Saturday, July 28, 2012

திருவரங்கநாதனை(ஸ்ரீ ரங்கநாதர் ) காக்க தன்னுடைய 80 வயதில் போரிட்டு உயிர் துறந்த வன்னிய மன்னன் ஹொய்சாள நாட்டு வீரவல்லாள கண்டர்:



தென்னிந்தியாவின் விடுதலைப்போருக்கு வித்தாக நின்றது திருவரங்கன் என சொன்னால் பலருக்கும் அதிசயமாக இருக்கும்.ஆனால் உண்மை அதுதான்.

14ம் நூற்றாண்டு.சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்ந்த காலம். சோழர் ஆதிக்கம் கிட்டத்தட்ட ஒடுங்கி பாண்டியர் ஆதிக்கம் செலுத்திய காலம். அப்போது பாண்டியரிடையே மூண்ட உட்பூசலால் உடன்பிறந்த வியாதியாகவும், தமிழ்நாட்டின் கருங்காலியாகவும் பிறந்த வீரபாண்டியன் எனும் துரோகி தன் அண்ணன் சுந்தரபாண்டியனை அழிக்க அப்போது ஹொய்சாள நாட்டிற்கு (கர்னாடகா) படைஎடுத்து வந்திருந்த மாலிக்காபூரை தமிழ்நாட்டுக்கு அழைத்தான்.மாலிக்காபூரில் படைகள் தமிழகத்தில் நுழைந்தது. அதுவரை எத்தனையோ போர்களையும், ஆக்கிரமிப்பளர்களையும் கண்ட தமிழகம் தற்போது வந்த போர் வேறுவிதமானது என்பதை கண்டது.

மாலிக் காபூருக்கு அடுத்து 1325ம் வருடம் உலூக் கான் எனும் மன்னன் தமிழகம் மீது படை எடுத்தான்.உலூக் கான் தான் பின்னாளில் முகமது பின் துகளக் என அறியப்பட்ட மன்னன்.அவனை பெரும்பாலும் கோமாளி மன்னன் என தான் நாம் அறிவோம். ஆனால் உண்மையில் அவன் ஒரு சைக்கோவும், மெண்டலுமாவான்.அவன் தலைமையில் கிட்டத்தட்ட 10 லட்சம் படைகள் திருவரங்கநாதன் கோயிலை சுற்றி வளைத்தன.

அவனை எதிர்த்து நின்றது 30000 பேர் மட்டும் கொண்ட ஒரு படை. அதை படை என்றே சொல்ல முடியாது.அரங்கனை காக்க கையில் கிடைத்த கத்தி, அரிவாள்மனை ஆகியவற்றை ஏந்தி நின்ற திருவரங்க மக்கள் கூட்டம் அது. அவர்களில் பெரும்பாலானோர் அதுவரை தேஙகாயை உடைக்க மட்டுமே அரிவாள் ஏந்திய அந்தணர் சமூகத்தினர்.

திருவரங்கநாதனை காக்க அவர்கள் சில ரகசிய ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோயில் மூலவர் விக்ரகத்தின் முன் ஒரு சுவற்றை கட்டி (கல் திரை என்பார்கள்) அந்த சுவற்றுக்கு முன் ஒரு களிமண் சிலையை வைத்து விட்டனர். உடைத்தால் அதை உடைத்துக்கொள்ளட்டும் என்று. திருக்கோயில் உற்சவர் சிலை மிகவும் விஷேஷமானது. அதை பல்லக்கில் ஏந்திக்கொண்டு மதுரையை நோக்கி ரகசியமாக ஒரு கூட்டம் கிளம்பியது. அரங்கரின் 40 ஆண்டு வனவாசம் இப்படியாக துவங்கியது.

உலூக்கானின் படை திருவரங்க கோயிலை சுற்றி வளைத்தது. திருவரங்கத்தை அரை மணிநேரத்தில் பிடித்துவிடலாம் என்ற உலூக்கானின் கனவில் மண் விழுந்தது. அத்தனை வீரம் செறிந்த எதிர்ப்பை திருவரங்கத்து மக்கள் அவனுக்கு அளித்தனர். மதில் சுவர்களில் ஏறிய வீரர்கள் மீது காய்ச்சிய எண்ணை ஊற்றப்பட்டது. அம்புகள் சரமாரியாக பொழிந்தன.கடும் உயிரிழப்பு ஏற்பட்டது.

