கிழக்கிலங்கையின் புரதான
இந்துக் கோயில்கள்
மட்டக்களப்பு மாவட்டம்
===================
மட்டக்களப்பு நகரின் வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் ஏறாவூர் எனும் பழைமை வாய்ந்த கிராம்ம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் எகுளப்பற்று என்றழைக்கப்பட்ட பகுதியின் தலைப்பட்டினமாக ஏறாவூர் விளங்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள 5 ஆம் குறிச்சி எனும் இடத்தில் பிரதான வீதியில் தென்மேற்குப் பக்கத்தில் வீரபத்திரா் ஆலயம் அமைந்துள்ளது.
வீரபத்திரா் ஆலயத்தின் அமைவிடம்
வடக்கு தெற்காக சுமார் 70 கி.மீ நீளத்துடன் ஒடுக்கமாகக் காணப்படும் மட்டக்கப்பு வாவியின் வட கோடியில் ஏறாவூர் கொம்பன் ஆலயம் அமைந்திருப்பது இதன் பண்டைய சிறப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. இவ்வாலயத்தின் வடக்கிலும் கிழக்கிலும் குடிருப்புகளும் தெற்கிலும் மேற்கிலும் வயல்கள் நிறைந்த மருத நலப்பரப்பும் காணப்படுகிறது. வயல்களை அடுத்து முகுந்தனை ஆற்றின்கிளை ஆறும் அதனை அடுத்து வயல்களுக்கு மத்தியில் முகுந்தனை ஆறும் காணப்படுகிறது. இவ் ஆறுகளும் கிளை ஆறுகளும் இப்பகுதிக்கு செழிப்பையும் வனப்பையும் கொடுத்து மட்டக்களப்பு வாவியில் காணப்படுகிறது.
சங்க இலக்கிய நூலான
சிறுபாணாற்றுப்படையில் ஏறு மாநாடு
சுமார் 2200 வருடங்கால சைவப் பாராம்பாரியத்தைக் கொண்ட ஏறாவூர் பகுதி பண்டைய காலங்களில் ஏறுமாவூர், ஏறுமாநாடு, ஏறுமாறாவூர், எகுளப்பற்று போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டுவந்துள்ளது. சங்ககால நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் நாகர்குலத்தைச் சேர்ந்த நல்லியக்கோன் எனும் நல்லியக்கோடான் என்ற சிற்றரசனால் ஏறுமாநாடு என்ற சிறப்புப் பெயரோடு ஆட்சி செய்யப்பட்ட இடமே இந்த ஏறாவூர் என அறிஞர்கள் கூறுகின்றனர். இன்றய ஏறாவூர் நகரின் வடபகுதியில் இருந்த இவ்விடம் அன்று காட்டுமாஞ்சோலை என கூறப்பட்டது. நிலத்தில் வெளிலே படாத இக்காட்டு மாஞ்சோலை பகுதி அமைந்திருந்த இடத்தில் தான் பத்திரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதன்படி சங்ககால சிற்றரசர்களின் தொடர்புடைய பகுதியாக ஏறாவூர் விளங்குவது இதன் தொன்மையான இந்து பாரம்பரியத்திற்கு மேலும் இவ்வூர் பண்டைய காலத்தில் வலிமை மிக்க நாகர் குலத்தவர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. நல்லியக் கோடன் மன்ன்னின் கொம்பன் யானை நீராடுவதற்கு கட்டப்பட்ட துறையே கொம்பன் துறையாகும். இன்று இது கொம்மாதுறை என அழாக்கப்படுகிறது.
2200 வருடகால பாரம்பரியம் மிக்க ஏறாவூர் வீரபத்திரா் வழிபாடு
ஏறாவூர் வீரபத்திரா் கோயில் சுமார் 750 வருடம் பாரம்பரியம் கொண்டது என குறிப்புகள் கூறுகின்றன. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மாகோன் மற்றும் குளக்கோட்டன் காலத்தில் இவ்வாலயம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது சுமார் 2200 வருடங்களுக்கு முன்பாக கூத்திக மன்னன் காலத்தில் ஸ்தாபிக்கபட்டிருக்கலாம் என நம்ப இடமுண்டு. கி.பி 2 நூற்றாண்டில் மகாசேன்னால் கிழக்கிலங்கைக் கரையில் 3 கோயில்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட மூன்று ஆலயங்களும் சிவாலயங்கள் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவை கோகர்ண என்னுமிடத்திலும் கலந்தனின் ஊரிலும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது கோகர்ணம் என்பது திருகோணமலை ஆகும். கலந்தனின் ஊர் பானமைக்கருகில் உள்ள சாஸ்திராவெளி என அடையாளம் காணப்பட்டுள்ளது ஏரக்காவில என்பது ஏறாவூர் எனவும் மகாசேனால் அழிக்கப்பட்ட ஆலயம் இந்த வீரபத்திரா் ஆலயமே எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன. அண்மைக்கால ஆய்வுகளின் படி ஏரக்காவில என்பது “எருவில்” என்னுமிடத்தில் களுவாஞ்சிக் குடிக்கருகில் உள்ள எருவில் போராதீவு எனவும், இங்கிருந்த ஓர் சிவாலயமே மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, ஏறாவூர் வீரபத்திரா் ஆலயத்தின் தொன்மையே இவ்வாறான ஓர் கூற்றுக்கு சான்று.
