Sunday, April 13, 2014

பெண்ணாடம்








சோழரும் பல்லவரும் பற்ப்பல வெற்றிகளை குவித்து வரலாறு படைக்க உறுதுணையாகவும் காரணியாகவும் வீரத்தின் ஆணி வேராகவும் இருந்த "நடுநாட்டின்" திருத்தலம் .

தேவகன்னியரும், காமதேனுவும், வெள்ளையானையும் வழிபட்ட தலம்.

(பெண் + ஆ+ கடம்). இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்)
வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்’ எனப்பெயர் பெற்றதென்பர்.


இன்றும் "கடந்தையார் " பட்டம் கொண்ட படையாட்சி இன மக்களுக்கே இங்கு முதல் மரியாதை . இவர்கள் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக, படைத்தலைவர்களாக இருந்தவர்கள் .

ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.

இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர்
இத்தலத்து இறைவனைக்கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர்.

மலர் வாராமைகண்டு இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது.

எனவே மேற்சொல்லிய மூவரும் வழிபட்ட தலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.

இறைவன் - சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
இறைவி - ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
தலமரம் - சண்பகம்.
தீர்த்தம் - கயிலைத்தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம்,
முக்குளம், வெள்ளாறு.

1. கபிலை தீர்த்தம் :- கோயிலை அடுத்து மேற்பால் உள்ளது.
காமதேனு, சிவபூசை செய்யும்போது, வழிந்தோடிய பால் நிரம்பி
குளமாகியது என்பர்.

2. பார்வதி தீர்த்தம் :- கோயிலின் முன் கீழ்த்திசையில் உள்ளது.
இதற்குப் பரமானந்ததீர்த்தம் என்றும் பெயர் சொல்லப்படுகிறது.

3. முக்குளம் :- ஊரின் வட மேற்கில் அமைந்துள்ளது.

4. இந்திரதீர்த்தம் :- ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது.

5. வெள்ளாறு :- இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி
நடைபெறுகிறது.

இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :-

1. தயராசபதி - ஐராவதம் வழிபட்டதால் வந்த பெயர்.

2. புஷ்பவனம், புஷ்பாரண்யம் ; ஆதிநாளில் மலர்வனமாக
விளங்கியதால் வந்த பெயர்.

3. மகேந்திரபுரி. இந்திரன் வழிபட்டதால் வந்த பெயர்.

4. பார்வதிபுரம் - பார்வதி வழிபட்டதால் வந்த பெயர்.

5. சோகநாசனம் - நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த
தலமாதலின் வந்த பெயர்.

6. சிவவாசம் - இறைவனுக்குகந்த பதி.