Wednesday, May 16, 2012

வன்னியர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் போராளிகள் என்பதற்கான அடையாளமே திரெளபதி வழிபாடு. - பெ.பழநிச்சாமி



மகாபாரதக் கதையின் நாயகியான திரெளபதி அக்னியில் அவதரித்தவர் என்பது புராணவழி வரலாற்றுச் செய்தியாகும். திரெளபதியைப் போலவே வன்னியர்களும் அக்னியில் தோன்றியதாக வன்னிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதியில் இன்றும் வன்னியர்கள் அக்னி குல சத்ரியர் என்றே அழைக்கப்படுகின்றனர்.
1929இல் சென்னை மாகாண சட்டமன்றத் தீர்மானம் வாயிலாக தமிழ்ப்பகுதிகளில் வன்னியர் குல சத்ரியர் என்றும் ஆந்திரப் பகுதிகளில் அக்னி குல சத்ரியர் என்றும் வழங்க அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தாண்டி வன்னியர்களை தனித்து அடையாளப்படுத்துவது வன்னயர்களிடத்தில் மட்டுமே உள்ள திரெளபதி வழிபாடும் அதையயாட்டிய மக்கள் கலை வடிவமான தெருக்கூத்தும் ஆகும். வன்னியர்கள் திரெளபதி வழிபாட்டின் பெரும்பங்கை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பதற்கு
திரெளபதியும் வன்னியர் குல சம்புமகரி´யைப் போல் யாகத்தீயில் அவதரித்தது.
வன்னியர்கள் அர்ச்சுனன் பிறந்த பங்குனி உத்திரம் நட்சத்திரத்தை உருத்திர வன்னிய மகாராஜா விழாவாகக் கொண்டாடுவது.
பாண்டவர்கள் 12 வருட வனவாசத்திற்கு பிறகு 1 வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்களின் ஆயுதங்களை; வன்னிமரத்தில் மறைத்து வைத்து கொடுத்தது.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள காவிரிக்கு வடக்கில் உள்ள மாவட்டங்களில் திரெளபதி வழிபாடும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட தெருக்கூத்தும் இன்றளவும் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது, இவைகள் காரணங்களாக இருக்கலாம்.
*
இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் மகாபாரத யுத்தம் நடந்த பகுதிகளான குருசேத்திரம் அஸ்தினாபுரம் ஆகியவை வட இந்தியாவில் இருந்தாலும் சுட அங்குள்ள ராஜபுத்திரர்களை விடவும், ஜாட்டுகளை விடவும் வன்னியர்களே திரெளபதி வழிபாட்டையும் அதனோடு சேர்த்து பாரத கூத்துக்கலையையும் பாதுகாத்து வருகின்றனர். புராணக்கதைகள் தமிழ்நாட்டில் செவி வழி இலக்கியமாக எவ்வளவு காலமாக இருந்தது என்பது கணிக்க முடியவில்லை. ஆனால் சிலப்பதிகாரம் மற்றும் பெருந்தேவனார் இயற்றிய பாரதம் ஆகியவற்றில் பாரத கதையின் தாக்கம் தென்படுகிறது.
திரெளபதிக்கு மூலக்கோயில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள மேலச்சேரி திரெளபதி அம்மன் கோயில்தான் தமிழக திரெளபதி அம்மன் கோயில்களுக்கெல்லாம் மூலமானது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலச்சேரியில் உள்ள திரெளபதி அம்மனின் காவல் தெய்வமாக போத்துராஜா உள்ளதாலும் அருகில் உள்ள சிங்காவர் ரங்கநாதர் மற்றும் மேலச்சேரி பல்லவேஸ்வரம் புடைசிற்பக் கோயில்கள் பல்லவர்களால் கட்டப்பட்டதாலும் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் பழைமையானது மேலச்சேரி திரெளபதி அம்மன் ஆலயமாகும். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆல்ப் யஹலிடிபெடல் திரெளபதி வழிபாடு குறித்து ஆய்வு செய்தபோது மொத்த திரெளபதி அம்மன் கோயில்களில் 90%க்கும் மேல் வன்னியர்கள் செறிவாக வசிக்கும் தென்னாற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு, சேலம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை மற்றும் பெங்களூர், கோலார், சித்தூர்நெல்லூர் பகதிகளிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரெளபதி அம்மன் கோயில் பூசாரிகளும் நிர்வாகிகளும் 90% வன்னியர் வசமே உள்ளது. 