Saturday, January 7, 2012

வன்னியகுலசத்ரியர் உயர்நிலைப்பள்ளி


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ளது ஏரிகொடி என்னும் சிறிய கிராமம் , தாரமங்கலம் வட்டாரபகுதிகளில் தற்போது பிரபலம் ஆகிவரும் பள்ளிகூடம் இங்கு தான் உள்ளது. 

அந்த பள்ளியின் பெயர்
வன்னியகுலசத்ரியர் உயர்நிலைப்பள்ளி
 Vanniyar School
இந்த பள்ளியை பற்றி தெரிந்து கொள்ள நாம் சேலம் மாநகர் நோக்கி பயணித்தோம். சேலம் ரயில்நிலையத்தில் இறங்கி அப்பள்ளியின் நிர்வாகி திரு பாபு அவர்களை அலைபேசியின் வழியாக தொடர்கொண்டு பள்ளிக்கு வரும் வழியை அறிந்து தாரமங்கலம் செல்லும் பேருந்தில் பயணித்து தாரமங்கலத்தை அடைந்தோம். தாரமங்கலத்தில் இறங்கி ஒரு ஆட்டோ டிரைவரிடம் வன்னியகுலசத்ரியர் பள்ளி எங்கு உள்ளது என்று விசாரித்த போது வன்னியர் ஸ்கூல் தானே வாங்க இறக்கி விடுகிறேன் என்று நம்மை ஏற்றி கொண்டார் . தாரமங்கலத்தில் இருந்து அந்தப்பள்ளி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

பள்ளியை நெருங்கியதும் நமக்குள் ஒரு உற்சாகம் தலைக்கேறியது ஏன்னென்றால் வன்னியர் பெயரில் நான் பார்த்த முதல் பள்ளி இது. பள்ளிக்கூடத்தை நாம் அடைந்ததும் பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான திரு பாபு அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு மாதயையனும் நம்மை அன்புடன் வரவேற்றனர். 

சிறிது நேரம் நாம் அவர்களுடன் நமது இணையதளத்தை பற்றியும் அதன் வாருங்கள திட்டங்களை பற்றியும் பேசிக்கொண்டு பள்ளியை பற்றி கேட்டோம். அவர்கள் நம்மை அருகில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றனர் அங்கு தாரமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கண்ணையன் அவர்கள் அமர்ந்திருந்தார். அவர் தான் அந்த பள்ளியின் தாளாளர் 

அவர் கூறும் போது " இந்த பகுதியில் பெரும்பாலும் அனைத்து சாதிகள் பெயரிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளது ஆனால் இங்கு பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் பெயரில் எந்த கல்வி நிறுவனங்களும் இல்லை , இது எனது நீண்டநாள் கனவாக இருந்துவந்தது. அதன்படி எனது நண்பர்கள் சிலருடன் இணைந்து வன்னியகுல சத்ரியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் இந்த பள்ளியை தொடங்கி உள்ளோம். 
அறக்கட்டளையின் தலைவராக திருமதி ஜானகி அவர்களும் திரு கோபால் அவர்கள் செயலாளராகவும், திரு பச்சியன்ணன் அவர்களை பொருளாளராகவும் கொண்டு வன்னியர்குல சத்ரியர் அறகட்டளை சிறந்த முறையில் இந்த பள்ளியை நடத்தி வருகிறது 

இந்த பள்ளி கடந்த 2010 - 2011 ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது , ஆரம்பத்தில் 6 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் இந்த கல்வியாண்டில் 10 ம் வகுப்புவரை நடத்த உள்ளோம் , இந்த பள்ளியில் அனைத்து சாதியினரும் படிக்கின்றனர் வன்னியர் மாணவர்களுக்கு கல்விகட்டனத்தில் பல சலுகைகளை கொடுக்கிறோம், இந்த பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளை விட சிறந்த கல்வியை இங்கு கொடுப்பதே எங்கள் லட்சியம்" என்று  பள்ளியை பற்றி நமக்கு விவரித்தார். 

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு கோட்டை போன்ற கட்டுமானம் கொண்ட நமது வன்னியகுலச்சத்ரியர் பள்ளியை சுற்றி பார்த்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்றோம் 

 - குமரேசன் 

Wednesday, January 4, 2012

சிதைந்து வரும் இசைச் சிற்பம்



கேட்பாரற்று கிடக்கும் இசை குதிரை சிற்பத்தின் அருகே கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.
பண்ருட்டி:
 
                    விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த இசைச் சிற்பங்கள் கவனிப்பாரற்று சிதைந்து வருகின்றன.
 
