ஈழத்தில் வன்னிமையை ஆண்ட வன்னிய சிற்றரசர்களின் செப்புப்பட்டயமொன்று யாழ்ப்பாணத்தரசன் பரராசசேகரனால் சிதம்பரம், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட மடத்தைப் பற்றியும், வன்னிப் பகுதிகளை ஆண்ட வன்னிய அரசர்களில் ஒருவராகிய கைலாயவன்னியனாரால் அமைக்கப்பட்ட மடத்தைப் பற்றிய விவரங்களையும் தெளிவுபடுத்துகிறது.
சிதமபரத்தில் யாழ்ப்பாணத்து அரசர்களால் அமைக்கப்பட்ட இராசகால்தம்பிரான் மடத்தினதும், வன்னியரசன் கைலாயவன்னியனால் அமைக்கப்பட்ட கைலாயவன்னியனார் மடத்துக்கும் அதன் நிலபுலங்களினதும், சொத்துக்களினதும் இன்றைய நிலவரம் தெரியாது.
குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்
வன்னிமண்ணின் கடைசி அரசன்
யாழ்ப்பாணம், நல்லூர் கள்ளியங்காட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் பாதுகாப்பிலிருந்த செப்புப்பட்டயங்கள் Dr. குணசிங்கம், பேராசிரியர் பத்மநாதன் ஆகியோரால் ஆராயப்பட்டு, செப்புப்பட்டயத்திலுள்ள விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்து நல்லூரிலுள்ள கள்ளியங்காடு என்ற கிராமத்தின் பெயரில் சிதம்பரத்திலுள்ள மடமொன்று இன்று அழிவடைந்த நிலையில் உள்ளது.
ஈழத்தமிழர்களால் சிதம்பரத்தில் நிறுவப்பட்ட பல மடங்களினதும் அறக்கட்டளைகளினதும் அந்த அறக்கட்டளைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களினதும் விவரத்தை அறியும் வகையில் கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். அதை தமிழ்நாடு சட்டசபையில் விவாதித்து சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் பழமையான மடங்களையும் அறக்கட்டளையும் பாதுகாப்பதுடன் அவற்றை ஈழத்தமிழர்களின் பாரம்பரிய, வரலாற்றுச் சின்னங்களாக அறிவிப்பதுடன், அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்குமுள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் நிலையங்களாக மாற்ற வேண்டும் என சிதம்பரத்திலுள்ள ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகளுடன், மடங்களுடனும் தொடர்புகளையுடைய இலங்கையிலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கின்றனர்.
சிதம்பரத்தில் அழிந்து கொண்டிருக்கும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய மடங்கள் மீண்டும் ஈழத்தமிழர்களின் கட்டிடக் கலையை, அதன் பழமையை வெளிக்காட்டும் வகையில் புதுப்பிக்கப்பட்டு அவற்றை ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தைக் காட்டும் அருங்காட்சியகம், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தொண்டைக் காட்டும் நூலகம் அல்லது இலங்கையிலும், வெளிநாடுகளிலுமிருந்து சிதம்பரத்துக்குச் செல்லும் ஈழத்தமிழர்களுக்கு தங்குவதற்கான நிலையங்களாக மாற்றப்பட வேண்டும். அவை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாவது தலை முறையினருக்கும் தமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும் அறிய உதவும்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் அவர்களின் கலாச்சார, தொண்டு நிறுவனங்களும் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வைப்பதுடன் தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்து, தமிழ்நாடு அரசின் இணைந்து செயலமைப்புக் குழுவை நிறுவி இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் உணர்வாளர்களும், அபிமானிகளும் இந்த திட்டம் நிறைவேற ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும்.
