Sunday, April 13, 2014

தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் - "சேத்தியார் "


தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் :



இக்கோவிலின் முதல் மரியாதைகளும் உரிமைகளும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள "பூதங்குடி " பகுதி "சேத்தியார் " பட்டம் கொண்ட வன்னியர் குடும்பத்திடம் உள்ளது ....

இந்த கோவிலை பற்றிய செய்தி:

சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பு, வனம் போன்ற பகுதியாக பூதங்குடி இருந்தது. குடியிருப்பு மிகக் குறைவாக இருந்த காலம். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த அமரர் ஜெயராமன் இவ்வூரைச் சேர்ந்தவர்.

இவரது பரம்பரைக்கு சேத்தியார் குடும்பம் என்ற பட்டப்பெயர் உண்டு. அத்தகைய சேத்தியார் குடும்பத்து வாலிபர் ஒருவர் ஒருசமயம் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார். அப்படிப் போகும் வழியில் சுமார் ஐந்து வயதுள்ள சிறு பெண்பிள்ளை காட்டில் தன்னந்தனியாக சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்.

மிருகங்கள் வாழும் இப்படிப்பட்ட கொடூரமான காட்டுப் பகுதியில் எப்படி இந்தச் சிறுமி தன்னந்தனியாக சிறிதும் பயமின்றி நடமாடுகிறாள் என்று வியப்பும் ஆச்சரியமும் மேலிட, அந்தச் சிறுமியை அணுகி, ""எப்படியம்மா இந்தக் காட்டிற்குள் தனியாக வந்தாய்'' என்று விசாரித்தார்.

அந்தச் சிறுமியோ மிகத் தெளிவாகப் பேசினாள். ""இந்தக் காட்டுவழியே உறவினர்கள் ஊருக்குப் போக என் பெற்றோருடன் வந்தேன். வரும் வழியில் பாதை தவறிவிட்டேன். பெற்றோர் சென்ற பாதை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருகிறேன்'' என்று சொன்னாள். அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறிய அவர்,

""பயப்படாதே, என்னோடு வா'' என்று தமது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

சிறுமியோடு ஊருக்கு வந்தபிறகு, "இப்படிப்பட்ட சிறுமியை காட்டில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளோம். அவளது பெற்றோர், உறவினர்கள் யாராவது இருந்தால் வந்து அழைத்துப் போகலாம்' என்று அக்கம்பக்க ஊர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பினார். ஆனாலும் யாருமே அக்குழந்தையைத் தேடி வரவில்லை.

"சரி, இவள் யார் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் இருக்கட்டும்; இனிமேல் இது நம் வீட்டுக் குழந்தை. நாமே வளர்ப்போம்' என்று முடிவு செய்து, அந்தச் சிறுமிக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.

அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அந்தக் குடும்பத்தில், வனத்தில் கண்டெடுத்த நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தேவதையாக வளர்ந்து பருவ வயதை அடைந்தாள்.

இந்நிலையில் நாச்சியாரை மகள்போல் வளர்த்து வந்தவர், திடீரென்று உடல்நலம் கெட்டு இறந்து போனார். சேத்தியார் மறைவு அப்பகுதி மக்களை கடுந்துயரத்தில் ஆழ்த்தியது. அவரது உடலைத் தகனம் செய்யக் கொண்டு போனார்கள்.

அப்போது நாச்சியார், ""நானும் இடுகாட்டிற்கு வருவேன்'' என்றாள். ஊர்ப்பெரியவர்கள், ""பெண் பிள்ளைகள் வரக்கூடாது'' என்றார்கள். ""காட்டிலே தனியாக நின்ற என்னை இங்கு கொண்டு வந்து வளர்த்த தந்தை அவர்.

அப்படிப்பட்டவரின் இறுதிச் சடங்கின்போது நானும் உடனிருந்து பார்க்கவேண்டும்'' என்று பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி நாச்சியாரையும் மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். சேத்தியாரின் உடல் முழுவதும் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டும்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அத்தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக்கொள்ள முயன்றாள் நாச்சியார்.

அவளைத் தடுத்து, ""நீ வாழவேண்டிய பெண். உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை'' என்று ஊர்ப்பெரியவர்கள் அறிவுரை கூறினர்.

ஆனால் நாச்சியார் மிகப் பொறுமையாக- நிதானமாக- உறுதியோடு சொன்னாள். ""நீங்கள் நினைப்பதுபோல் நான் சாதாரண பெண்ணல்ல. தெய்வ அருளால் இங்கு வந்தவள். மற்ற பெண்கள்போல் கணவன்- மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்று சாதாரண வாழ்க்கை வாழ வந்தவள் அல்ல நான். உங்களையும் உங்களைப் போன்ற மக்களையும் தெய்வமாக இருந்து வாழவைக்க வந்தவள் நான்.

உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் நான் சொல்வதுபோல செய்யுங்கள். ஒரு தாம்பூலத் தட்டில் பூ, பழம், தேங்காய், புடவை உட்பட பூஜைப் பொருட்களை வைத்துக் கொடுங்கள். அதை என் கையில் ஏந்தியபடி தீயில் பாய்கிறேன். அப்போது நான் மட்டுமே எரிந்து பஸ்பமாக மறைந்துவிடுவேன். என் கையில் உள்ள தட்டும் பூஜைப் பொருட்களும் தீயில் எரியாமல் நீங்கள் எப்படி என் கையில் கொடுத்தீர்களோ அதேபோன்று இருக்கும். அப்போது நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்குப் புரியும்.

அதன்பிறகு என்னை தெய்வமாக நினைத்து வணங்குங்கள். உங்களுக்கு எல்லா நலமும் கிடைக்கச் செய்வேன்'' என்று நாச்சியார் சொல்லிமுடித்தாள்.

ஊர் மக்களும் நாச்சியாரின் பேச்சிற்கு கட்டுப்பட்டனர். தாம்பூலத் தட்டோடு நாச்சியார் தீயில் பாய்ந்தாள். நாச்சியார் மறைந்து போனாள். அவள் சொன்னதுபோலவே, தாம்பூலத் தட்டும் அதிலிருந்த பூஜைப் பொருட்களும் கொஞ்சம்கூட தீயில் கருகாமல் அப்படியே இருந்தன. நாச்சியார் தெய்வமானாள் என்பது உறுதியானது.

அதன்பிறகு அப்பகுதியிலிருந்த அழிஞ்சி மரத்தினடியில் நாச்சியார் நினைவாக செங்கல்லால் சிறிய சந்நிதி அமைத்து சேத்தியார் குடும்பத்து வம்சாவழியினர் வழிபட்டு வந்தார்கள்.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=16626