                    நம் நாட்டின் பண்பாடு, நாகரிகம் கலாசாரங்களை எடுத்துக்காட்டுவதில் ஓவியங்களும் சிற்பங்களும் ஒர் அங்கமாக விளங்குகின்றன. அத்தகைய சிற்பங்களும் ஓவியங்களும் மாற்றார் படையெடுப்பால் தமிழ்நாடு முழுவதும் சிதைக்கப்பட்டன. எஞ்சியுள்ள கலைச் சின்னங்கள் கவனிப்பாரற்று சிதைந்து கொண்டிருப்பதை இன்றும் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது.பாவங்களும், கருமங்களும் தொலைய வேண்டுமானால் காசிக்கும், கங்கைக்கும் சென்று தீர்த்தமாடி விட்டு வரவேண்டும் என்கிற நம்பிக்கை நமக்கு இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் சொந்த ஊரில் இருக்கும் ஆறும், குளங்களும் புண்ணிய கங்கைகள்தான் என்பதை நம்மில் சிலர் சிந்திக்கத் தவறுகின்றனர். அதனால் தான் உள்ளூர்க் குளம், தீர்த்தகுளம் ஆகாது என்கிற எதிர் மறையான பழமொழியைப் பெரியோர்கள் கூறி வைத்துள்ளனர். இது போன்று சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலும், இசை தரும் குதிரை சிற்பமும் கவனிப்பாரற்று சிதைந்து கிடக்கின்றன.
 
இது குறித்து கல்வெட்டாய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது: 
 
                      இந்த இசை தரும் குதிரைச் சிற்பம் உள்ள இடம் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் தலை நகரமாக விளங்கி இன்று சிறிய கிராமமாக காட்சி தரும் சேந்தமங்கலம் என்ற ஊராகும். விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதிக்கு தேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் பல போர்களை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. பல்லவர் குலத் தோன்றல்களாகிய மணவாளக் காடவராயரும்(வன்னியர்), அவர் மகனாகிய கோப்பெருஞ்சிங்கக் காடவராயரும்(வன்னியர் ) தங்கள் வீர வாள்களால் நிகழ்த்திய போர்களில் பெற்ற வெற்றியின் சின்னமாக அப்பகுதியில் இருந்த பெரிய காட்டை அழித்து வாணிலை கண்டீச்சுரம் (வாள்நிலை கண்ட ஈச்சரம்) என்கிற சிவன் கோயிலைக் கட்டினர். ஏழு வாயில்கள் மற்றும் அகழிகள் சூழ்ந்த கோட்டைக் கொத்தளங்களை அமைத்து, அருகே மக்களைக் குடியமர்த்தி சேர்ந்தமங்கலம் என்ற பெயரைச் சூட்டினர்.இவர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர் போன்ற மன்னர்களின் ஆளுகைக்கு உள்பட்டுப் பின்னர் கவனிப்பாரற்று சிதைந்து வந்துள்ளது. தற்போது இக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு திருப்பணி தொடங்கி நடந்தேறி வருகிறது.இக்கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நாற்புறங்களிலும் அழகிய படிக்கட்டுகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில்மிக்க கருங்கல் மண்டபத்தை கட்டியுள்ளனர். இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன. சீறிப் பாய்வதுபோல் நின்று கொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல விதமான ஒலியெழுப்பி நம்மை வியப்படையச் செய்கிறது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து கிடக்கிறது. எஞ்சி நிற்கும் ஒரு குதிரையாவது விழுவதற்குள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் ஆவல் என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.

Tuesday, January 3, 2012

வன்னிய குல வேந்தன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி ஆண்ட 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் கூறும் "நடுநாட்டை" பற்றிய ஒரு ஆய்வு :

வரலாறு : 

தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. வன்னியர் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி இது .


இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது. 

எ-கா : திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு. சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது. 

பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலூரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது. ஆற்றுரை தலைநகராகக் கொண்டு, இப்பகுதியை ஆண்ட ஏகம்பவாணன் பற்றி பெருந்தொகை பாடல்களால் அறிகிறோம். சோழராட்சிக்குப் பின் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், கர்நாடக ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் என அவரவர் கால ஆட்சியில் அவர்களிடம் சென்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாலாற்றுக்கு வடக்கில் இருப்பவை வடாற்காடு எனவும், தெற்கில் இருப்பவை தென்னாற்காடு எனவும் பிரிக்கப்பட்டன. பின்னர் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டம்பர் 30 இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

எல்லைகள் : 

விழுப்புரம் மாவட்டத்தின் தெற்கே திருச்சிராபள்ளி, கடலூர் மாவட்டங்களும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும், மேற்கே திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மவட்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 



ஆற்றுவளம் :

கெடில நதி : 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மையனுர் என்னும் ஊருக்கருகில் தோன்றி 112 கி.மீ ஓடி கடலூருக்கருகில் கலக்கிறது. திருக்கோவிலூர் வட்டத்தில் தாழனோடை என்னும் துணையாறு கெடிலத்தோடு கலக்கிறது. திருக்கோவலூருக்கு அருகில் உள்ள வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் பெண்ணையாற்றிலிருந்து பிரியும் சிற்றாறு மலட்டாறு எனப்படுகிறது. 

