Tuesday, November 29, 2011

கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி:


முன்னொரு காலத்தில் கொல்லி மலையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் வல்வில் ஓரி என்பவன் ஆண்டு வந்தான். அறிவிலும், செல்வத்திலும், ஈகைக் குணத்திலும் சிறந்து விளங்கிய வள்ளல் பலருள் ஓரியும் ஒருவன். அவன் ஈகையில் சிறந்து விளங்கியது போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினான்.


இவன் அம்பு எய்தால் குறி தவறுவதில்லை. அவன் வைத்திருந்த வில்லும் வலிமை வாய்ந்தது. கூர்மையான அம்புகளும் அவனிடத்தில் எப்பொழுதும் இருக்கும். அதனாலேயே அவனுக்கு "வல்வில் ஓரி' என்ற பெயரும் ஏற்பட்டது. அவனிடம் விரைந்து செல்லக் கூடிய திறமையும், அழகுமுடைய குதிரையொன்றும் இருந்து. அந்தக் குதிரையின் பெயரைச் சொன்னாலே பகைவர்கள் அஞ்சும் அளவுக்கு இருந்தது. இவ்வாறு பல வகையிலும் புகழ் பெற்று விளங்கினான் ஓரி. கொல்லிமலை இயற்கை அழகு வாய்ந்தது. அழகிய பூக்களும், காய்களும், கனிகளும் நிரம்பி வழியும். எங்குப் பார்த்தாலும் தேன் கூடுகள் குடம் போல தொங்கிக் கொண்டிருக்கும். அருவிகளின் சலசலத்த ஓசை கேட்கும். மலையிலே வந்து படியும் மேகத்தைக் கண்டு மயில்கள் தோகை விரித்தாடும். இத்தகைய அழகு கொழிக்கும் மலை நாட்டை வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.


குடி மக்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்தான். அவர்களுக்கு பல வகையிலும் ஏற்படக் கூடிய கேடுகளை எல்லாம் நீக்கி, ஒரு குறையுமில்லாமல் காத்து வந்தான். அவனுடைய ஈகை குணத்தைக் கேட்டு புலவர்களும், பாணர்களும், கூத்தர்களும் எப்பொழுதும் வந்து கொண்டிருந்தனர். ஓரியும், வருபவர்களுக்கெல்லாம் யானையும், குதிரையும், மற்ற செல்வங்களையும் கொடுத்து சிறப்பித்தான்.


ஒரு நாள் வேட்டையாடுவதற்காக வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றான். ஓரிடத்தில் திறமையும் இருந்தது, வலிமை வாய்ந்த வில்லும், கூர்மையான அம்பும் இருந்தது. காட்டிற்கு வந்த ஓரியின் கழுகுக் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தன. ஒரே அம்பினால், பல உயிர்களையும் வீழ்த்த வேண்டுமென்ற ஒரு புதிய ஆவல், அவன் மனதில் எழுந்தது. அதனால், தக்க சமயத்தை எதிர்நோக்கி சுற்றி சுற்றி வந்தான். அவன் எதிர்பார்த்த சமயமும் அவனுக்குக் கிடைத்தது.


ஓரி, சிறிது தொலைவிலே மலைபோல நடந்து வரும் மதயானை ஒன்றைக் கண்டான். அதனைக் கண்டதும் அம்பு தொடுத்தான் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதற்கும் அப்பால் கொடிய புலியொன்று உலவிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். அதையும் அவன் மனதில் நினைக்கவில்லை, புலிக்கும் அப்பால், மரங்களுக்கு இடையில் மறைந்து மறைந்து துள்ளியோடும் புள்ளிமானைக் கண்டான்.


புள்ளிமானுக்கும் அப்பால் கறுப்பு நிறத்தில் பன்றி ஒன்று எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தது. பன்றிக்கு சிறிது தொலைவிலே உடும்பு ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இவையெல்லாம் ஓரியின் பார்வையிலே பட்டு விட்டன. கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் ஓரியின் வில்லிலிருந்து கூரிய அம்பு ஒன்று புறப்பட்டது. அது எதிரே கண்ட அனைத்து மிருகங்களின் உடல்களிலும் சென்று பாய்ந்து கடைசியில் உடும்பின் உடலில் பாய்ந்து நின்றது. ஓரியின் வில்லாண்மைக்கு இது ஒரு சான்றாகும்.


ஒரே அம்பைக் கொண்டு ஒரே முறையில் ஐந்து உயிர்களைக் கொன்ற ஓரியின் வில்லாண்மையை அவ்வழியே வந்த வன்பரணர் என்னும் புலவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், அவர் ஏற்கனவே ஓரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாரே தவிர, அவனை நேரில் பார்த்ததில்லை. தம் எதிரில் நிற்பவன் வேடனாக இருக்குமோ என்ற ஐயம் ஒரு பக்கம் இருந்தது. இன்னொரு பக்கம் அவன் ஓரியாகவும் இருக்கலாம் என்று சந்தேகமும் ஏற்பட்டது. அவனே தன்னை அடையாளம் சொல்வதாக இல்லை. எனவே, ஒரு தந்திரம் செய்தார்.