கடும்கோபமடைந்த உலூக்கான் முழு படைகளையும் திருவரங்கம் மீது ஏவினான். அதன் பின் நடந்தது போரே இல்லை. படுகொலை தான். கிடைத்த இடங்களில் திருவரங்க மக்கள் ஆண்,பெண், குழந்தை என இல்லாது வெட்டிக் கொல்லப்பட்டனர். உயிரோடு பிடிபட்ட பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 25,000 பேர் அன்று கொல்லப்பட்டிருப்பார்கள். அரங்கன் கோயில் முழுக்க சூறையாடி, கண்ணில் கண்ட விக்ரகங்களை உடைத்து போட்டு விட்டு உலூக்கானின் படை அடுத்து மதுரை நோக்கி நகர்ந்தது. அது நகர்ந்த இடமெங்கும் அழிவு தான். அலை, அலையாய் மக்கள் மதுரையை நோக்கி ஓடினர். மதுரையை அடைந்த உலூக்கானின் படைகளை சந்திக்க திராணியின்றி பாண்டிய மன்னர் புகுந்து ஓடிவிட்டார். மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்த உலூக்கான் தனக்கு முன் படை எடுத்த மாலிக்காபூர் செய்த அதே வேலையை செய்தான்.மதுரை முழுக்க சூறையாடி பெண்களையும், குழந்தைகளையும், பணத்தையும் கொள்ளை அடித்து விட்டு தன் தளபதி ஒருவனை சுல்தானாக்கி விட்டு டில்லி நோக்கி திரும்பினான்.

திருவரங்கன் உர்சவர் விக்ரகம் முழுக்க வைரமும், தங்கமும் உள்ளது என ஒரு தவறான தகவல் மதுரை சுல்தானுக்கு கிடைத்தது. அந்த சிலையை தேட பெரும்படையை அனுப்பினான். அரங்கரின் விக்ரகம் அப்போது மதுரை கள்ளழகர் கோயிலில் தான் இருந்தது. படை வந்ததும் அழகர் விக்ரகத்தை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி நோக்கி மீண்டும் தப்பி ஓடினர்.

புதிய சுல்தான் ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடப்பட்டு இருந்தது. திருப்பரங்குன்றத்தில் மசூதி கட்டப்பட்டது.தமிழகமெங்கும் கைபற்ற படைகள் கிளம்பின. திருநெல்வேலியில் பதுங்கி இருந்த அரங்கருக்கும் ஆபத்து வந்தது. அரங்கர் கன்யாகுமரிக்கு ஓடினார். அங்கும் படைகள் வர சேரநாட்டுக்கு அரங்கரை கொண்டு சென்றனர்.

அரங்கர் விக்ரகம் சேரநாடு சென்று அங்கிருந்து சத்தியமங்கலம், கோபி, பண்னாரி வழியாக கர்நாட்க மாநிலம் மேல்கோட்டைக்கு சென்றது. கர்நாடகாவை அப்போது ஆண்டவர் 80 வயது நிரம்பிய வீரவல்லாள கண்டர் எனும் மன்னர். அரங்கர் அனாதை போல் தன்முன் வந்து நின்றதை கண்டு அவர் கண்ணீர் விட்டார்.

அரங்கருக்கு நேர்ந்த அவலம் ஹொய்சாள மன்னர் வீரவல்லாள கண்டருக்கு தாள முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சளுக்க மன்னர்களின் வழிதோன்றல் அவர். 80 வயதான அந்த மாவீரர் பெரும்படை ஒன்றை திரட்டிக்கொண்டு திருவரங்கம் மீது படை எடுத்தார். வீரப்போர் புரிந்து தோல்வியுற்று பிடிபட்டார். அந்த 80 வயது மன்னரின் கண்கள் பிடுங்கப்பட்டு, உயிரோடு அவர் தோலுரிக்கப்பட்டார். அவரது தலை வெட்டப்பட்டு ஈட்டிமுனையில் சொருகப்பட்டது.