செஞ்சி ஆறு : 

சங்கராபரணி ஆற்றின் கிளை நதியாகச் செஞ்சி வட்டத்தில் ஓடும் ஆற்றுக்கு அதுபாயும் பகுதியின் பெயரால் செஞ்சி ஆறு என அழைக்கப்படுகிறது. பெரிதும் மழைக் காலத்தில்தான் நீர் நிறைந்து காணப்படும். 

சங்கராபரணி ஆறு : 

செஞ்சி வட்டத்தில் சில மைல்கள் அளவே ஓடி விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இதுவும் சிறிய ஆறுகளில் ஒன்று. மழைக் காலத்தைத் தவிர பிற மாதங்களில் நீர் இருக்காது. இவை தவிர பெண்ணையாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு போன்றவையாலும் பலன் பெறுகிறது. வீடூர் அணைத்தேக்கம் தவிர 4 நீர்த் தேக்கங்களால் விவசாயம் செழிக்கிறது. 

வேளாண்மை : 

மொத்த சாகுபடி பரப்பு: 3,21,978 ஹெக்டேர். இதில் நெல் மட்டும் 1,29,00 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு அடுத்து கரும்பு, மணிலா உற்பத்தி மாவட்டம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கடுத்த படியாக பருத்தி, பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் நவதானியங்களும் விளைவிக்கப்படுகின்றன. 

கல்ராயன் மலை : 

கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான வளமும், காட்டு வளமும் உடையது. கல்வி ராயன் மலை என்பதே நாளடைவில் கல்ராயன்மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையில் தேக்கு, சந்தனம், கடுக்காய், மூங்கில், முந்திரி முதலியவை கிடைக்கின்றன.

முள்ளூர் மலைக்காடு : 

திருக்கோவலூர் வட்டத்திலும் சிறு, சிறு மலைக் குன்றுகளும், காட்டுப் பகுதிகளும் உள்ளன. 

செஞ்சிமலை :

கல்ராயன் மலைத் தொடர்ச்சியே செஞ்சி மலையாகும். செஞ்சி வட்டத்திற்கு எல்லையாக அமைந்திருப்பதால் அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. 


கனிவளம் : 

பயர் க்ளே என்கிற கனிமம் திண்டிவனத்தில் கிடைக்கிறது. ஸ்டீடைட் என்கிற தாது கள்ளக் குறிச்சி வட்டத்தில் 25,000டன் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது. சிலிகாமண்-அகரத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளிலும், அதை அடுத்த மரக்காணம் பகுதியிலும் இரண்டு இலட்சம் டன்கள் இருப்பதாக கூறுகின்றனர். பிளாக் கிரானைட் (கருப்பு கருங்கல்) வானுர், திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதிகளில் ஏற்றுமதிக்கு உகந்த-தரமான கற்கள் 25,00,000 க்யூ.எம் கிடைக்கிறது. மல்டி கலர்டு கிரானைட் (பலவண்ண கருங்கல்) செஞ்சி, விழுப்புரம், கள்ளக் குறிச்சியில், கிடைக்கிறது. புளுமெட்டலும் இதே பகுதிகளில் 
கிடைக்கின்றது.


வழிபாட்டுத் தலங்கள் :

திருக்கோவலூர் : 
Thirukovalurஇவ்வூர் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஊர் மேலூர், கீழூர் என 2 பிரிவாக உள்ளது. சிவன் கோவில் கீழூரிலும், திருவிக்கிரமப் பெருமாள் கோவில் மேலூரிலும் உள்ளன. இறைவன் பெயர் வீரட்டேசுரர்; அம்மை: சிவானந்தவல்லி. வள்ளல்பாரி மறைந்த பின்னர், பாரிமகளிரை திருக்கோவலூர் மன்னனுக்கு மணம் முடித்து விட்டு கபிலர், பாரியின் பிரிவுத்துயரை ஆற்றாமல் வருந்தி, பெண்ணையாற்றின் நடுவில் உள்ள மணற்பரப்பில் வடக்கிலிருந்து உயிர் துறந்தார். கபிலர் உயிர் விட்ட கல் ஆற்றில் இன்றும் காணப்படுகிறது. ஆண்டு தோறும் மே 1 முதல் 5 வரை கபிலருக்கு விழா இங்கு நடைபெறுகிறது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. 

