Saturday, July 6, 2013

தாடாளன் கோவில் - திருக்காழிச்சீராம விண்ணகரம் சிறப்புக்கள்:

மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம்
செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு
செய்ததாகவும், யாகம் முடியும் வரை இடையூறுகளைக் களைய
இராம இலக்குவர்களைத் துணைக் கழைத்ததாகவும் வால்மீகி
கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்று பெயர்.

அந்த சித்தாஸ்ரமம் என்பது இவ்விடம்தான் என்றும் சில
ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை
நிற்பது சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது
என்பதேயாகும். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமேயன்றி
முடிவான உண்மையாக ஏற்றுக் கொள்ளுமாறில்லை.

108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை
ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம்
என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம்
என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

பரமேச்சுர விண்ணகரம
காழிச்சீ ராம விண்ணகரம்
அரிமேய விண்ணகரம்
வைகுந்த விண்ணகரம்
நந்திபுர விண்ணகரம்


ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன்
முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை
திருவிண்ணகர் என்றே நம்மாழ்வார் மங்களாசாசனம்
செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் மேகவிடு
தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக பொருளைக்கொள்ளையடிக்க
முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம்
செய்வதற்காக இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை”
கொண்டுவிட்டார்.

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை
இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை
மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து
தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப்
பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள். திருமங்கை
யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில்
வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு
கூற அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே
பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு
“தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் உண்டு.

திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர்
வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட
ஆராதன விக்ரக வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க
அவரது சீடர்கள் மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள்
இருப்பதை அறிந்து அதனைப் பெற்று வந்து கொடுத்ததாகவும்
கூறுவர்.

ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி
வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று
நவாபின் மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும்,
உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர
படையாட்சி கனவிலும், அர்ச்சகரின் கனவிலும் வந்து தாம்
இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக்
கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப்
பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன்
என்று கூறினார்.

அவ்விதமே அவ்விருவரும் வரும்போது
காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை
அடைந்து.

தாடாளா வா தாடாளா வா
வெண்ணெய் உண்ட தாடாளா வா
தாடாளா வா தாடாளா வா
தவிட்டுப் பானைத் தாடாளா வா
என்று கூற

உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப்
பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக்
கொண்டுவந்து அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.

இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் "சிதம்பரப் படையாட்சி "
வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.

நன்றி : 


 http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg103/html/cg103t0273.htm