Google+ Followers

Thursday, August 23, 2012

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!
 
ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு", நரசய்யா எழுதிய "மதராசப்பட்டினம்" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சென்னை நகரின் வேர் தெலுங்கா?"சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது

"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)

இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" ன்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).

ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல. 
==========

சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி?

ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர். 

சென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன?

தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....

தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.

தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)

"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)

தமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி?

விஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

சஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650
 By Sanjay Subrahmanyam 1990)

அதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India,  By Sanjay Subrahmanyam 2001)

அதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel,  By Kanakalatha Mukund 1999)

இப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.

இதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938,  By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).

ஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939)

ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.

ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன?' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.

இதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2012) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை!

தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை. 

ஆதாரம்:


1. Varahishwarar Temple – Damal, CPR Publications, by Dr. Nanditha Krishna 2001.

2. Madras rediscovered, by S Muthiah2009.

3. Madrasapattinam, by Narasiah 2006.

4. Madras Matters – At home in South India, by Jim Brayley-Hodgetts 2008.

5. Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, by Henry Davidson Love 1852.

6. Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942.

7. The Madras Tercentenary Commemoration Volume, by Madras Tercentenary Celebration Committee, 1939.

8. Penumbral Visions: Making Polities in Early Modern South India, by Sanjay Subrahmanyam 2001.

9. The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, by Kanakalatha Mukund 1999.

10. Nayaks of Tanjore, by V. Vriddhagirisan 1942.

 11. The Political Economy of Commerce: Southern India 1500-1650, By Sanjay Subrahmanyam 1990.


 செய்தியை அளித்த திரு .அருள் ரத்தினம் அவர்களுக்கு நன்றி

Source : http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_6700.html