திருவறையணி நல்லூர் : 

அறை கண்ட நல்லூர் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. திருக்கோவிலூரில் உள்ள பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. கோயில் குன்றின் மேல் கட்டப் பட்டுள்ளது. இக்குன்றின் மீது நின்று பார்த்தால் திருவண்ணாமலையின் திருமுடி தெரியும். இறைவன் மேற்கு பார்த்து உள்ளார். பெருங்குளம் ஒன்று பாறையில் உள்ளது. இதற்குப் பக்கத்தில் ஐவர் குகைகளும் சிறு அறையும் உள்ளன. 

திருவிடையாறு : 

திருவெண்ணைநல்லூர் சாலை என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 5 கி.மீ உள்ளது. இறைவன்: இடையாற்றுநாதர்; இறைவி: சிற்றிடை நாயகி.

திருநெல்வெண்ணெய் : 
இது தற்போது நெய்வெணை என அழைக்கப்படுகிறது. இவ்வூர் உளுந்தூர்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 7 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: வெண்ணெய்யப்பர். இறைவி: நீலமர்க்கண்ணம்மை.

திருவடுகூர் : 

விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் புகைவண்டி வழித்தடத்தில் சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் ஆண்டார் கோவில் என்னும் திருவடுகூர் அமையப் பெற்றுள்ளது. 

திருவெண்ணெய் நல்லூர் : 

இறைவன் தடுத்தாட் கொண்டநாதர், அம்மை: வேற்கண்மங்கை; விழுப்புரத்திற்கு மேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. திருவருட்டுறை என்பது கோயிலின் பெயர். 'சிவஞானபோதம்' இயற்றிய மெய்கண்டதேவ நாயனார் இருந்த ஊர். 

திருமுண்டீச்சரம் : 
திருக்கண்டீச்சரம் என்னும் இப்பகுதி திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவாமாத்தூர் : 

இறைவன்: அழகியநாதர்; அம்மை: அழகிய நாயகி. விழுப்புரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ. தொலைவில் பம்பை என்னும் சிற்றாற்றின் வடகரையில் உள்ளது. புலவர் புராணம் பாடிய திருபுகழ்த் தண்டபாணியடிகள் (சமாதி) கற்குகை இங்குள்ளது. 

திருப்புறவார் பனங்காட்டூர் : 

இறைவன் : பனங்காட்டீச்சுரர். இறைவி: புறவம்மை. பனையபுரம் என வழங்கும் இவ்வூர் விழுப்புரத்தை அடுத்துள்ள முண்டியம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சித்திரைத் திங்கள் முதல்நாள் முதல் ஏழாம் நாள் வரை, நாள்தோறும் காலையில் கதிரவன் கதிர்கள் முதலில் இறைவன் மேலும், பின்னர் இறைவி மேலும் விழுகின்றன. 

திருவக்கரை : 

விழுப்புரம் நிலையத்திலிருந்து வடக்கே புறவார் பனங்காட்டூர், கூனிச்சம்பட்டு, கொடுக்கூர் ஆறுவழியாகவுமThiruvakkkarai் செல்லலாம். புதுச்சேரி வழியில் மானுரிலிருந்து மேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இறைவன் திங்களுக்காக ஒரு முகமும், பிரமனுக்காக ஒரு முகமும், திருமாலுக்காக ஒரு முகமும் கொண்டு மூன்று முகங்களுடன் விளங்குகிறார். கோயிலுக்கு முன்புறத்தில் இலிங்கம் உள்ளது. காளி உருவம் தென்பால் உள்ளது. இங்குள்ள காளியை வக்ரகாளி என அழைக்கின்றனர். காளியின் காதில் குழந்தையின் உருவம் குண்டலமாகத் தொங்குகிறது. இடக்கையில் வில் இருக்கிறது. திருமால் கோயில் மேற்கு பார்த்த நிலையில் திருச்சுற்றில் உள்ளது. இங்குள்ள நந்தி பெரியது. சிவபெருமான் இடக்காலையூன்றி, வலக்காலைத் தூக்கி நிற்கிறார். இது புதுமையாக உள்ளது. திண்டிவனத்தைத் தண்டக வனம் என்றும், திருவக்கரையை குண்டலி வனம் எனவும் கூறுகிறார்கள். 