கள்ளியங்காடு செப்புப்பட்டயம்
செப்புப்பட்டயத்தில்(courtesy: Pathmanathan. S., Vanniyar, 1972) அறிவிக்கப்பட்டுள்ள தாவது 22ம் நாள் சித்திரை மாதம் சுபகிருது வருடம் சாலிவாகனம் ஆண்டு 1644, வியாழக்கிழமை பூரணை நாளில், சந்திரன் சுவாதி நட்சத்திரத்துடன் இணையும் நன்னாளில் அதாவது கிறித்துவுக்குப் பின் April-May 1722 CE. இந்த அறக்கட்டளை நிறுவப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் படி விளை நிலங்கள் சிதம்பரத்தில் நிறுவப்பட்ட கையிலைவன்னியனார் மடத்துக்கு அளிக்கப்படுகிறது
ஈழத்து வன்னியை ஆண்ட வன்னியர் சிற்றரசர்களும், பனங்காமம், கரிக்கட்டுமூலை, தென்னமரவாடி, மேல்பற்று, முள்ளியவளை, மயிலாத்தை, பச்சிலைப்பள்ளி போன்ற வன்னிப்பகுதிகளில் வாழ்ந்த கிராம மக்களும் ஒன்றிணைந்து சிதம்பரத்து ஆடவல்லானின் பெயரில் சிதம்பரம் தமிழ்நாட்டில் மடத்தை நிறுவியதாகக் குறிப்பிடுகிறது கள்ளியங்காடு செப்புப்பட்டயம்.
இந்த அறக்கட்டளைக்கு விளை நிலங்களை சிதம்பரத்தில் நிறுவப்பட்ட கையிலைவன்னியனார் மடத்துக்கு அளிக்கப்படுகிறது. யாழ்ப்பாண அரசன் பரராசசேகரனால் வன்னியர் மடத்துக்கு முன்பாக நிறுவப்பட்ட இராசகால் மடத்துக்குப் பொறுப்பாக நியமிக்கபப்ட்ட சூரியமூர்த்தி தம்பிரானையே வன்னியரசர்களும் சிதம்பரத்திலுள்ள கைலைவன்னியனார் மடத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகிறார்.
இந்த மடத்துக்கும் அறக்கட்டளைக்கு உதவுபவர்கள், சிவனுக்கு உகந்த இரண்டாம் சாமத்தில் சிதம்பரத்தில் ஆடவல்லானைத் தரிசித்த புண்ணியத்தை பெறுவதுடன், இந்த மடத்துக்கு தீ வைப்பவர்கள் சிவாலயத்தை எரித்த பாவத்தையுமடைவர். இப்படியான அறங்களைச் செய்பவர்களை விட, இந்த மடத்தைப் பாதுகாப்பவர்களும், ஊக்குவிப்பவர்களும் பத்து மடங்கு பலன்களைப் பெறுவர் என்கிறது கள்ளியங்காடு செப்புத்தகடு.
சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை.
M.T. Ramachandran MLA
சிதம்பரத்திலுள்ள ஈழத்தமிழர்களின் மடங்களையும், நிலங்களையும் மீட்டு ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் கலாச்சார நிலையத்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டார் இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் திரு. M.T ராமச்சந்திரன் அவர்கள். April 26, 2013 இல் சட்டசபையின் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார், அவருக்கு ஈழத்தமிழர்கள் அனைவரும் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
சிதம்பரத்தில் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் கட்டிய ஞானப்பிரகாசர் குளம் பகுதியைச் சுற்றிக் காணப்படும், யாழ்ப்பாணத்தரசன் பரராசசேகரனால் கட்டப்பட்ட மடம் தொடங்கி, வன்னிய அரசர்களாலும் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலராலும் சிதம்பரத்தில் நிறுவப்பட்ட மடங்களைப் பாதுகாத்து அவற்றை ஈழத்தமிழர்களின் கலாச்சார நிலையப்பகுதியாக அறிவுக்குமாறு கேட்டுக் கொண்டார் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் திரு, எம்.டி ராமச்சந்திரன் அவர்கள். அவரது கோரிக்கை தமிழ்நாடு சட்டசபையின் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஈழத்தமிழர்கள் அனைவரும் தமது நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
சிதம்பரத்தில் அழிவுற்றும் ஆக்கிரமிக்கப்பட்டும் போன ஈழத்தமிழர்களின் பாரம்பரியச்சின்னங்களாகிய குளம், மடங்கள், பாடசாலைகள், என்பவற்றைப் பற்றிய மேலதிக விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.
சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்குமாறு செல்வி.ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்.
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தில்லை (சிதம்பரம்) ஆடவல்லான் கோயில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களும் புகழ் பெற்ற ஊர்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கும் சிதம்பரத்துக்குமுள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. எவ்வாறு ஈழத்தமிழர்களின் முன்னோர்கள் தில்லை ஆடவல்லான் கோயிலுக்கு திருப்பணி செய்து தமது தொடர்புகளைப் பேணி வந்தார்களே அதே போல் இன்றும் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்யும் ஈழத்தமிழர்கள் ஒருமுறையாவது சிதம்பரம் கோயிலைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை. ஆனால் ஈழத்தமிழர்களின் முன்னோர்கள் சிதம்பரத்தில் செய்த திருப் பணிகளும், அவர்களின் மடங்களும், அவர்கள் அமைத்த பாடசாலையும், ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சின்னங்களும் அழிவடைந்து, தேடுவாரற்று, ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அவர்கள் கண் கலங்குவது வழக்கம். அதனால் சிதம்பரத்திலுள்ள ஈழத் தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்களை அழிவிலிருந்து பாதுகாக்குமாறு தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிடம் கோருகிறார்கள் ஈழத்தமிழர்கள்.
யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் குளத்தினடியிலுள்ள சேக்கிழார் மண்டபம். இந்த மண்டபமுள்ள இடத்தில் தான் யாழ்ப்பாணம் மட்டுவில் க.வேற்பிள்ளை அவர்களின் வீடு இருந்தது.
சிங்களவர்களின் மகாபோதி சபைக்கு இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஆதரவும், பராமரிப்பும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது ஆனால் ஈழத்தமிழர்களின் சைவத்தமிழ்ப்பாரம்பரியச் சின்னங்கள் அழிவடைய விடப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாண அரசின் காலத்திலிலேயே ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகள் ஆற்றிய திருப்பணிகளும், சமூகத்தொண்டுகளும், குறிப்பாக சிதம்பரத்தில் ஈழத்து ஞானப்பிரகாசர் கட்டிய ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி அழிவுகளாக இன்று காணப்படுகின்றன.
சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் திருப்பணிகளைத் திருத்திப் பாதுகாப்பதற்காக,இந்த அறக்கட்டளைகளுக்குச் சொந்தமாக பெருமளவிலான நிலங்கள் தமிழீழம் முழுவதிலும், வடக்கில் மட்டுமல்ல, கிழக்கில் மட்டக்களப்பிலும் உண்டு. இந்தியா, இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னாலும் கூட, வசதி படைத்த ஈழத்தமிழர்களில் பலர் தமது சொத்துக்களில் ஒருபகுதியை சிதம்பரம் நடராசருக்கு எழுதிவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதனால் இன்றும் 'கோயிலுக்கு எழுதி வைக்கிறது" என்ற பேச்சு வழக்கு உண்டு. ஈழத்தமிழர்களின் அகராதியில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். ஆனால் இந்திய, இலங்கை அரசுகள் திட்டமிட்டு நெருக்கமான ஈழத்தமிழர் - தமிழ்நாடு தொடர்புகளை இரண்டு நாடுகளின் சுதந்திரத்தின் பின்னர் துண்டித்து விட்டன.
