Monday, August 20, 2012

"தேவர்களுக் கெல்லாம் தேவரான பன்னாட்டான் தம்பிரான் வருகிறான்" - என்று வன்னியரை புகழ்ந்த நிகழ்ச்சி

பெரிய வடுகன் என்ற மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்த போது தெய்வ உருவங்களும் நாயன்மார் சிலைகளும் ஹொய்சாலர்களின் தலைநகரான துவார சமுத்திரத்திற்குக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. பெரம்பலூர் வட்டம் ஆடுதுறையிலுள்ள சில பள்ளி (வன்னியர் ) குடும்பங்கள் அவற்றை மீட்டு கோவிலில் மீண்டும் நிறுவின. அத்துடன் இத்தெய்வ உருக்களின் வழிபாட்டிற்காக நூறு கலம் அரிசியும் 5000 காசும் வழங்குவதாக ஒப்புக் கொண்டன.

இதை அவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் வழங்கவில்லை. இதன் பொருட்டு ஒவ்வொரு பள்ளிக் குடும்பத்தினரிடமிருந்து 50 காசும், ஒரு குறுணி நெல்லும் வாங்கினர். “வெண்கலம் எடுத்தும் மண்கலம் உடைத்தும்” வரி வாங்குவது போன்ற, ஏனைய பள்ளிகளிடமிருந்து இவற்றைப் பெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இச்செயலுக்காகப்பட்டு பரிவட்டம் கட்டியும்

“தேவர்களுக் கெல்லாம் தேவரான பன்னாட்டான் தம்பிரான் வருகிறான்”

என்ற அறிவிப்பை அவர்கள் வருகையின் போது அறிவித்தும் மரியாதை செய்தனர். இக்கல்வெட்டு குறிப்பிடும் பெரிய வடுகன் என்பவன் ஹொய்சாலி மன்னனான முதலாம் விஷ்ணுவர்தனாக இருக்கலாம் என்று 1913-ஆம் ஆண்டிற்கான கல்வெட்டு ஆண்டறிக்கை (பக்கம் 115 - 116) கருதுகிறது.
கல்வெட்டு ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் (1965 - 205) ஆறாம் விக்ர மாதித்தியன் என்பவனே இக்கல் வெட்டில் குறிப்பிடப்படும் பெரிய வடுகன் என்று குறிப்பிடுகிறார். மேலும் விக்ரமசோழன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் திருச்சி அருகிலுள்ள கரூரில், கலகம் ஒன்றில் கூத்தனார் சிலை காணாமல் போனதாகவும், மிகுதியான பணம் கொடுத்தே அதை மீட்டதாகவும் குறிப்பிடுகிறார். கலகத்திற்கான காரணத்தை இக்கல்வெட்டு குறிப்பிடாவிட்டாலும் ஆடுதுறையைப் போன்றே இங்கும் ஹொய்சாலா படைகள் வந்திருக்க வேண்டுமென்பது அவர் கருத்து (மேலது 205).

இவ்விரு கொள்ளை நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவை சிவன் கோயில்கள் என்று தமது கட்டுரையில் கே.ஜி.கிருஷ்ணன் அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஹொய்சாலர்கள் வைணவர்கள் என்பதால் சிவன் கோவிலைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதையே மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.


http://www.keetru.com/puthiyakaatru/dec06/sivasu.php