1888‡இல் டாக்டர் குத்சேவ் ஒப்பர்ட் பாரத பூர்வ குடிகள் என்னம் நூலில் பக்கம் 97‡இல் தென்னாற்காட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில்கள் மட்டும் அல்லாது அர்ஜூனனுக்கும் நாக கன்னி (உலுபி)க்கும் பிறந்த அரவான் பாரத யுத்தத்திற்கான முதல் களப்பலியானதன் நினைவாக திருநங்கைகள் கொண்டாடும் கூத்தாண்டவர் கோயில் இந்தியாவிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் சித்ராபவுர்ணமி நாளில் திருநங்கைகள் திருவிழா மிகப்பெரிய அளவில் நடக்கிறது. அந்த கோயிலும் வன்னியர் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 45 திரெளபதி அம்மன் கோயில்கள் உள்ளன. இது தவிர பாஞ்சாலியம்மன் கோயில்களும் உள்ளன. சேலம் மாவட்டத்தை ஒப்பிடும்போது தருமபுரி ‡கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திரெளபதி வழிபாட்டின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அதியமானின் சங்ககால ஆட்சியில் தகடூர் என்று அழைக்கப்பட்ட ஊர் பாரதக் கதையின் தாக்கத்தினால் தர்மரின் பெயரால் தர்மபுரி ஆனது. அதேபோல் பாரதப் போரின் சூத்திரதாரியான கிருஷ்ணனின் பெயரால் கிருஷ்ணகிரி ஆனது. செஞ்சியிலும் மேலச்சேரி திரெளபதி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மலையின் பெயரும் கிருஷ்ணகிரி என்றே அழைக்கப்படுகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள செல்லக்குட்டப்பட்டி, வடகாசி, பெண்டர அள்ளி (அரசம்பட்டி) வையம்பட்டி, கொல்லப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள திரெளபதி அம்மன் கோயில்கள் வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்கும் கோயில்களாகும். மேலும் பாலக்கோடு வட்டத்தில் புலிக்கரை கோயிலூரில் உள்ள குந்தியம்மன் கோயிலும் வன்னியர்களின் குலதெய்வக் கோயில்தான்.  தருமபுரி வட்டம் உங்கார அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளியனூரில் துரியோதனனை (பெரியாண்டவர்) குலதெய்வமாக வணங்கும் வன்னியர்களும் உள்ளனர். பாரதக் கதையோடு தொடர்புடைய துர்வாச முனிவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையிலும் அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கு சூலாமலையிலும் கோயில்கள் உள்ளன.
இவ்வாறாக திரெளபதி வழிபாடானது வன்னியர்களிடம் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பிரதான தெருக்கூத்து வடதமிழகத்தில் வன்னியர் செறிவாக வாழும் திரெளபதி அம்மன் கோயில்கள் அதிகமிருக்கும் பகுதியிலேயே பெரும்பாலும் கோடைகாலங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் வாதாபி சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மன் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டுள்ளார். கோட்டையை எவ்வளவோ முயற்சித்தும் தகர்க்க முடியவில்லை. பிறகு சமாதானம் பேசி மகேந்திரவர்மனுடன் உறவாடிவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் மக்களையும் கால்நடைகளையும் அழித்ததோடு; விளைந்த பயிருக்கும் தீங்கு விளைவித்து கொன்றுவிட்டதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அதற்கு பழிவாங்கும் விதமாக புலிகேசியை வென்று வாதாபியை அழிக்க பெரும்படை திரட்ட வேண்டியதாயிற்று அப்பொழுதிருந்தே பாரத்தை படித்து தர்மத்திற்காக போராட என மக்களிடம் போர்க்குணத்தை விதைக்க திரெளபதி அம்மன் கோயில்களும் அதைச் சேர்த்து பாரதம் படித்ததாலும் தெருக்கூத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. "பாரதக் கதைபடிப்பதற்கு பல்லவர் காலத்தில் கூத்தர் மானியங்கள் வழங்கப்பட்டதாக கூரம் செப்பேடுகள் மூலம் அறிகின்றோம்." வாதாபியை நரசிம்மவர்மன் வென்ற வரலாற்று நிகழ்வுதான் வன்னியர் புராணம் என்ற கதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் படைகளாக்கி அதாவது தங்களை எதிர்க்கும் பகைவர்களை வெல்ல உள்ளத்தில் எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்குவதற்காகவே தெருக்கூத்துக்கலை பாரதக் கதை வழியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சினிமா கவர்ச்சி யுகத்திலும் தெருக்கூத்து ஓரளவேனும் உயிருடன் இருக்கிறது என்றால் அதற்கு வன்னியர்களே காரணம்.

ஆகவே திரெளபதி வழிபாடு வன்னிய குலத்தினர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் போராளிகள் என்பதற்கான அடையாள வழிபாடாகவும். தெருக்கூத்து வடதமிழக தேசியக்கலையாகவும் இருக்கின்றன.

பெரும்பாலும் வன்னியர்களிடம் மட்டுமே திரெளபதி வழிபாடு இருக்கிறது என்பது இக்கட்டுரை மூலம் நிறுவப்பட்டுள்ளது. வன்னியர்கள் திரெளபதி வழிபாடு செய்வதற்கு என்ன காரணம் என்பதற்கு விரிவான ஆழமான
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

நன்றி : http://achamillai.org/ta/component/k2/item/11-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF