவராயனும் நாட்டையாண்ட மழவராயனும் மன்னனோடு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். பூபால வன்னிமையும் கோபாலரும் கட்டுக்குளத்திலும் திரியாவிலும் இனிது வாழ்ந்தனர். வில்வராயன் நல்லு}ரிலிருந்தான். குடைகாத்தான், கொடித்தேவன், தேவராயன், கந்தவனத்தான் என்போர் செட்டி குளத்தின் அதிபதிகளாயினர். உத்துங்கராயன் பனங்காமத்தில் வாழ்ந்தான்.

மேலேயுள்ள வையாபாடற் பகுதியிற் பல வன்னியர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்கள் சென்றிருந்த இடங்களும் கைப்பற்றிய இடங்களும் கூறப்படுகின்றன.