இலங்கையிலுள்ள அறக்கட்டளைகளின் நிர்வாகிகளாலும், சிதம்பரத்தில் திருப்பணி செய்தவர்களின் வாரிசுகளாலும் ஈழத்தமிழர்களின் மடங்களையும், பாடசாலையிலும், வேறு திருப்பணிகளிலும் சுதந்திரத்தின் பின்னர், மேற்பார்வையையோ அல்லது எந்தவித திருத்தங்களையோ செய்ய முடியாது போனதால், அங்குள்ள மக்களின் கவனமின்மையாலும், பல கட்டிடங்களையும், மடங்களும், குளமும் அழிந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, சில சொத்துக்களையும், நிலங்களையும் தனிப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் சிதம்பரம் கோயிலுக்கு தமது வாழ்நாளில் ஒருமுறையாவது செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் ஈழத்தின் சைவத்தமிழர்கள். குறிப்பாக மார்கழித் திருவாதிரைக்கு பல படகுகள் யாழ்ப்பாணத்திலிருந்து வேதாரண்யத்துக்குப் போகுமாம். அதனால் சிதம்பரத்தில் ஈழத்தமிழர்கள் தங்குவதற்காகப் பல மடங்கள் ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகளால் நிறுவப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள பல கிராமமக்கள் தங்களின் கிராமங்களின் பெயரிலேயே பல மடங்களை சிதம்பரத்தில் அமைத்தனர்.
சிதம்பரத்தில் அழிவடையும் ஈழத்தமிழர்களின் மடங்கள்
உண்மையில் அந்த மடங்கள் எல்லாம் மூன்று சுற்றுக்களையும் முற்றங்களையும் கொண்ட பெரிய கட்டிடங்கள் ஆனால் இன்று சிலவற்றில் வெறும் சுவர்களும் அத்திவாரமும் மட்டும் தான் எஞ்சிக் காணப்படுகின்றன. சில மடங்கள் சேரிகளாக மாறிவிட்டன. அவற்றில் முக்கியமானதும், புகழ்பெற்றதுமாகிய டச்சுக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு மடம் இன்று சரக்குகிடங்காவும், வெதுப்பகம் (Bakery) ஆகவும் மாறிவிட்டன. சிதம்பரத்தில் அந்த மடங்களையும், திருப்பணிகளையும் செய்த ஈழத்தமிழர்களுக்காகவும், இன்றைய காலகட்டத்தில் அந்த முன்னோர்களின் பெயராலும், அந்த வரலாற்றுச் சின்னங்களின் வாரிசுகளாகிய ஈழத்தமிழர்களுக்காகவும், தமிழ்நாடு அரசு அந்த மடங்களை ஈழத்தமிழர்களின் பாரம்பரிய இடங்களாக அறிவிப்பதுடன், அவற்றைத் திருத்தம் செய்து அல்லது மீளமைத்து, இலங்கையில் வாழும் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் த சிதம்பரத்தில் தமது முன்னோர்களின் பாரம்பரியத்தை எண்ணிப் பெருமிதப்படச் செய்ய வேண்டும் என செல்வி, ஜெயலலிதாவைக் கோருகின்றன அவற்றுடன் தொடர்பு கொண்டவர்களும். இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிதம்பரத்தில் திருப்பணிகளைச் செய்தவர்களின் வாரிசுகளும், சிங்கள அரசிடமிருந்தும், இன்று அவற்றை ஆக்கிரமித்திருப்பவர்களினதும் எதிர்ப்பை எதிர்கொள்ளப் பயந்து தமது பெயர் அடையாளங்களை வெளியிட விரும்பவில்லை.
POWER OF ATTORNEY
பெருமளவு பணத்தை இலங்கையில் கோயில் திருவிழாக்களிலும், தமிழ்நாட்டுத் தலயாத்திரைகளிலும் செலவிடும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோருக்கு சிதம்பரத்திலுள்ள ஈழத்தமிழர்களின் பாரம்பரிய மடங்களைப் பற்றியும், அங்கு ஆறுமுக நாவலர் அமைத்த சைவப்பிரகாச வித்தியாசாலை இருப்பதோ தெரியாது அதனால் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் உணரவில்லை. அதனால் அவற்றைப் பாதுகாப்பதற்கு இதுவரை எந்த நிறுவனமும் தலையிடவில்லை.
தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள்
ஈழத்தில் பாரம்பரியமிக்க நிறுவனமாகிய சைவபரிபாலனசபையையும், சிதம்பரத்திலுள்ள ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகளின் இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள தர்மகர்த்தாக்களையும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டு ஆதீனங்களையும், சைவமடங்களையும் கூட்டி ஆலோசிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தைச் செயற்படுத்தலாம். ஆனால் சிதம்பரத்திலுள்ள ஈழத்தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்கள், கட்டிடங்கள், நிலங்களுக்கான உண்மையான பாதுகாப்பு, அவற்றை ஈழத்தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களாக சட்டமூலம் பிரகடனப்படுத்துவதன் மூலமே உறுதிப்படுத்தப்படும். சிதம்பரத்திலுள்ள ஈழத்தமிழர்களால் கட்டப்பட்ட மடங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் அருங்காட்சியகமாக உருவாக்கலாம். பெரும்பாலான ஈழத்தமிழறிஞர்களும், ஈழத்மிழ் ஆர்வலர்களும் சிதம்பரத்தை தமது அறிவியல் தலைநகராகவும் ஆன்மீகத் தலைநகராகவும் கொண்டிருந்தனர்.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர் தண்டபாணி தேசிகர் ஆகியோர் ஆறுமுகநாவலரின் பாடசாலைகளில் புலமைத்துவம் பெற்ற ஈழத்தமிழ் ஆசிரியர்களாகிய யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த கதிரவேற்பிள்ளையினதும் மட்டுவில் கதிரவேற்பிள்ளையினதும் மாணவர்களாவார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியர் ஈழத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த சுவாமி விபுலானந்தராவார். மட்டுவில் கதிரவேற்பிள்ளை அவர்கள் சிதம்பரத்தில் ஆறுமுகநாவலரால் ஈழத்தமிழர்களின் உதவியால் கட்டப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக நீண்ட காலம் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். அவரது மாணவராகிய தண்டபாணி தேசிகர் தி.மு.க தலைவர் கருணாநிதியினதும், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனது ஆசானாகக் கருதப்படுபவர்..
சிதம்பரத்தில் யாழ்ப்பாண அரசன் பரராசசேகரனின் திருப்பணி
சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் ஆவணப்படுத்தப்பட்ட அறக்கட்டளைகளும்
திருப்பணிகளும் 16ம் நூற்றாண்டின் முற்பாகத்தில் யாழ்ப்பாண அரசன் பரராசசேகரனால் நிறுவப்பட்டது என்பது செப்புத்தகட்டில் பொறிக்கப் பட்டுள்ளது.
17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் வரணி கிராமத்தின் சைவ சித்தாந்த மடத்தினால் திருமறைக்காட்டு (வேதாரண்யம்) ஆலயத்துக்குரிய பெரிய மண்டபத்தையும், அதனுடன் தொடர்புள்ள 10 கோயில்களையும், 3000 வேலி( ஏறக்குறைய 15,000 ஏக்கர்) நிலத்தின் நிர்வாகத்தையும் தஞ்சாவூர் அரசனிடமிருந்து பெற்றுக் கொன்டனர். வரணி மடத்தின் ஆதீனத்தால் தஞ்சாவூர் அரசனின் நோயைத் தீர்த்தமைக்காக அந்த அரசனால் அவர்களுக்கு அந்த உரிமைகள் வழங்கப்பட்டன. தாயுமானசுவாமிகள் துறவறத்தை மேற்கொள்ள முன்பு வரணி மடத்தில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர். அதே யாழ்ப்பாணத்து வரணி சைவசித்தாந்த மடம், சிதம்பரத்திலும் ஒரு மடத்தை அமைத்தது, ஆனால் அதன் சுவர்கள் மட்டுமே இன்றுள்ளது.
சிதம்பரத்தில் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் குளமும் மடமும்
17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறாமல் சைவசமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பசுமாட்டை அவர்களுக்கு உணவுக்காக அளிக்க வேண்டுமெனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்தக் கட்டளைக்குப் பணிய மறுத்து அங்கிருந்து தப்பி சிதம்பரத்துக்குச் சென்று துறவறம் பூண்ட, யாழ்ப்பாணம் திருநெல்வேலிக் கிராமத்தின் தலையாரி தான் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச முனிவர். அவரால் சிதம்பரத்தில் ஞானப்பிரகாசர் குளமும் மடமும் அமைக்கப்பட்டது. அந்த மடத்தை சுற்றியே சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் மடங்களும், வீடுகளும் அமைந்தன.