தம்முடன் வந்த பாணர்களையும், கூத்தர்களையும் பார்த்து சொல்வது போல பேசினார். ஒரே சமயத்தில் ஒரே அம்பினால் ஐந்து உயிர்களையும் கொன்றவன் வேடனாக இருக்கலாமோ? அவைகளை விலைக்கு விற்பதற்காக வேட்டையாடி இருக்கிறானோ அல்லது அருவி பாயும் கொல்லிமலை தலைவனாகிய ஓரியாக இருக்கலாமோ? யார் என்றே சரியாக அறிய முடியவில்லையே? ஆனால், இவன் தோற்றத்தைக் கொண்டு பார்த்தால் ஓரியாகத் தான் இருக்க வேண்டும். எதற்கும் உங்கள் வாத்தியங்களை மீட்ப்பாருங்கள், ஓரியின் புகழைப் பாடுவோம்.

வன்பரணர் அவ்வாறு பேசிய உடனே ஓரி வழிக்கு வந்து விட்டான். அதற்கு மேல் அவன் செய்கை அவரைப் பேச விடவில்லை. தன்னுடைய பெயரைக் கூறியதும் நாணி நின்றான். உடனே தான் கொன்ற மானின் இறைச்சியைப் பதப்படுத்தினான். புலவர்க்கும் மற்றவர்க்கும் கொடுத்து அவர்களை தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றான். வேண்டாமென்று சொல்லும் வரையிலும் பொன்னும் மணியும் வாரி வழங்கினான். ஓரியினது ஈகையைக் கண்டு அவர்கள் திகைத்துப் போயினர்.


இவ்வாறு தன்னை பாடி வந்தவர்க்கும், நாடி வந்தவர்க்கும் பொன்னும் பொருளும் கொடுத்ததோடு, யானைகளையும் பரிசாகக் கொடுத்தான். வாரி வழங்க வழங்க அவனது செல்வம் வளர்ந்ததே தவிர சிறிதும் குறையவில்லை. "நப்பாலத்தனார்' என்னும் புலவர் அவனிடத்தில் அளவற்ற செல்வம் குவிந்திருந்தது என்று சொல்லியுள்ளார்.


"கழைதின் யானையார்' என்னும் புலவர் அவனது ஈகைப் பெருமையை மனமாரப் பாராட்டியுள்ளார். உலகத்து உயிர்களை எல்லாம் வளர்ப்பது நீராகும். நீர் இல்லாவிட்டால் உயிர்கள் வாழ இயலாது. அப்படிப்பட்ட உண்ணும் நீரைப் போல ஓரி வழங்கினான் என்று பாராட்டினார். ஈகையிலும், செல்வத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய ஓரியின் புகழ், புலவர்களாலும் பாணர்களாலும் கொல்லிமலைக்கு அப்பாலும் பரவியது. கொல்லிமலையின் செழிப்பும், ஓரியின் புகழும் பேரரசன் ஒருவனைப் பொறாமை அடையச் செய்தது.

"பெருஞ்சேரல் இரும்பொறை' என்னும் சேர மன்னன், கொல்லி மலைமேல் கண் வைத்திருந்தான். அவனது பொறாமை, ஓரியின் நேர்மையான ஆட்சியை மறைத்தது. அவனை விட பெரிய அரசன் என்பதையும் மறந்தான். எந்த வழியிலாவது கொல்லிமலையை தனக்கு சொந்தம் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவன் கண் முன் நின்றது.

ஓரியோ சிற்றரசன், பேரரசனாகிய தான் நேருக்கு நேர் நின்று போரிடுவது நன்றாக இராது என்று சேரன் எண்ணினான். ஓரிக்கு பகைவர் யார் இருக்கிறார் என்று எண்ணியபோது, திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி நினைவுக்கு வந்தான். அவன் தன் ஊருக்கு அழைத்து விருந்து உபசரித்து தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாக உணர்த்தினான்.


மலையமான் திருமுடிக்காரியும் ஓரியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேரன் மறைமுகமாக உதவிய படைகளின் துணை கொண்டு, ஓரி மீது போர் தொடுத்தான். ஓரியும் அவனைச் சார்ந்த வீரர்களும் தங்கள் வீரத்தைக் காட்டி அறியாமல் ஓரி இறுதி வரையிலும் போரிட்டான். அவர்களது பெரும் போரினிடையே, அம்பு ஒன்று ஓரியின் மார்பில் பாய்ந்தது. வந்தவரை வரவேற்றுப் போற்றிய வள்ளல் ஓரி மடிந்தான். கொல்லிமலையும் சேரனது கைக்கு மாறியது. ஓரியின் பிரிவு இரவலரை எல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியது என்பதனை சொல்லவும் வேண்டுமோ?

============================================================
ஓரி, மலையமான் மற்றும் சேரனும் வன்னியர்கள் தான்

நம் மக்களே நம் மக்களை வீழ்த்திய கதை பல உண்டு...இன்றும் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது...