சமணத்தை மீட்க ஆதரவளித்த உடையார்பாளையம் மன்னர்.
கி.பி. 1478 இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் ‘துமால் கிருஷ்ணப்ப நாயகன்’ என்னும் பெயர் உண்டு. இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்டு ஆண்டு வந்தான்.
இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் வீரசேனாசாரியார் என்னும் பெயருள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். இதனைக் கண்ட அரச சேவகர் அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள்.
அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தபடியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதலை செய்து விட்டான். தமது தலைபோவது உறுதியென்று நம்பியிருந்த வீரசேனாசாரியார் விடுதலை செய்யப்பட்டபோது மறுபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் நேரே மைசூரிலுள்ள சிரவணபௌகொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அங்குச் சமண சமய நூல்களை நன்கு ஓதினார்.
செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக்கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார்பாளையம் குறுநில மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார்.
குறுநில மன்னர் இவருக்கு நிலபுலன்கள் அளித்து ஆதரித்தார். உடையார் பாளையத்தில் தங்கியிருந்த காங்கேய உடையார், சிலகாலங் கழித்து மைசூரில் உள்ள சிரவண பௌகொள மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியாரை அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்களை மீண்டும் சமண மதத்தில் சேர்ப்பித்தார். வீரசேனாசாரியார், சமண முறைப்படி அவர்களுக்குப் பூணூல் அணிவித்துத் தீக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார்.
காங்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாயனூரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம்பரையினராகையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செய்து வருகின்றனர்.
நன்றி :
சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கிடசாமி. பக்.109-110.