Tuesday, January 3, 2012

வன்னிய குல வேந்தன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி ஆண்ட 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் கூறும் "நடுநாட்டை" பற்றிய ஒரு ஆய்வு :

வரலாறு : 

தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. வன்னியர் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி இது .


இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது. 

எ-கா : திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு. சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது. 

பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலூரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது. ஆற்றுரை தலைநகராகக் கொண்டு, இப்பகுதியை ஆண்ட ஏகம்பவாணன் பற்றி பெருந்தொகை பாடல்களால் அறிகிறோம். சோழராட்சிக்குப் பின் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், கர்நாடக ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் என அவரவர் கால ஆட்சியில் அவர்களிடம் சென்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாலாற்றுக்கு வடக்கில் இருப்பவை வடாற்காடு எனவும், தெற்கில் இருப்பவை தென்னாற்காடு எனவும் பிரிக்கப்பட்டன. பின்னர் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டம்பர் 30 இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

எல்லைகள் : 

விழுப்புரம் மாவட்டத்தின் தெற்கே திருச்சிராபள்ளி, கடலூர் மாவட்டங்களும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும், மேற்கே திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மவட்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 



ஆற்றுவளம் :

கெடில நதி : 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மையனுர் என்னும் ஊருக்கருகில் தோன்றி 112 கி.மீ ஓடி கடலூருக்கருகில் கலக்கிறது. திருக்கோவிலூர் வட்டத்தில் தாழனோடை என்னும் துணையாறு கெடிலத்தோடு கலக்கிறது. திருக்கோவலூருக்கு அருகில் உள்ள வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் பெண்ணையாற்றிலிருந்து பிரியும் சிற்றாறு மலட்டாறு எனப்படுகிறது. 

செஞ்சி ஆறு : 

சங்கராபரணி ஆற்றின் கிளை நதியாகச் செஞ்சி வட்டத்தில் ஓடும் ஆற்றுக்கு அதுபாயும் பகுதியின் பெயரால் செஞ்சி ஆறு என அழைக்கப்படுகிறது. பெரிதும் மழைக் காலத்தில்தான் நீர் நிறைந்து காணப்படும். 

சங்கராபரணி ஆறு : 

செஞ்சி வட்டத்தில் சில மைல்கள் அளவே ஓடி விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இதுவும் சிறிய ஆறுகளில் ஒன்று. மழைக் காலத்தைத் தவிர பிற மாதங்களில் நீர் இருக்காது. இவை தவிர பெண்ணையாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு போன்றவையாலும் பலன் பெறுகிறது. வீடூர் அணைத்தேக்கம் தவிர 4 நீர்த் தேக்கங்களால் விவசாயம் செழிக்கிறது. 

வேளாண்மை : 

மொத்த சாகுபடி பரப்பு: 3,21,978 ஹெக்டேர். இதில் நெல் மட்டும் 1,29,00 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு அடுத்து கரும்பு, மணிலா உற்பத்தி மாவட்டம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கடுத்த படியாக பருத்தி, பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் நவதானியங்களும் விளைவிக்கப்படுகின்றன. 

கல்ராயன் மலை : 

கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான வளமும், காட்டு வளமும் உடையது. கல்வி ராயன் மலை என்பதே நாளடைவில் கல்ராயன்மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையில் தேக்கு, சந்தனம், கடுக்காய், மூங்கில், முந்திரி முதலியவை கிடைக்கின்றன.

முள்ளூர் மலைக்காடு : 

திருக்கோவலூர் வட்டத்திலும் சிறு, சிறு மலைக் குன்றுகளும், காட்டுப் பகுதிகளும் உள்ளன. 

செஞ்சிமலை :

கல்ராயன் மலைத் தொடர்ச்சியே செஞ்சி மலையாகும். செஞ்சி வட்டத்திற்கு எல்லையாக அமைந்திருப்பதால் அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. 


கனிவளம் : 

பயர் க்ளே என்கிற கனிமம் திண்டிவனத்தில் கிடைக்கிறது. ஸ்டீடைட் என்கிற தாது கள்ளக் குறிச்சி வட்டத்தில் 25,000டன் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது. சிலிகாமண்-அகரத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளிலும், அதை அடுத்த மரக்காணம் பகுதியிலும் இரண்டு இலட்சம் டன்கள் இருப்பதாக கூறுகின்றனர். பிளாக் கிரானைட் (கருப்பு கருங்கல்) வானுர், திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதிகளில் ஏற்றுமதிக்கு உகந்த-தரமான கற்கள் 25,00,000 க்யூ.எம் கிடைக்கிறது. மல்டி கலர்டு கிரானைட் (பலவண்ண கருங்கல்) செஞ்சி, விழுப்புரம், கள்ளக் குறிச்சியில், கிடைக்கிறது. புளுமெட்டலும் இதே பகுதிகளில் 
கிடைக்கின்றது.


