Sunday, February 12, 2012

படைமாட்சி (படையாட்சி ) குணங்கள் பற்றி திருவள்ளுவர் கூறுவது :



குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
                      வெறுக்கையுள் எல்லாம் தலை.


விளக்கம் : தேர் யானை குதிரை காலாள் ஆகிய நால்வகை உறுப்புக்களும்      பொருந்தி புண்படுவதற்கும் சாவதற்கும் அஞ்சாமல் போர் செய்து பகைவரை வெல்லத்தக்க படை அரசனின் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாம்.


குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
                      தொல்படைக் கல்லால் அரிது.


விளக்கம் : நீண்ட நேரம் போர் செய்து களைத்தபோதும் தோல்வி ஏற்பட்டால் மேல்வரக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அஞ்சாமல் நின்று போர் செய்யும் வன்கண்மை ( சுடுமறம் ) அரசர்க்கு வழிவழியாகத் தொடர்ந்து வரும் நிலைப்படைக்கு அல்லாமல் வேறுவகைப் படைக்கு உண்டாகாது.


குறள் 763: ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
                      நாகம் உயிர்ப்பக் கெடும்.


விளக்கம் : எலியாகிய பகை ஏராளமாகக் கூடிக் கடல்போல் ஆரவாரித்தாலும் பாம்பிற்கு என்ன தீங்கு நேரும்? அப்பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே அப்பகை ஒருங்கே அழிந்து போகும்.


குறள் 764: அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
                       வன்க ணதுவே படை.


விளக்கம் :
போரில் தோல்வி அடைதல் இல்லாமல் பகைவரிடம் கையூட்டுப் பெற்றுக்காட்டிக் கொடுக்காததாய், தொன்று தொட்டுத் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த வன்கண்மையை உடையதே சிறந்த படை.


குறள் 765: கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
                      ஆற்ற லதுவே படை.



விளக்கம் : எமனே சினந்து வந்து தாக்கினாலும் கலையாமல் ஒன்றுகூடி எதிர்த்து நின்று போர் செய்யும் வலிமையுடையதே சிறந்த படை.


குறள் 766: மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
                      எனநான்கே ஏமம் படைக்கு.



விளக்கம் : வீரம் தன்மானம் வழிவழி வரும் நடத்தை அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பான பண்புகளாம்.


குறள் 767: தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
                      போர்தாங்கும் தன்மை அறிந்து.


விளக்கம் : தன்னை எதிர்த்து வந்த படையின் போரை விலக்கும் வகை அறிந்து அதற்கேற்பத் தன்னை அணிவகுத்துக் கொண்டு பகைவரின் தூசிப்படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன் மேற்சென்று தாக்குவதே சிறந்த படை.
( தார் - தூசிப்படை ; கொடிப்படை - முன்னனிப்படை )


குறள் 768: அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
                      படைத்தகையால் பாடு பெறும்.


விளக்கம் : படை பகைவர் மேற்சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கு இல்லாவிட்டாலும் தன் தோற்றப் பொலிவாலும் ( அணிவகுப்புச் சிறப்பாலும் ) பெருமை பெறும்.


குறள் 769: சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
                      இல்லாயின் வெல்லும் படை.


விளக்கம் : வரவர சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத வெறுப்பும் வறுமையும் தனக்கு இல்லாவிட்டால் படை பகைவரை வெல்லும்.


குறள் 770: நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
                      தலைமக்கள் இல்வழி இல்.


விளக்கம் : போரில் பின் வாங்காமல் நிலைத்து நிற்கும் வீரரை மிகுதியாக உடையது என்றாலும் படைத்தலைவர் இல்லாத போது படை நிற்காது.