வீரபத்திரா் வழிபாடும் மழவர்களும்
ஏறாவூர் உள்ள வீரபத்திரா் வழிபாடு 2200 வருடங்களுக்கு முற்பட்ட பாரம்பரியம் கொணடது எனக் கூறுவதற்கு ஓர் முக்கிய காரணமுண்டு. மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறும் “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” எனும் நூலில் காணப்படும் சாதித் தெய்வக் கல்வெட்டில் ஒவ்வோர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய தெய்வங்களைகப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இதில் மழுவர் எனும் குலத்தவர்ளுக்கே வீரபத்திரா் எனக் கூறப்பட்டுள்ளது. வீரபத்திரருக்கு பூஐை செய்வனுக்கு மழவனே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் குறிப்பின்படி மழவர்கள் வாழ்ந்து வந்த இடங்களிலெல்லாம் வீரபத்திரருக்கு ஆலயம் கட்டி வழிபாடு நடத்திருக்க வேண்டும் எனக் கூறக் கூடியதாக உள்ளது. மழுவர்களை மழவர் குடி எனவும் அழைத்தார்கள். இவர்கள் புராதன காலத்து சேர நாட்டின் வன்னியர் மரபைச் சேர்ந்தவர்கள் எனவும் கிறிஸ்துவுக்கு பிட்பட்ட காலத்தில் தமிழகத்திலுள்ள கொம்பு நாட்டின் வழியாக காவேரியின் வடமேற்குக் கரையிலுள்ள அரியலூர், பெரம்லூர் போன்ற பகுதிகளில் குடியேறி விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் எனவும் தமிழக ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன. இவர்கள் சேர நாட்டின் பெரும் போர்வீரா்களாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி அகராதியிலும் இதே அர்த்ததில் மழவன் என்பதற்கு நகர்தாப்போன், அஞ்சாதவன், பிடித்ததை விடாதவன் எனும் பொருள் குறிப்பிட்டுள்ளது. அரியலூர் எனும் பண்டைய “அரிசின்” பகுதியில் வாழ்ந்த மழுவர்களின் வழிவந்த பாளையக்கார குறுநில மன்னர்கள் சுமார் 5 நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் என தமிழக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
கூத்திகன் காலத்தில் மட்டக்களப்புப் பகுதியில் குடியேறிய மழுவர்கள்
மிகப் புராதன காலத்தில் இம்மழுவர் குடியினர் மட்டக்களப்புத் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கி.மு 2 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தின் மன்னனான சேனனின் மகன் கூத்திகனே மகாவம்சம் குறிப்பின் படி இலங்கையின் இரணடாவது தமிழ் மன்னனாவன். இவனது ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்புப் பகுதியுடன் நெருங்கிய தொடர்பு இருந்த்தாக மட்டக்களப்பு மாம்யம் குறிப்பிடுகிறது. கூத்திகனின் ஆட்சிக் காலத்தின் போதே மட்டக்களப்பு பகுதியில் மழுவர் குலத்தவர்கள் முதன்முருதல் குடியமர்த்தப்பட்டார்கள் என நம்பப்படுகிறது. இதன் பின்பு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மகோன் காலத்திலும் மழுவர்கள் இங்கு வாந்தார்கள் என குறிப்புகள் கூறுகின்றன. மழுவர் குடியினர் மட்டக்களப்புப் பகுதிக்கு குடி வந்த கால அடிப்படையை வைத்துப் பார்க்கும் பொழுது ஏறாவூர் வீரபத்திரா் வழிபாடு முதன்முதலாக கி.மு 2 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்று, கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று, கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மகோன் காலத்தில் மேலும் செல்வாக்குடன் விளங்கிருக்க வேண்டும் எனக் கூறக் கூடியதாக உள்ளது. இவர்கள் இன்றும் பாணடிருப்பு, அக்கரைப்பற்று பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://epaper.thinakkural.com/ — in Eravur, Sri Lanka.