வழிபாட்டுத் தலங்கள் :

திருக்கோவலூர் : 
Thirukovalurஇவ்வூர் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஊர் மேலூர், கீழூர் என 2 பிரிவாக உள்ளது. சிவன் கோவில் கீழூரிலும், திருவிக்கிரமப் பெருமாள் கோவில் மேலூரிலும் உள்ளன. இறைவன் பெயர் வீரட்டேசுரர்; அம்மை: சிவானந்தவல்லி. வள்ளல்பாரி மறைந்த பின்னர், பாரிமகளிரை திருக்கோவலூர் மன்னனுக்கு மணம் முடித்து விட்டு கபிலர், பாரியின் பிரிவுத்துயரை ஆற்றாமல் வருந்தி, பெண்ணையாற்றின் நடுவில் உள்ள மணற்பரப்பில் வடக்கிலிருந்து உயிர் துறந்தார். கபிலர் உயிர் விட்ட கல் ஆற்றில் இன்றும் காணப்படுகிறது. ஆண்டு தோறும் மே 1 முதல் 5 வரை கபிலருக்கு விழா இங்கு நடைபெறுகிறது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. 

திருவறையணி நல்லூர் : 

அறை கண்ட நல்லூர் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. திருக்கோவிலூரில் உள்ள பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. கோயில் குன்றின் மேல் கட்டப் பட்டுள்ளது. இக்குன்றின் மீது நின்று பார்த்தால் திருவண்ணாமலையின் திருமுடி தெரியும். இறைவன் மேற்கு பார்த்து உள்ளார். பெருங்குளம் ஒன்று பாறையில் உள்ளது. இதற்குப் பக்கத்தில் ஐவர் குகைகளும் சிறு அறையும் உள்ளன. 

திருவிடையாறு : 

திருவெண்ணைநல்லூர் சாலை என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 5 கி.மீ உள்ளது. இறைவன்: இடையாற்றுநாதர்; இறைவி: சிற்றிடை நாயகி.

திருநெல்வெண்ணெய் : 
இது தற்போது நெய்வெணை என அழைக்கப்படுகிறது. இவ்வூர் உளுந்தூர்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 7 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: வெண்ணெய்யப்பர். இறைவி: நீலமர்க்கண்ணம்மை.

திருவடுகூர் : 

விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் புகைவண்டி வழித்தடத்தில் சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் ஆண்டார் கோவில் என்னும் திருவடுகூர் அமையப் பெற்றுள்ளது. 

திருவெண்ணெய் நல்லூர் : 

இறைவன் தடுத்தாட் கொண்டநாதர், அம்மை: வேற்கண்மங்கை; விழுப்புரத்திற்கு மேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. திருவருட்டுறை என்பது கோயிலின் பெயர். 'சிவஞானபோதம்' இயற்றிய மெய்கண்டதேவ நாயனார் இருந்த ஊர். 

திருமுண்டீச்சரம் : 
திருக்கண்டீச்சரம் என்னும் இப்பகுதி திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவாமாத்தூர் : 

இறைவன்: அழகியநாதர்; அம்மை: அழகிய நாயகி. விழுப்புரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ. தொலைவில் பம்பை என்னும் சிற்றாற்றின் வடகரையில் உள்ளது. புலவர் புராணம் பாடிய திருபுகழ்த் தண்டபாணியடிகள் (சமாதி) கற்குகை இங்குள்ளது. 

திருப்புறவார் பனங்காட்டூர் : 

இறைவன் : பனங்காட்டீச்சுரர். இறைவி: புறவம்மை. பனையபுரம் என வழங்கும் இவ்வூர் விழுப்புரத்தை அடுத்துள்ள முண்டியம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சித்திரைத் திங்கள் முதல்நாள் முதல் ஏழாம் நாள் வரை, நாள்தோறும் காலையில் கதிரவன் கதிர்கள் முதலில் இறைவன் மேலும், பின்னர் இறைவி மேலும் விழுகின்றன. 