கல்மரம் : 

'மரம் கல்லாலானதை' இங்கு பார்க்கலாம். இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

மயிலம் : 

திண்டிவனத்திலிருந்து கிழக்கே புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. பரந்த மேட்டின் மேல் அமைந்துள்ள இவ்வாலயம், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ளது. பங்குனி உத்திரம் காவடி ஊர்வலம் பார்க்க வேண்டியது. இங்கு பல சாமியார்களின் சமாதிகள் உள்ளன. 

சுற்றுலாத் தலங்கள் :

செஞ்சிக் கோட்டை : 

Gingeeசெஞ்சி நகருக்கு மேற்கே ஒருமைல் தொலைவில் கோட்டைகள் உள்ளன. முக்கோண அமைப்பில் மூன்று குன்றுகள் உள்ளன. ஒவ்வொரு குன்றிலும் சுற்றிப் பீரங்கிகள் வைத்துப் போரிட 60 அடிகொத்தளங்கள் அமைந்துள்ளன. வடக்கே உள்ளது கிருஷ்ணகிரி; தெற்கே உள்ளது சந்தரையன் துர்க்கம்; மேற்கேயுள்ளது மிகவும் உயர்ந்த இராஜகிரி. ஆனந்தக் கோன் என்பவரால் கட்டப்பட்டது. தேசிங்கு ராஜன் இங்குGingee ஆண்டதை 'தேசிங்கு ராஜன் கதை' கூறுகிறது. சஞ்சீவி மலையே - செஞ்சி-ஆனதாக கூறுகின்றனர். இக்கோட்டையில் அரச குடும்பத்தினர் நீராடுவதற்கு குளம் ஒன்றும், அந்தப்புறமும், விசாரனை மன்றமும், திருடர்களை விசாரிப்பதற்கென்று தனி இடங்களும் உள்ளன. கலை அமைப்போடு, அக்கால தொழில் நுட்ப முறையில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை இன்றும் காண்போர் மனதைக் கவர்கிறது. தானிய சேமிப்பு கிடங்குகள் பல பூமிக்குக் கீழும், மேலும் கட்டப்பட்டுள்ளன.

கல்ராயன்மலை : 

திருக்கோவலூரிலிருந்து பேருந்து வசதி உண்டு. கல்ராயன் மலையில் 'மலையாளிகள்' என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்ராயன் மலைக்காடு வளமான காடுகளைக் கொண்டது. இங்கு மூங்கில், தேக்கு, கடுக்காய் மரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. மலையின் மீது சில இடங்களில் பழத்தோட்டங்கள் உண்டு. இயற்கை அழகை காண்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. சுனைகள், பள்ளத் தாக்குகள், சிற்றருவிகள் உண்டு. இங்குச் சிறு விலங்குகளான மான், கீரி, பாம்பு, நரி, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு, கெளதாரி முதலியவற்றைப் பார்க்கலாம்.

முக்கிய ஊர்கள் :

விழுப்புரம் :

Villupuramமாவட்டத்தலைநகர். மொத்த வியாபாரிகள் நிறைந்த ஊர். இவ்வூர் கல்வி, மருத்துவம், மாவட்ட அலுவலங்கள் நிறைந்தது. பல வருடங்களாக, வனஸ்பதி தொழிற்சாலை ஒன்று-இங்கு நடைபெற்று வருகிறது. ஆண்டொன்றுக்கு 7,500 மெ.டன் வனஸ்பதி தயாராகிறது. பல சிறு,சிறு எண்ணெய் ஆலைகளும் இங்கு உள்ளன. சென்னைக்கும் திருச்சிக்கும் அடுத்தபடியாகத் தென்னக இரயில்வேயினால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவது விழுப்புரம் இரயில் சந்திப்பு நிலையமாகும். இங்கிருந்து திருச்சிக்கு மெயின்லைன், காட்லைன் இரண்டும், சென்னைக்கு ஒன்றும், காட்பாடிக்கு ஒன்றும், புதுவைக்கு ஒன்றுமாக ஐந்து புகை வண்டிப் பாதைகள் செல்கின்றன. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இந்தச் சந்திப்பு 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இதுபோலவே பேருந்து நிலையமும் செயல்படுகிறது.

திண்டிவனம் : 

விழுப்புரத்திற்கு அடுத்த பெரும் நகரம் இது. சிறந்த வணிகத்தலம். நெல் கொள்முதல் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. அரிசி ஆலைகள் பல இயங்கி வருகின்றன. புளியமரங்கள் நிறைந்த காரணத்தால் திண்டிவனம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இதன் பெயர் கிடங்கில். இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் இப்பகுதியை ஆண்டான் என்று "சிறுபாணாற்றுப்படை" கூறுகிறது. இவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர் பாடினார். இவரும் இப்பகுதியைச் சேர்ந்த 'மரக் காணத்தை' சொந்தவூராகக் கொண்டவர் என்கின்றனர். நிலவளம் மிக்க இவ்வூர் பெரும்பாலும் வானம் பார்த்த பூமி. மணிலா, நெல் முக்கிய பயிர்களாகும்.

மரக்காணம் : 

கடற்கரையோமாக உள்ள ஊர். இங்கு பழைய காலத்தில் துறைமுகம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. தற்போது பெருமளவில் உப்பு விளைவிக்கப்படுகிறது.

கள்ளக் குறிச்சி : 

கல்ராயன் மலையை அரணாகக் கொண்ட காடுகள் நிறைந்த வட்டம் கள்ளர்கள் நிறைந்த காட்டுப் பிரதேசமாக விளங்கியதால் 'கள்ளர் குறிச்சி' பின்னர் கள்ளக்குறிச்சியாக மருவியிருக்கலாம் என்கின்றனர். மற்ற வட்டத்தை விட இங்கு மக்கள் தொகை குறைவு. 18-ஆம் நூ ற்றாண்டில் முக்கியத்துவம் உள்ள ஊராக இருந்தது. 

தியாகதுருகம் : ThiyagaDurgam

கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மலையில் நவாப்புக்கால் கோட்டையும், பீரங்கிகளும் காணப்படுகின்றது. மலைமீது மலையம்மன் என்ற சமணர்களுடைய கோயில் உள்ளது.மலையின் அடிவாரத்தில் உள்ள குளதின் அருகில் செல்லி அம்மன் கோயில் காணப்படுகிறது. ஆசிரியர் சக்திவேலன் வசிக்கும் ஊரும் இதுதான்.

ரிஷிவந்தியம் : 

கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவிலுள்ளது. இங்குள்ள உமையொரு பாகரின் கோயிலில் தட்டினால் இசை எழுப்பும் தூண்கள் உள்ளன. இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அவ்வுருண்டையை நம் கைவிரலால் எப்பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால் வெளியை எடுக்க முடியாத சிறந்த சிற்ப வேலைப்பாடாகும். இக்கோயில் திருமலை நாயக்கர் சிலை இருக்கிறது. 

மேல் மலைனுர் : 
Melmalaiyanur
இங்கு மீனவர்கள் குலதெய்வமான அங்காளம்மன் ஆலயம் உள்ளது. மாசி மாதத்தில் 'மசானக் கொள்ளை' பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிராமணியின் பங்கேப்பு விச்சித்திரமாக இருக்கும். 

சிங்கவரம் : 

செஞ்சிக்கு 2 மைல்கள் வடக்கில் உள்ளது. தேசிங்குராஜனால் வணங்கப்பட்ட 24அடி நீளம் உள்ள ரங்க நாதர், ஆதிசேசன்மேல் படுத்திருப்பது போல் அமைந்துள்ளது. தலை சற்று திரும்பி இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. 

சித்தாமூர் : 

திண்டிவனத்திற்கு வடக்கில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமிழ்நாட்டு சமணர்கள் நிறைய வாழ்கின்றனர். தமிழகத்திலுள்ள ஒரே ஒரு ஜைன மடம் இங்குள்ளது. மடத்தில் எண்ணற்ற சமண சமயம் தொடர்பாக ஏடுகளும், ஆவணங்களும் உள்ளன. நாயக்கர் கால சமணசமயம் சார்பான ஓவியங்கள் உள்ளன. ஜைனர்களுக்கு முக்கியமான தலமாகும். 

பெருமுக்கல் : 

8-ஆம் நூற்றாண்டிலிருந்து பல போர்களைக் கண்ட பூமி. நில மட்டத்திற்கு மேல் 300 அடி உயரத்தில் மலைகளால் சூழப்பட்ட பீடபூமிப் பிரதேசம். 1760 இல் லாலி துரையால் குடியேற்றம் செய்யப்பட்டு கூட் என்கிற ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இவ்விடம் படைத்தளமாக பயன்படுத்தப்பட்டது. 1781-இல் ஹைதர்அலி பிரஞ்சுக்காரர்களின் உதவியுடன் இதைக் கைப்பற்றினார். 1783 இல் தளபதி ஸ்டூவர்டால் இவ்விடம் அழிக்கப்பட்டது. பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இவ்விடங்களில் கிடைத்துள்ளது தொல்பொருள் ஆய்வாளர் விரும்பி பயணம் செய்யும் இடம். 

உளூந்தூர் பேட்டை : 

விழுப்புரம்-திருச்சி வழித்தடத்தில் உள்ள முக்கிய ஊராகும். இங்கு பலாப்பழமும், கொய்யா, மா, முந்திரி போன்றவை பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. 