சிதம்பரத்திலுள்ள யாழ்ப்பாண ஞானப்பிரகாசர் மடத்தை திருத்தி மீளமைக்க ஈழத்தமிழர்கள் உதவுவர்.
ஞானப்பிரகாசர் மடத்தின் வளவின் ஒருபகுதி ஏற்கனவே அரசாங்கத்தால் சிதம்பரம் அரசினர் மருத்துவநிலையத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. மடத்தின் மூன்று சுற்றுக்கள் கொண்ட வளாகமும் அதன் மரவேலைப்பாடுகளும் இன்றும் அதன் கட்டிடக் கலையின் நுட்பத்தைக் காட்டி நிற்கிறது. ஆனால் அந்த மடம் இன்று பொருட்களைச் சேமித்து வைக்கும் கிடங்காகவும், பேக்கரியாகவும் மாறி விட்டது இன்று. அந்த மடத்தின் தர்மகர்த்தாக்கள் வழிவந்த காரைநகரைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியையும் காரைநகரையும் சேர்ந்த மக்கள் கோயில் திருப்பணிகளுக்காக பணத்தைச் செலவிடத் தயங்காதவர்கள் ஆனால் அவர்களுக்கு எப்படி பாரம்பரிய சின்னங்களைக் காக்கும் திட்டங்களை அதுவும் வேறொரு நாட்டில் செய்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும், நிர்வாக ஒழுங்கமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் வழிகாட்டல் தேவை என புலம்பெயர் தமிழர்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண நல்லூர் நாவலரால் நிறுவப்பட்ட சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை
நல்லூர் ஆறுமுகநாவலர் சிதம்பரம் ஞானப்பிரகாசமுனிவரின் பரம்பரையில் வந்தவர், அவரும் பல திருப்பணிகளையும் அறக்கட்டளைகளையும் சிதம்பரத்தில் மேற்கொண்டார். 1860 இல் ஆறுமுகநாவலரால் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை, 1840 இல் அவரால் இலங்கையில் அமைக்கப்பட்ட பாடசாலையின் அமைப்புடனும், பாடத்திட்டத்துடனும் தொடங்கப்பட்டது. அவரது பாடசாலைகள் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கியது மட்டுமன்றி உயர்தரக் கல்வியை, அதுவும் கணிதம், விவசாயம், வர்த்தகம், அரசியல், புவியியல், சோதிடம், சித்தமருத்துவம் போன்றவற்றுடன் சைவமும் தமிழும் கற்பிக்கப்பட்டன. அவர் தன்னுடைய பாடசாலைகளினதும் அறக்கட்டளைகளினதும் நிர்வாகத்தை தன்னுடைய மாணவர்களிடம் விட்டுச் சென்றார்.