திருவக்கரை : 

விழுப்புரம் நிலையத்திலிருந்து வடக்கே புறவார் பனங்காட்டூர், கூனிச்சம்பட்டு, கொடுக்கூர் ஆறுவழியாகவுமThiruvakkkarai் செல்லலாம். புதுச்சேரி வழியில் மானுரிலிருந்து மேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இறைவன் திங்களுக்காக ஒரு முகமும், பிரமனுக்காக ஒரு முகமும், திருமாலுக்காக ஒரு முகமும் கொண்டு மூன்று முகங்களுடன் விளங்குகிறார். கோயிலுக்கு முன்புறத்தில் இலிங்கம் உள்ளது. காளி உருவம் தென்பால் உள்ளது. இங்குள்ள காளியை வக்ரகாளி என அழைக்கின்றனர். காளியின் காதில் குழந்தையின் உருவம் குண்டலமாகத் தொங்குகிறது. இடக்கையில் வில் இருக்கிறது. திருமால் கோயில் மேற்கு பார்த்த நிலையில் திருச்சுற்றில் உள்ளது. இங்குள்ள நந்தி பெரியது. சிவபெருமான் இடக்காலையூன்றி, வலக்காலைத் தூக்கி நிற்கிறார். இது புதுமையாக உள்ளது. திண்டிவனத்தைத் தண்டக வனம் என்றும், திருவக்கரையை குண்டலி வனம் எனவும் கூறுகிறார்கள். 

கல்மரம் : 

'மரம் கல்லாலானதை' இங்கு பார்க்கலாம். இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

மயிலம் : 

திண்டிவனத்திலிருந்து கிழக்கே புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. பரந்த மேட்டின் மேல் அமைந்துள்ள இவ்வாலயம், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ளது. பங்குனி உத்திரம் காவடி ஊர்வலம் பார்க்க வேண்டியது. இங்கு பல சாமியார்களின் சமாதிகள் உள்ளன. 

சுற்றுலாத் தலங்கள் :

செஞ்சிக் கோட்டை : 

Gingeeசெஞ்சி நகருக்கு மேற்கே ஒருமைல் தொலைவில் கோட்டைகள் உள்ளன. முக்கோண அமைப்பில் மூன்று குன்றுகள் உள்ளன. ஒவ்வொரு குன்றிலும் சுற்றிப் பீரங்கிகள் வைத்துப் போரிட 60 அடிகொத்தளங்கள் அமைந்துள்ளன. வடக்கே உள்ளது கிருஷ்ணகிரி; தெற்கே உள்ளது சந்தரையன் துர்க்கம்; மேற்கேயுள்ளது மிகவும் உயர்ந்த இராஜகிரி. ஆனந்தக் கோன் என்பவரால் கட்டப்பட்டது. தேசிங்கு ராஜன் இங்குGingee ஆண்டதை 'தேசிங்கு ராஜன் கதை' கூறுகிறது. சஞ்சீவி மலையே - செஞ்சி-ஆனதாக கூறுகின்றனர். இக்கோட்டையில் அரச குடும்பத்தினர் நீராடுவதற்கு குளம் ஒன்றும், அந்தப்புறமும், விசாரனை மன்றமும், திருடர்களை விசாரிப்பதற்கென்று தனி இடங்களும் உள்ளன. கலை அமைப்போடு, அக்கால தொழில் நுட்ப முறையில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை இன்றும் காண்போர் மனதைக் கவர்கிறது. தானிய சேமிப்பு கிடங்குகள் பல பூமிக்குக் கீழும், மேலும் கட்டப்பட்டுள்ளன.

கல்ராயன்மலை : 

திருக்கோவலூரிலிருந்து பேருந்து வசதி உண்டு. கல்ராயன் மலையில் 'மலையாளிகள்' என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்ராயன் மலைக்காடு வளமான காடுகளைக் கொண்டது. இங்கு மூங்கில், தேக்கு, கடுக்காய் மரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. மலையின் மீது சில இடங்களில் பழத்தோட்டங்கள் உண்டு. இயற்கை அழகை காண்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. சுனைகள், பள்ளத் தாக்குகள், சிற்றருவிகள் உண்டு. இங்குச் சிறு விலங்குகளான மான், கீரி, பாம்பு, நரி, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு, கெளதாரி முதலியவற்றைப் பார்க்கலாம்.

