Wednesday, May 9, 2012

தோழர் படையாச்சி தமிழினத்தின் விடிவுக்காய் பெரும்பணி ஆற்றியவர்



தோழர் படையாச்சி தமிழினத்தின் விடிவுக்காய் பெரும்பணி ஆற்றியவர்

 
 
தமிழினத்தின் விடிவுக்காய் பெரும்பணி ஆற்றி வந்துள்ள தோழர் றோய் படையாச்சியின் மறைவு, தமிழினத்துக்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 
ஆபிரிக்க தேசிய காங்கிரசின் மூத்த உறுப்பினரும் தென்னாபிரிக்க அரசாங்கத்தில் பொதுச்சேவை நிர்வாகத்துறை அமைச்சராக விளங்கிய தென்னாபிரிக்க தமிழிரான தோழர் றோய் படையாச்சியின் இழப்பு தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிடப்பட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தோழர் படையாச்சியின் சேவையையும் பங்களிப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டி நினைவு கூருகின்றது.

தென்னாபிரிக்க நாட்டின் பொதுச் சேவை, நிர்வாகத் துறை அமைச்சர் மதிப்புக்குரிய தோழர் இராதாகிருஷ்ண (றோய்) படையாச்சி அடிஸ் அபாபா நகரில் அண்மையில் திடீரென மரணமடைந்த செய்தி அறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெருந் துயரடைகின்றது.

இம்மரணம் சம்பவித்த வேளையில் படையாச்சி, ஆபிரிக்க ஒன்றியத்தின் பேரவைக் கூட்டத்தில் தென்னாபிரிக்க குழுவுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார் என அறிகின்றோம்.

ஆபிரிக்க மக்களின் சுதந்திர வாழ்வில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த இப்பெரியார், தென்னாபிரிக்க மக்களுக்காக என்றும் மனமுவந்து தனது சேவையை ஆற்றி வந்துள்ளார்.

உலகக் குடிமகன் எனும் தரத்திற்கு உயர்ந்து, அன்னார் இன பேதமற்ற, ஆண் பெண் பாகுபாடற்ற, மனித நேயத்தின் அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு அளித்துள்ள ஓர் பெரு மகன். அவர் ஈழத் தமிழர்களின் உற்ற தோழன்.

இத்தகைய பெருமைக்குரிய தளர்விலா சான்றோன் என்றும் எவ்வித சோர்வோ தடையோ இன்றி பணியாற்றி வந்த நல்லதோர் செயல் வீரர். ஆபிரிக்க தேசிய பேரவையின் ஓர் பங்காளி அமைப்பாக உள்ள நேட்டால்; இந்திய காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினராக படையாச்சி, தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார்.

அவர் தென்னாபிரிக்க நாட்டின் பொதுப்பணித்துறை, நிர்வாகத்துக்கு துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காலம் முதல், ஆபிரிக்கக் கண்டத்திலும் உலக அரங்கிலும் தென்னாபிரிக்க நாட்டின் பெயரையும் அதன் செல்வாக்கையும் நன்கு மேம்படுத்தியுள்ளார்.

இவர், இலங்கைத் தீவில் நிலவும் இனப் பிரச்சனைக்கு நீதியுடன் கூடிய தீர்வினை ஏற்படுத்தும் பொருட்டு உருவாக்கபட்ட 'நீதிக்கும் சமாதானத்துக்குமான கூட்டணி' எனும் அமைப்பை உருவாக்கி முன்னின்று உழைத்தவர்.

வன்னிப் போரின் இறுதிக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இடம் பெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்து, பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வொன்றைக் கொண்டு வர தென்னாபிரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

போர் முடிவுற்றதன் பின்னரும் தமிழீழ மக்கள் மானத்தோடு வாழவேண்டும் என்பதிலும், எம் உறவுகளின் நல்வாழ்விலும் அவர் தனது முயற்சிகளை மேற்கொண்டார். எம் இனத்தின் விடிவுக்காய் அன்னார் பெரும்பணி ஆற்றி வந்துள்ளார். அவரின் மறைவு தமிழினத்துக்குப் பேரிழப்பாகும்.;

ஆபிரிக்க தேசிய பேரவையும் படையாச்சியும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வழங்கியுள்ள ஆதரவு அளப்பரியது. அதனை மனதில் நிறுத்தி தமிழீழ விடுதலை இயக்கத்தினர் அனைவரும் என்றும் நன்றி செலுத்துவோம்.

அன்னாரின் மறைவால் தமிழினம் ஒப்பற்ற தோழன் ஒருவரை இழந்து நிற்கின்றது. எனினும், அவர் பொதுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், அவரது மரணம் நிகழ்ந்தது என்ற விடயம் எமக்குப் பெருமையைத் தருகின்றது.

தமிழீழ மக்களின் விடியலுக்காய் தோழர் படையாச்சி அவர்கள் ஆற்றிய பணியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வேளையில் நினைவு கூர்ந்து, பாராட்டி நிற்கின்றது.

அன்னாரின் துணைவியார் திருமதி சாலி படையாச்சி அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/show-RUmqyFTdOVjrz.html