எலவானாசூர் : 

பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர மன்னர்களால் பற்றி கல்வெட்டுகள் கொண்ட கோவில் இங்குள்ளது. இவ்வூர் திருக் கோயிலுக்கு கிழக்கில் 4 வது கி.மீ உள்ளது. இங்கு மீர் ஹூசைன்கான் என்ற போர் வீரன் பெரும் துன்பங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தான். அவனை 1757 இல் பிரஞ்சு படை முறியடித்தது. அவன் இருந்த கோட்டை இங்குச் சிதலமடைந்து காணப்படுகிறது. 

திருவெண்ணெய் நல்லூர் : 

திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூர், கம்பராமாயணம் எழுதிய கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊர். இருவருக்கும் உருவச் சிலைகள் இவ்வூர் கோயிலில் உள்ளன.

மோக்ஷ குளம் : 

விழுப்புரம் வட்டத்திலுள்ளது இவ்வூர். இங்கு பட்டு நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. குடந்தை, காஞ்சி, பட்டு வகைகளுக்கு இணையாக செய்யப்படுகிறது. 

கூவாகம் : 

திருக்கோயிலூருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இங்கு அரவானுக்கு ஒரு கோயில் உள்ளது. இதை கூத்தாண்டவர் கோயில் என்பார்கள். இங்கு அரவானுக்கு தாலி கட்டி அறுக்கும் 'அலி' களின் திருவிழா பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 

மேச்சேரி : 

செஞ்சிக்கு வடக்கில் உள்ளது. இவ்வூர் குன்றில் பாறைச் சரிவில் குளத்தை நோக்கிய கோயில் இருக்கிறது. இக்கோயில் சத்திராதித்யன் என்பவனால் குடைவிக்கப்பட்டது என்கின்றனர். இது பாண்டியர் பாணியுள்ள கோயில், பல்லவர் கால கிரந்த எழுத்து இங்குள்ளது. 

புகழ்பெற்ற பெருமக்கள் : 

சென்னை ராஜதானி முதல்வராக இருந்த ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், உழைப்பாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி, தங்கராஜ் முதலியார், அ.கோவிந்தசாமி, சண்முக உடையார், நடேச முதலியார், திண்டிவனம் இராமமூர்த்தி, திருக்குறள் வி.முனுசாமி, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Monday, January 2, 2012

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி



தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (Tamilnadu Toilers' Party, தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி)
 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. 
எஸ். எஸ். ராமசாமி படையாச்சியால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் 
தொடங்கப்பட்டது. 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி 
மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை 
உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் 
இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் 
செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த
 எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் 
தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட 
வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில்  
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் 
தொடங்கினர். இரு கட்சிகளும் 1952சட்டமன்றத் 
தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) 
ஆதரவுடன் போட்டியிட்டன.
 இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. 
மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் 
பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட
 கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. 
அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு
 உழைப்பாளர் கட்சியும் ஒன்று.
ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி
வேட்பாளர்கள் 1952தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு
 தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள்
மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர்.
ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு
காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும்
பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் 
கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு 
சி. ராஜகோபாலாச்சாரி(ராஜாஜி) முதலமைச்சரானார்.
அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் 
கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். 
அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. 
அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார்.
1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது 
அமைச்சரவையில்உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 
1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன்
இணைத்து விட்டார்.
1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து
விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை 
உருவாக்கினார்.தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி 
அமைத்து போட்டியிட்டார்.அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து
 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.
1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார்.
 ஆனால்திமுக தன் குட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள 
மறுத்துவிட்டது.சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை 
மீண்டும் கலைத்து விட்டுஇந்திய தேசிய காங்கிரசில்
 இணைந்துவிட்டார்.
இக்கட்சியும் காமன்வீல் கட்சியும் இன்றைய
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாக கருதப்படுகின்றன.

சேரர் - அக்னி குல க்ஷத்ரியர் (வன்னியர் )

சேரர் அக்நி குலத்தவர். 


அனற் புதல்வன் என்று சேரன் பேரூர் புராணத்தில் குறிப்பிடப்படுகிறான்.


சேர வம்சத்தின் வழி வந்த திருவனந்தபுர மன்னர்கள் "பள்ளிமார்" என்றே அழைக்கப்படுகின்றனர்.


அரசனைக் கேரளத்தில் பள்ளி என்றும் கூறுகின்றனர். உதாரணத்திற்கு அரசனுடைய யானையை "பள்ளியுடைய யானை" என்றும் குதிரையை "பள்ளியினுடைய குதிரை" என்றும் குறிப்பிடுவர்.பள்ளி என்பது சேர அரசனைக் குறிப்பதாக அமைகிறது.அரசன் வருகிறாரென்றால் "பள்ளி வருகிறார்" என்று கூறும் வழக்கமும் அங்கு இருந்தது.