முக்கிய ஊர்கள் :

விழுப்புரம் :

Villupuramமாவட்டத்தலைநகர். மொத்த வியாபாரிகள் நிறைந்த ஊர். இவ்வூர் கல்வி, மருத்துவம், மாவட்ட அலுவலங்கள் நிறைந்தது. பல வருடங்களாக, வனஸ்பதி தொழிற்சாலை ஒன்று-இங்கு நடைபெற்று வருகிறது. ஆண்டொன்றுக்கு 7,500 மெ.டன் வனஸ்பதி தயாராகிறது. பல சிறு,சிறு எண்ணெய் ஆலைகளும் இங்கு உள்ளன. சென்னைக்கும் திருச்சிக்கும் அடுத்தபடியாகத் தென்னக இரயில்வேயினால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவது விழுப்புரம் இரயில் சந்திப்பு நிலையமாகும். இங்கிருந்து திருச்சிக்கு மெயின்லைன், காட்லைன் இரண்டும், சென்னைக்கு ஒன்றும், காட்பாடிக்கு ஒன்றும், புதுவைக்கு ஒன்றுமாக ஐந்து புகை வண்டிப் பாதைகள் செல்கின்றன. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இந்தச் சந்திப்பு 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இதுபோலவே பேருந்து நிலையமும் செயல்படுகிறது.

திண்டிவனம் : 

விழுப்புரத்திற்கு அடுத்த பெரும் நகரம் இது. சிறந்த வணிகத்தலம். நெல் கொள்முதல் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. அரிசி ஆலைகள் பல இயங்கி வருகின்றன. புளியமரங்கள் நிறைந்த காரணத்தால் திண்டிவனம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இதன் பெயர் கிடங்கில். இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் இப்பகுதியை ஆண்டான் என்று "சிறுபாணாற்றுப்படை" கூறுகிறது. இவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர் பாடினார். இவரும் இப்பகுதியைச் சேர்ந்த 'மரக் காணத்தை' சொந்தவூராகக் கொண்டவர் என்கின்றனர். நிலவளம் மிக்க இவ்வூர் பெரும்பாலும் வானம் பார்த்த பூமி. மணிலா, நெல் முக்கிய பயிர்களாகும்.

மரக்காணம் : 

கடற்கரையோமாக உள்ள ஊர். இங்கு பழைய காலத்தில் துறைமுகம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. தற்போது பெருமளவில் உப்பு விளைவிக்கப்படுகிறது.

கள்ளக் குறிச்சி : 

கல்ராயன் மலையை அரணாகக் கொண்ட காடுகள் நிறைந்த வட்டம் கள்ளர்கள் நிறைந்த காட்டுப் பிரதேசமாக விளங்கியதால் 'கள்ளர் குறிச்சி' பின்னர் கள்ளக்குறிச்சியாக மருவியிருக்கலாம் என்கின்றனர். மற்ற வட்டத்தை விட இங்கு மக்கள் தொகை குறைவு. 18-ஆம் நூ ற்றாண்டில் முக்கியத்துவம் உள்ள ஊராக இருந்தது. 

தியாகதுருகம் : ThiyagaDurgam

கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மலையில் நவாப்புக்கால் கோட்டையும், பீரங்கிகளும் காணப்படுகின்றது. மலைமீது மலையம்மன் என்ற சமணர்களுடைய கோயில் உள்ளது.மலையின் அடிவாரத்தில் உள்ள குளதின் அருகில் செல்லி அம்மன் கோயில் காணப்படுகிறது. ஆசிரியர் சக்திவேலன் வசிக்கும் ஊரும் இதுதான்.

ரிஷிவந்தியம் : 

கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவிலுள்ளது. இங்குள்ள உமையொரு பாகரின் கோயிலில் தட்டினால் இசை எழுப்பும் தூண்கள் உள்ளன. இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அவ்வுருண்டையை நம் கைவிரலால் எப்பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால் வெளியை எடுக்க முடியாத சிறந்த சிற்ப வேலைப்பாடாகும். இக்கோயில் திருமலை நாயக்கர் சிலை இருக்கிறது. 

மேல் மலைனுர் : 
Melmalaiyanur
இங்கு மீனவர்கள் குலதெய்வமான அங்காளம்மன் ஆலயம் உள்ளது. மாசி மாதத்தில் 'மசானக் கொள்ளை' பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிராமணியின் பங்கேப்பு விச்சித்திரமாக இருக்கும். 