1930 இல் பிரிட்டிஸ் இந்தியாவில் நடந்த ஒரு வழக்கில் யாழ்ப்பாணத்தில் யார் அறக்கட்டளைகளின் நிர்வாகத்தை மேற்கொள்கிறார்களோ அவர்களாலேயே சிதம்பரத்திலுள்ள அறக்கட்டளைகளின் நிர்வாகமும் நடைபெற வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்தின் பின்னால் கொழும்பு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்த சைவப்பிரகாச வித்தியாசாலை ஆதரிப்பாரற்று அனாதையாகி, சிறுவர் பாடசாலையாக மாற்றப்பட்டது. 1950 இல் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஐந்து பேர் கொண்ட நிர்வாகசபை ஆறுமுகநாவலரால் நிறுவப்பட்ட சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு நிறுவப்படவும், அதில் இரண்டு உறுப்பினர்கள் (யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையிலிருந்து ஒருவர், மற்றவர் இந்து கல்வி மகாசபை) யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழர்களாக இருத்தல் வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள குன்றக்குடி மடத்துக்கு நாவலரின் அறக்கட்டளைகளையும், சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையையு, நாவலர் வாழ்ந்த வீட்டையும் பாதுகாக்கும் உரிமை (Power of Attorney) ஈழத்தமிழர்களால் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் யாழ்ப்பாணத்து சைவபரிபாலன சபையின் கீழ் இன்றும் சிதம்பரத்திலுள்ள புண்ணியநாச்சி மடத்தின் நிர்வாகமுள்ளது. சிதம்பரத்திலுள்ள யாழ்ப்பாணத்தாரின் அழியாதிருக்கும் மடங்களில் இது ஒன்று தான் முறையாக நிர்வாகிக்கப்படுகிறது. ஆனால் அதன் ஒருபகுதி கூட இன்று எரிபொருள் விற்பனை நிலையமாகவும், இன்னொரு பகுதி பழமைவாய்ந்த அதன், பாரம்பரிய கட்டிட அமைப்பை மாற்றி, அதன் முற்றத்தை நவீன கல்யாணமண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வரணி, கல்வியங்காடு கிராமங்களின் மடங்கள் இன்று முற்றாக அழிந்து விட்டன, கொக்குவில், சங்கானை கிராமங்களின் மடங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.
அழிவடைந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாதகல் என்ற ஊரின் சிதம்பரத்திலுள்ள மடம், அண்மையில் 2008 ல் சிதம்பரத்திலுள்ள தீட்சிதர் ஒருவருக்கு மாதகலில் உள்ள தர்மகர்த்தாக்களால் அந்த மடத்தை நிர்வாகிக்கும் உரிமை (Power of Attorney) வழங்கப்பட்டது. அதற்கான காரணம் யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்பரத்துக்கு அடிக்கடி பயணம் செய்து மடத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாமையே எனக் கூறினார் ஈழத்தில் வாழும் தர்மகர்த்தா. ஆனால் யாழ்ப்பாணத்தில் மாதகல் தான் தமிழ்நாட்டுக்கு மிகவும் அண்மையிலுள்ள ஊர்.
சிதம்பரத்திலுள்ள மாதகல் மடத்தின் இப்போதைய நிர்வாக நிலைமையை இங்கு இணைக்கப்பட்டுள்ள (Power of Attorney) மூலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் அறிந்து கொள்ளலாம்.
(http://www.tamilnet.com/img/publish/2013/04/Chithamparam_Mutt_PoA.pdf)
ஆனால் ஈழத்திலுள்ள பல நிலங்களும், சொத்துக்களும் சிதம்பரத்திலுள்ள யாழ்ப்பாண மடங்களின் செயல்பாடுகளுக்கும், சுமுகமான நிர்வாகத்துக்கும், கட்டமைப்புக்கும் அளிக்கபட்டிருந்தாலும் அவையெல்லாம் இன்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சிதம்பரத்திலுள்ள இந்த அறக்கட்டளைகளும், மடங்கள் எல்லாம் அவற்றை உருவாக்கிய சமுதாயத்தின் வழிவந்த ஈழத்தமிழர்களுக்கே உதவாமல் போய், அவை அடுத்தவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாக விடப்பட்டு விட்டன.
இவற்றுக்கெல்லாம் மாறாக,1891 இல், கொழும்பிலும், கல்கத்தாவிலும் ஆரம்பிக்கப்பட்ட சிங்களவர்களின் மகாபோதி குழுமம் , இன்றும் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் செழிப்பாக இன்றும் இயங்குகிறது. மகாபோதி குழுமத்துக்கு இந்தியாவின் முக்கியமான பெளத்த தலங்களாகிய புத்த காயாவினதும், சாஞ்சியினதும் நிர்வாகம் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் வழங்கப்பட்டும் இன்றும் தொடர்கிறது.
நன்றி :
http://viyaasan.blogspot.com/2013/05/blog-post_26.html
http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_4167.html