பள்ளி(வன்னியர்) இனத்தார் விருதுப் பெயர்களில் "சேரநாட்டுக்கு அதிபதி" , "வயநாட்டுக்கு அதிபதி" போன்றவை அடக்கம்.



மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள்.

சேரர் குலச் சின்னம் - வில்

மழவர் குலச் சின்னம் - வில்

வன்னியர் குலச்சின்னம் - வில்

மழவர்கள் யார் என்பதைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைப் 
படித்தவர்கள் அதே மழவர் குறித்த சில அறிஞர்களின் கருத்தை மட்டும் அறிய ஏனோ மறந்துவிடுகின்றனர்.


மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர்.வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.

"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொரு செய்தி :
அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர்அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.


மழவர் குடிமக்கள் தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை போன்ற தமிழ்நாட்டின் வடநிலப் பகுதிகளில் வாழ்ந்துவந்தனர்.
இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர் 
வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி “மழவர் பெருமகன்” எனக் குறிப்பிடப்படுகிறான். 
வள்ளல் ஓரி மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகிறான். (மழவர் பெருமகன் மாவள் ஓரி) 

அதியமான் ஒருவர் “வஞ்சியர் குலபதி எழினி” எனக் கல்வெட்டொன்றில் கூறப்படுள்ளார் .இதன் மூலம் வஞ்சியை ஆண்ட சேரர் அதியமான் மரபினரே என்பது தெரிய வருகிறது.சேரரும் , அதியரும் முறையே “மழவர் மெயம்மறை ”
 என்றும் “மழவர் பெருமகன் ” என அழைக்கப்பட்டனர்.

இதமூலம் மழவர் என்பாரும் சேரர் குடியினர் என்பது விளங்கும் .
சேரர் வில் இலச்சினையைப் பெற்றவர் .கொல்லி மழவரும்  வில் இலச்சினையை பெற்றவர் . வன்னியர் (பள்ளி ) இனத்தவரின் குலச் சின்னமும் வில்தான்.. அதனால்தான் சிலை எழுபதில் வன்னியர் எடுத்த வில்லே வில் என்று வில்லின் சிறப்பை பற்றி கம்பர் பாடியுள்ளார் .

வன்னியர் ஏந்திய வில்லே, வில்

மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி
மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக்
கலைமற் றுண்டோ
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி
யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச்
சிலைமற் றுண்டோ ? 3

எனவே சேரர், மழவர்  என்பார் வன்னியர் இனத்தவர் .
சேரரின் கிளைக் குடியினராகக் கருதப் பட்டவர்கள் மழவர்கள். இவர்கள் போர்க் குடியினர். மழவர்களின் போர்த்திறன் கண்டு சோழ மன்னர்களும் மழவர் படையணியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர்.


அதுமட்டுமா , மழவரான சேர மன்னர்களை அக்னி குல க்ஷத்ரியர் என்றுதான் வில்லிபாரதம் சொல்கிறது .. இன்று தமிழகத்தில் அக்னி குலத்தவர் என்று கூறப்படுபவரும் வன்னியர் மட்டுமே ..

இது அரசின் ஆவணங்களில் கூட உள்ளது ..

Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )

இதன்மூலம் சேரர்கள் (அக்னி குல க்ஷத்ரியர் ) அதாவது வன்னியர் என்பது தெளிவாக தெரிகிறது .. இவர்களை பற்றி சில வரலாறுகாளை 
காண்போமா :




சேரர் வரலாறு :

சேரர்கள்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.


எல்லைகள் :


சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.


மன்னர்கள் :
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.


நகரங்கள் :
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.

சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்[1] ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்

தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).


சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் :


சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.


உதியஞ்சேரலாதன் – கி.பி. 45-70 :
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்” என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி. 71-129 :
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.

முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105 :
பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி. 106-130 :

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


காலம் :
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.


செயல்கள் :
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.


சேரன் செங்குட்டுவன் – கி.பி. 129-184 :
சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

காலம்


பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள் :
தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை :

அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி. 123-148 :

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு “கோ ஆதன்” என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165 :
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.


இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180 :
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

குட்டுவன் கோதை – கி.பி. 184-194 :
குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.


சேரமான் வஞ்சன் :

சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.


மருதம் பாடிய இளங்கடுங்கோ :
மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.


சேரமான் கணைக்கால் இரும்பொறை :

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.


சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை :

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.