சிங்கவரம் : 

செஞ்சிக்கு 2 மைல்கள் வடக்கில் உள்ளது. தேசிங்குராஜனால் வணங்கப்பட்ட 24அடி நீளம் உள்ள ரங்க நாதர், ஆதிசேசன்மேல் படுத்திருப்பது போல் அமைந்துள்ளது. தலை சற்று திரும்பி இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. 

சித்தாமூர் : 

திண்டிவனத்திற்கு வடக்கில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமிழ்நாட்டு சமணர்கள் நிறைய வாழ்கின்றனர். தமிழகத்திலுள்ள ஒரே ஒரு ஜைன மடம் இங்குள்ளது. மடத்தில் எண்ணற்ற சமண சமயம் தொடர்பாக ஏடுகளும், ஆவணங்களும் உள்ளன. நாயக்கர் கால சமணசமயம் சார்பான ஓவியங்கள் உள்ளன. ஜைனர்களுக்கு முக்கியமான தலமாகும். 

பெருமுக்கல் : 

8-ஆம் நூற்றாண்டிலிருந்து பல போர்களைக் கண்ட பூமி. நில மட்டத்திற்கு மேல் 300 அடி உயரத்தில் மலைகளால் சூழப்பட்ட பீடபூமிப் பிரதேசம். 1760 இல் லாலி துரையால் குடியேற்றம் செய்யப்பட்டு கூட் என்கிற ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இவ்விடம் படைத்தளமாக பயன்படுத்தப்பட்டது. 1781-இல் ஹைதர்அலி பிரஞ்சுக்காரர்களின் உதவியுடன் இதைக் கைப்பற்றினார். 1783 இல் தளபதி ஸ்டூவர்டால் இவ்விடம் அழிக்கப்பட்டது. பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இவ்விடங்களில் கிடைத்துள்ளது தொல்பொருள் ஆய்வாளர் விரும்பி பயணம் செய்யும் இடம். 

உளூந்தூர் பேட்டை : 

விழுப்புரம்-திருச்சி வழித்தடத்தில் உள்ள முக்கிய ஊராகும். இங்கு பலாப்பழமும், கொய்யா, மா, முந்திரி போன்றவை பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. 

எலவானாசூர் : 

பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர மன்னர்களால் பற்றி கல்வெட்டுகள் கொண்ட கோவில் இங்குள்ளது. இவ்வூர் திருக் கோயிலுக்கு கிழக்கில் 4 வது கி.மீ உள்ளது. இங்கு மீர் ஹூசைன்கான் என்ற போர் வீரன் பெரும் துன்பங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தான். அவனை 1757 இல் பிரஞ்சு படை முறியடித்தது. அவன் இருந்த கோட்டை இங்குச் சிதலமடைந்து காணப்படுகிறது. 

திருவெண்ணெய் நல்லூர் : 

திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூர், கம்பராமாயணம் எழுதிய கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊர். இருவருக்கும் உருவச் சிலைகள் இவ்வூர் கோயிலில் உள்ளன.

மோக்ஷ குளம் : 

விழுப்புரம் வட்டத்திலுள்ளது இவ்வூர். இங்கு பட்டு நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. குடந்தை, காஞ்சி, பட்டு வகைகளுக்கு இணையாக செய்யப்படுகிறது. 

கூவாகம் : 

திருக்கோயிலூருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இங்கு அரவானுக்கு ஒரு கோயில் உள்ளது. இதை கூத்தாண்டவர் கோயில் என்பார்கள். இங்கு அரவானுக்கு தாலி கட்டி அறுக்கும் 'அலி' களின் திருவிழா பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 

மேச்சேரி : 

செஞ்சிக்கு வடக்கில் உள்ளது. இவ்வூர் குன்றில் பாறைச் சரிவில் குளத்தை நோக்கிய கோயில் இருக்கிறது. இக்கோயில் சத்திராதித்யன் என்பவனால் குடைவிக்கப்பட்டது என்கின்றனர். இது பாண்டியர் பாணியுள்ள கோயில், பல்லவர் கால கிரந்த எழுத்து இங்குள்ளது. 

புகழ்பெற்ற பெருமக்கள் : 

சென்னை ராஜதானி முதல்வராக இருந்த ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், உழைப்பாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி, தங்கராஜ் முதலியார், அ.கோவிந்தசாமி, சண்முக உடையார், நடேச முதலியார், திண்டிவனம் இராமமூர்த்தி, திருக்குறள் வி.முனுசாமி, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.