
நமது நாட்டை ஆலயங்களின் தேசம் என்றே சொல்லலாம். எல்லை தெய்வக் கோவில்கள், நடுகல் கோவில்கள் தொடங்கி வானளாவிய கோபுரங்கள் கொண்ட கோவில்கள் வரை பல்லாயிரக்கணக்கில் பரவிக் கிடக்கின்றன. பழமையும் பெருமையும் வாய்ந்த பிரம்மாண்டமான கோவில்கள் அக்கால மன்னர்களால் அமைக்கப்பட்டவையே.
பக்தியைக் கொண்டாடவும், வெற்றியின் காணிக்கை யாகவும் ஆலயங்களை அமைத்த மன்னர்கள், அதைக் கோட்டையாக அமைத்து பாதுகாப்பு அரணாகவும் பயன்படுத்தினர். அத்தகைய ஆலயங்களில் ஒன்று சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் ஆலயம்.
""கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு நடுநாட்டை ஆண்டுவந்தான்- காடவராயர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன். போரில் தான் பெற்ற வெற்றியை முன்னிட்டு அவன் இந்த சிவன் கோவிலை அமைத்தான்.
இறைப்பணி, அறப்பணிகள் செய்தும், நீதி தவறாமல் ஆட்சி புரிந்தும் புகழ் பெற்றுத் திகழ்ந்தான் கோப்பெருஞ்சிங்கன். கி.பி. 1231-ல் வந்தவாசி என்னுமிடத்தில் நடந்த போரில் மூன்றாம் ராஜராஜனைத் தோல்வியுறச் செய்த இவன், சோழனை சேந்தமங்கலம் கோட்டையில் அடைத்து வைத்தான். இதையறிந்த சோழனின் உறவினரான போசள மன்னன் பாண்டியரின் துணையோடு வந்து சோழனை மீட்டுச் சென்றான் என்பது வரலாறு'' என்கிறார்- இக்கோவிலையும் அதன் வரலாறையும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ராமஜெயம்.
இவ்வாலயத்துக்கு கிழக்கே கரிக்காலமர்ந்தம்மன், மேற்கே மழையம்மன், வடக்கே காட்டு மழையம்மன், தெற்கே துர்க்கையம்மன் ஆகியோருக் கும் ஆலயம் அமைத்திருக் கிறான் கோப்பெருஞ்சிங்கன்.
கி.பி. 1248-ல் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தெற்கு கோபுரத்தை உருவாக்கிய இந்த மன்னன், 1262-ல் சிதம்பரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள தில்லைக்காளி கோவிலையும் அமைத்தான் என்பர். திருவெண்ணெய் நல்லூர் பெருமாள் ஆலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்த இவன், திருவண்ணாமலையாருக்கு பத்து ஏக்கர் நிலமும், பொன்னாலான விளக்கையும் காணிக்கையாக்கியுள்ளான்.
மேலும் திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கு நூறு கழஞ்சு பொன்னும், விருத்தாச்சலம் பழமலைநாதர் ஆலயத்துக்கு திருமண மண்டபமும் கட்டிக்கொடுத்து திருப்பணி செய்துள்ளான்.
திருநறுங்குன்றம் என்னும் ஊரிலுள்ள மலையில் அப்பாண்டநாதர் கோவில் என்னும் சமண சமய ஆலயம் உள்ளது. அதற்கும் இந்த மன்னன் உதவி செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆதனூரில் பெருமாளுக்கும் சிவனுக்கும் அருகருகே ஆலயம் அமைத்து தீவிர சமயப் பணி ஆற்றியுள்ளான் கோப்பெருஞ்சிங்கன்.
சேந்தமங்கலம் சிவாலயத்திலுள்ள வானிலை கண்டீஸ்வரர் ஆபத்சகாயேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோப்பெருஞ்சிங்கனை பல ஆபத்துகளிலிருந்து காத்ததால் ஈசனுக்கு இப்பெயர் அமைந்ததென்பர். தற்போதும் தன்னை நாடிவரும் பக்தர்களின் ஆபத்துகளை நீக்கி திருவருள் புரிகிறார் இத்தலத்து சிவபெருமான். அம்மன் பிரகன் நாயகி என்னும் பெயரில் அருள்புரிகிறாள்.
இவ்வாலயத்தின் எதிரேயுள்ள திருக்குளத்தின் வடகரையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல் குதிரைகள் உள்ளன. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இந்தக் குதிரைகளையும் ஆலயத்தையும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் புனரமைப்பு செய்து வருகிறார்கள்.
முற்காலத்தில் இங்கே மிகச் சிறப் பாக விழா நடைபெறுமாம்.
அப்போது ஆலயத் திருவிழா என்றென்றும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பெற்றான் நாயக்கர் என்பவர் தன் தலையைத் தானே அறுத்து தன்னை பலியிட்டுக் கொண்டுள்ளார். இதையறிந்த அரசு அவரது குடும்பத்துக்கு விளைநிலங்களையும் பொன், பொருளையும் வழங்கிய தாம். நாயக்கர் பலியிட்டுக் கொண்ட இடம் உதிரப்பட்டி எனப் பட்டது. அந்தப் பெயரில் தற்போதும் ஒரு கிராமம் இருப்பது வியப்பான செய்தி.
""வரலாற்றுச் சிறப்புமிக்க எங்கள் ஊரை சுற்றுலா மையமாக்கி, பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்'' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பேத்.
""சமய நல்லிணக்கத்தைப் பேணிய கோப்பெருஞ்சிங்கன் அமைத்த இவ்வாலயத் துக்கு வந்து வழிபடுவோர், வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சியைக் காண்பார்கள்'' என்கிறார்கள் மோகனசுந்தரம் குருக்கள் மற்றும் வழக்கறிஞர் வீரபாண்டியன் ஆகியோர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை யொட்டி. திருச்சி கெடிலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இவ்வாலயம். மினி பஸ், கார், ஆட்டோ வசதிகள் உள்ளன
Thanks :
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13612