திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது. இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது. இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.
இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்". இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது. இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது.
பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது.
முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர்.
கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது.
இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-
"பள்ளி வேளான்"
"பராந்தக வேளான்"
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"
"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"
(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)
இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன். இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.