"நல்லமாப்பாண வன்னியர்" அவர்கள் "கந்த உடையான் " என்னும் வெள்ளாளனுக்கு "முதலி " என்னும் பட்டம் வழங்கிய நியமனப் பத்திரம்
பனங்காமத்து வன்னிபம்
=======================
1. 1781 ஆண்டு சித்திரை மாதம் 8 திகதி பனைங்காமப்பற்று அயுதாந்தி வன்னியந்
2. தொஞ்சுவாங் குலசேகர நல்லமாப்பாண வன்னியனார் அவர்கள் கற்பித்தபடியாவது:
3. பனைங்காமப் பற்றுக்குச் சேர்ந்த கிளக்கு மூலைக்குச் சேர்ந்த விளாங்குளம்
4. சாதி வெள்ளாழன் ஆள்வயினார் கந்த உடையான் வந்து கிழக்குமூலைக்குத் தொளிலும்
5. முதலியாரென்கிற பட்டப்பேருங் கிடைக்க வேணுமென்று மிருந்த எளிதாவுடனே மன்றாடிக் கேட்
6. டபடியால் நாமுஞ் சம்மதித்துச் சொல்லப்பட்ட கந்த உடையானுக்கு திசைவிளங்கு நாயக
7. முதலியென்கிற பட்டமுங் கட்டிக் கிளக்குமூலைப் பிறிவுக்குத் தொளிருங் கற்பித்திருக்கிற
8. படியால் கிளக்கு மூலைக்குச் சேர்ந்த உடையார், அயுதாந்தி, மொத்தக்கர்,
9. பணிக்கமார், போதிய கமக்காறர், மற்றுங் குடியானவர்கள், வரத்தர், போக்கர்,
10. கச்சவடகாறர், இனிமேல் வரப்பட்ட குடியானவர்கள், தலையர், பட்டங்கட்டிமார் சகலரும்
11. இவனைத் தங்கள் முதலியாரென்கிறதறிந்து அடுத்த சங்கை பண்ணி முதலியாரென்ற
12. பேர் சொல்லி அழைக்கவும், இன்னமுமந்த ஊருக்குள்ளே வரப்பட்ட நீதி ஞாயங் கேட்டு
13. பிழை கண்ட இடந்து அஞ்சு பொன்னுக்குள்ளே குற்றம் போட்டு வாங்கவும் (.) குற்றங் கொடுக்க
14. இடமில்லாத தாள்ந்த சாதியின் மனுஷருக்கு மரத்திலே கட்டி இரு பத்தஞ் (சடி)
15. அரைக்குப் பணிய அடிப்பிக்கவும்(.) இவன் சொல்லப்பட்ட யானைத்தீவு முதலாக மற்றுஞ் சகல பண்டார பணிவிடை சகலமும்
16. இவன்சொற் கீளமைச்சலுடனே கேட்டு நடந்து கொள்ளவும் (.) இன்னமுயிந்தத் திசைவிளங்கு நாயக முதலியுடைய நயத்தக்கு வேண்டி இவனுக்கு
17. வெள்ளாண்மை செய்விக்கப்பட்ட இடத்திலே கமம் ஒன்றுக்கும் ஆள் அஞ்சு பேருக்கும் குரக்கன் புலோ ஒன்றுக்கும் அடையிறை சவுந்திர
18. உள்ளியமுங் (ஊழியம்) களித்துக் கொடுத்து உத்தாரமாகவும் கற்பித்து இவனுக்கு வரப்பட்ட சுபசோபனங்களுக்கு வீட்டுக்கு வெள்ளை மேற் கட்டி கூரை முடி
19. சேறாடி இருபத்து நாலு பந்தற் காலுக்கும் பந்தலுக்கும் வெள்ளை மேற்கட்டி இருக்கிற இடத்துக்கும் கலத்துக்கும் வெள்ளைப் பலகைக்கு வெள்ளை க
20. திரை, வில்லுக்குஞ்சம், ஒட்டு விளக்கு, பகற்பந்த மேலாப்பு, பாவாடை, கொடி, வெடி, நாகசுரம், தாரை, மேளம் இப்படிக் குறித்த வரிசைகள் செய்வித்துக்
21. கொள்ளவும் (.) கோயிற் சபை, கொண்ட சபை, கலியாணச் சபைகளிலே போன இடங்களுக்கும் இருக்கிற இடத்துக்கும் சாப்பிடுகிற இடத்துக்கும் வெள்ளை (.) ஆடி
22. கார்த்திகை, வருஷப்பிறப்பு, தைப்பொங்கலுக்கு வண்ணான் வந்து வெள்ளை கட்டவும் (.) பறையன் வந்து மேளஞ் சேவிக்கவும் (.) கொல்லன், தச்சன், அம்பட்டன்,
23. வண்ணான், பறையன் என்று சொல்லப்பட்ட அஞ்சு குடிமையும் அழைத்த நேரம் அவரவர் தொழிலுடனே போய் அடுத்த
24. வரிசைகள் செய்து உள்ள சுவந்திரம் பெற்றுக்கொள்ளவும் (.) கற்பித்த கட்டளைப்படிக்கு எழுதினது பரநிருபசிங்க முதலி